நிகழ மறுக்கும் அற்புதம்
"Being sexy comes from confidence and accepting your body and mind as a woman."
- Shruthi Haasan (in an interview to The Times of India, February 4, 2014)
இன்று திகதி ஜனவரி 28. ஷ்ருதி ஹாசனின் பிறந்த நாள். ('ஷ்ருதி'யை 'ஸ்ருதி' என்று தான் எழுதிக் கொண்டிருந்தேன், சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்க்கும் வரை. அவரே குத்திக் காட்டிய பின் திருத்திக் கொண்டு தானே ஆக வேண்டும்!)
கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக அவர் எனக்குப் பிடித்தமான நடிகை. (3 என்ற ஒரு படம் தவிர்த்து வேறு படங்களில் அவர் தன் நடிப்புத் திறனை அவ்வளவாய் வெளிப்படுத்தியதில்லை என்பதால் இங்கே நடிகை என்ற இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது சற்று நெருடலாகத் தான் இருக்கிறது. ஆனால் இன்றைய தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி வெகுஜனத் திரைப்படங்களின் நடிகைகளோடு ஒப்பிடுகையில் எவ்வகையிலும் குறைவில்லை என்பதால் அதைத் தொடர்கிறேன்)
ஷ்ருதியின் வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால் எல்லாமே மோதிரைக் கை குட்டுக்கள். ஆறு வயதில் முதல் பாடலே இளையராஜாவிடம் (தேவர் மகன் - போற்றிப் பாடடி பொண்ணே...). அப்புறம் யுவதியான பின்னும் முதல் பாடல் அவரிடமே (ஹே ராம் - ராம் ராம் & என் மன வானில் - ரோட்டோரப் பாட்டுச் சத்தம்...). ஷ்ருதியின் முதல் ஆல்பமான உன்னைப் போல் ஒருவனை வெளியிட்டதும் இளையராஜா தான் ("பெயரிலேயே ஷ்ருதி இருக்கிறதே! இசை எப்படி வராமல் போகும்?" என்று அந்த விழாவில் ராஜா பேசிய நினைவு). இப்போது சமீபத்தில் ஆசையைக் காத்துல தூது விட்டு பாடலை Shamitabh படத்தில் Stereophonic Sannata பாடலாக மறு ஆக்கம் செய்த போது ராஜா அழைத்தது ஷ்ருதியைத்தான்!
Luck தான் நான் பார்த்த முதல் ஷ்ருதி ஹாசன் படம் (பெயர் பொருத்தம் கனகச்சிதம் அல்லவா!). ஹே ராமிலேயே அவர் ஓர் ஓரமாய் நடித்திருக்கிறார் என்றாலும் அதெல்லாம் அப்போது தெரியாது. அப்போது Luck படத்தைப் பார்க்க ஷ்ருதியைத் தவிர வேறு காரணம் இருக்கவில்லை. அதற்கு சில காலம் முன் வாரணம் ஆயிரம் வெளியாகி இருந்தது. அதில் அடியே கொல்லுதே... பாடலைச் சிறப்பாகப் பாடி இருந்தார். அது ஒரு காரணம் (அந்தாண்டு என் திரைப்பட விருதுகளில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதினை அதற்கே கொடுத்திருந்தேன் - http://www.writercsk.com/2009/01/sarkar-film-awards-2008.html). இன்னொரு காரணம் என் ஆதர்சமான கமல் ஹாசன் மகள் என்பது. ஒரு மாதிரி நம்ம(வர்) வீட்டுப் பெண் feel.
கதாநாயகியாய் அறிமுகமான முதல் படத்திலேயே நீச்சல் குளத்திலிருந்து எழுந்து நடந்து வரும் பிகினி காட்சி. அது தவிர அந்தப் படத்தில் நடிப்பில் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இருந்ததாய் நினைவில்லை. ஆனால் அதை விட முக்கியமாய் ஒரு விஷயம் அப்படத்தில் இருந்தது. Aazma - Luck Is The Key பாடல். படத்தின் தீம் போல் ஆங்காங்கே வரும் அந்த ஐந்தரை நிமிடப் பாடலைப் பாடி இருந்தார் ஷ்ருதி. சலீம் - சுலைமான் இசையில் அது ஓர் அசத்தலான பாடல் (கொஞ்சம் காலம் அதை என் ஹலோ ட்யூனாக வைத்திருந்தேன், குரலுக்காகவும் இசைக்காகவும். இதுகாறும் நான் வைத்திருந்த ஒரே தமிழ் அல்லாத காலர் ட்யூன் அதுவே!). அதன் வீடியோவில் ஷ்ருதி ஹாசன் பாடி ஆடி இருப்பார். படத்தில் வந்த அந்த பிகினி காட்சியை விட இந்தப் பாடலில் தான் அவர் செக்ஸியாய் இருந்ததாய்ப்பட்டது எனக்கு.
அடுத்தது உன்னைப் போல் ஒருவன் இசை. அது ஓர் அற்புதம். கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களுமே அருமை (அதைப் பற்றி அப்போது ஒரு குறுவிமர்சனம் எழுதி இருந்தேன் - http://www.writercsk.com/2009/09/blog-post_08.html). ஆல்பத்தின் ஒரு பாடலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ப்ரோமோ வீடியோவிலும் (இயக்கம் அக்ஷரா ஹாசன் என்றார்கள்!) பிரபல ராப் பாடகர் ப்ளாஸே உடன் இணைந்து அவர் பங்களித்திருந்தார். நடனம் இல்லை எனிலும் அது வசீகரமாகவே இருந்தது.
அந்த 2008 - 2009 காலகட்டத்திலேயே இயல்பாய் தன் அடையாளம் இன்னதென அழுத்தமாக முத்திரை பதித்து விட்டார். இசையமைப்பாளர், பாடகி, நர்த்தகி, நடிகை, அழகி. இந்தியப் பெண்களில் மிகத் தனித்துவமான ஒரு கலவை. பஞ்ச கலவை. அவரது தந்தையே தசாவதாரம் திரைப்படத்தில் எழுதிய ஒரு வசனத்தில் வருவது போல் அழகிய சிங்கர்!
அதற்குப் பிறகு ஐந்தாண்டுகள் ஓடி விட்டது. இசையமைத்து, பாடி, ஆடி / நடித்து பாப் வீடியோ ஆல்பங்கள் வெளியிடும் திறமை அத்தனையும் ஒருங்கே அமைந்திருந்தும் இன்று வரை அவர் அதை செயல்படுத்தவில்லை. தெலுங்கு மசாலாப் படங்களிலும், இரண்டாம் நிலை இந்தித் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் அவரது பங்களிப்பு என்பது வெறும் உடலை மட்டும் பிரதானப்படுத்திய கவர்ச்சி நடனங்களாகவே இருக்கிறது. அல்லது சாதாரண நடிப்பு.
இந்த ஐந்தாண்டுகளில் அவரது சிறப்பான நடிப்புப் பங்களிப்பென 3 திரைப்படத்தை மட்டுமே குறிப்பிட முடியும் (அந்த ஆண்டின் சிறந்த நடிகை விருதை அவருக்குக் கொடுத்திருந்தேன் - http://www.tamilpaper.net/?p=7298). அவரது நடிப்பு சிலாக்கிப்படும் D-Day படம் இன்னும் பார்க்கவில்லை. பார்த்த வரை 7-ஆம் அறிவு, பூஜை எல்லாமே ஒரு நடிகையாய் அவர் மீதான எதிர்மறை விமர்சனங்களையே வெளிக்கொணர்ந்தன. தமிழ் உச்சரிப்பு சரிப்படவில்லை. இந்தியிலும் தெலுங்கிலும் ஓரளவு நன்றாகவோ டப்பிங் வைத்தோ சமாளித்துக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் இதெல்லாம் எதற்கு?
சாரு நிவேதிதா ஒருமுறை கமல் ஹாசனை நிகழ மறுத்த அற்புதம் என்றார். ஷ்ருதி ஹாசன் நிகழ மறுக்கும் அற்புதம்.
ஒரு வசீகரமான பாப் பாடகி உருவாவதை ஓர் அமெச்சூர் நடிகை அழித்துக் கொண்டிருக்கிறார். இந்தி, தெலுங்கு, தமிழ் என செழித்த வுட்களில் நடித்தால் பணம் கொழிக்கும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது நல்லது தான். நடிகைகள் இளமையை முதலீடு செய்தால் மட்டுமே சம்பாதிக்க இயலும். எல்லாம் சரி தான். ஆனால் ஷ்ருதி ஹாசன் என்பவரின் தனித்துவம்? அடையாளம்? சுயம்? நாளை வரலாற்றில் என்னவாக இடம் பெறப் போகிறார் ஷ்ருதி? பத்தோடு ஒன்று பதினொன்றாக இருக்கும் நடிகையாகவா? அல்லது இந்தியாவின் முதல் வெற்றிகரமான பாப் பாடகி என்கிற அந்தஸ்தா?
இந்தியாவில் தனி ஆல்பம் என்கிற விஷயம் வெற்றிகரம் இல்லை. பெரும் ஜாம்பவான்களான இளையராஜா, ரஹ்மான் போன்றவர்கள் கூட அரிதாக முயற்சிக்கும் விஷயமாகவே ஆல்பங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களிடமெல்லாம் இல்லாத ஒரு விஷயம் ஷ்ருதி ஹாசனிடம் இருக்கிறது. பெண் என்கிற கவர்ச்சி. அவரால் ஆடிப் பாடி ஒரு வீடியோ ஆல்பத்தில் நடிக்க முடியும். அதன் மூலமாக பாப் ஆல்பம் என்ற துறையையே இந்தியாவில் உருவாக்கிக்காட்ட இயலும்.
சேத்தன் பகத் வெகுஜன இந்திய ஆங்கில எழுத்துக்குப் புத்துயிர் அளித்ததைப் போல் தான் இது. ஷ்ருதி ஹாசன் இதில் வெற்றியைக் காட்டி விட்டால் பின்னணி இல்லாத பலரும் இதைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியும். அப்படி ஒரு புது சரித்திரத்தையே உருவாக்கும் potential இதில் உண்டு. Why This Kolaveri Di பாடல் போல் இந்திய பாப் பாடல்களை வைரல் ஆக்கலாம். (ஷ்ருதி அந்த வீடியோவில் இருந்ததே அதன் வெற்றிக்குக் காரணம் என ஒரு தியரி வைத்திருக்கிறேன்!)
இங்கே ஏற்கனெவே பாப் துறையில் இருந்தவர்கள் அவ்வளவாய் சாதிக்க முடியவில்லை. அலீஷா, ராகேஸ்வரி, சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, வசுந்தரா தாஸ் போன்றவர்கள் உதாரணம் (தற்போது நோரா ஜோன்ஸ் வெற்றிகரம் தான் என்றாலும் அவரை இந்தியராகப் பார்க்க முடியவில்லை). அந்த வெற்றிடத்தைத் தான் ஷ்ருதி ஹாசன் நிரப்ப முடியும் என்கிறேன்.
ஷ்ருதி ஹாசன் சாதாரணப் பின்னணியிலிருந்து வந்திருந்தால் இதெல்லாம் சிரமமாய் இருக்கலாம். ஆனால் அவர் கமல் ஹாசனின் மகள். தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று திரைப்பட உலகங்களிலும் ஐந்தாண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாய் இருந்து விட்டவர். இந்த இரண்டு விஷயங்களும் அவருக்கு ஏகப்பட்ட வலுவான தொடர்புகளை அளித்திருக்கும். அவற்றைப் பயன்படுத்தி இதைச் சாத்தியமாக்க முடியும். இடையில் தடை நிற்பது ஆர்வமும் முயற்சியும் மட்டுமே.
தன் தாயின் மண வாழ்க்கை முறிவுக்குப் பின் அவர் நடித்துப் பொருளீட்டி வாழ வேண்டி இருப்பது, விஸ்வரூபம் பிரச்சனையின் போது தன் தந்தை வீட்டை விற்க வேண்டிய நிலை இருந்தது ஆகியவற்றை எல்லாம் உடனிருந்து பார்த்தவர் என்ற அனுபவங்களின் அடிப்படையில் ஷ்ருதிக்கு பணம் என்பது முக்கிய விஷயமாகத் தென்படலாம். ஓர் எல்லை வரை அதை மறுப்பதற்கும் இல்லை. அதனால் நடிப்பைக் கை விட வேண்டியதே இல்லை. ஆனால் அது போக தன் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள, ஆண்டுக்கு ஓர் ஆல்பம் என்ற ரீதியிலாவது இதனை முயற்சிக்கலாம்.
இன்று அவருக்கு 29 வயது பூர்த்தியாகிறது. வாழ்த்துக்கள். ஆரோக்கியம், மகிழ்ச்சி, நிம்மதியுடன் நூற்றாண்டு வாழ்க!
இந்தியர்கள் பொதுவாய் 40 வயதடைந்த பெண்களை உடல்ரீதியாய் ரசிப்பதில்லை. டிவி சீரியல்களுக்கோ தொழிலதிபர் மனைவிக்கோ சிபாரிசு செய்து விடுகிறார்கள். அந்த வகையில் ஷ்ருதிக்கு இன்னும் ஒரு தசாப்தமே மிச்சமிருக்கிறது. அதற்குள் அவரது தனித்துவத்தை அவர் எழுதியாக வேண்டும். நாளை தன் கலைப்பாதையைத் திரும்பிப் பார்க்கையில் சுயதிருப்தி வேண்டாமா! (இக்கட்டுரையை தமிழ், ஆங்கிலம் தெரிந்த எவரேனும் அவருக்கு பெயர்த்துச் சொல்லுங்கள்).
மடோன்னா, ஷகிரா, ப்ரிட்னி ஸ்பியர்ஸ், லேடி காகா, கேட்டி பெர்ரி, செலீனா கோம்ஸ், அடிலே, ரிஹான்னா, ஜெனிஃபர் லோபஸ், நோரா ஜோன்ஸ் போல் ஷ்ருதி ஹாசனும் பாப் இசைத் துறையில் சர்வதேச அளவில் புகழ் பெற வேண்டும். ஃபிலிம்பேர் விருதுகளுடன் க்ராம்மி விருதுகளையும் ஷ்ருதி ஹாசன் அள்ளிக் குவிக்க வேண்டும் என்பதே என் அவா.
*
ஷ்ருதி ஹாசன் இசையமைத்த படம்:
ஷ்ருதி ஹாசன் பாடிய சில பாடல்கள்:
- ராம் ராம் (ஹே ராம்)
- ரோட்டோரம் (என் மன வானில்)
- அடியே கொல்லுதே (வாரணம் ஆயிரம்)
- எவன் இவன் (உதயன்)
- ஏலேலமா (7 ஆம் அறிவு)
- சொக்குப் பொடி (முப்பொழுதும் உன் கற்பனைகள்)
- கண்ணழகா (3)
- Shut Up Your Mouth (என்னமோ ஏதோ)
- உன் விழிகளில் (மான் கராத்தே)
- Stereophonic Sannata (Shamitabh)
- Pathikella Sundhari (Balupu)
- Cinema Choopistha Mava (Race Gurram)
- Pimple Dimple (Yevadu)
- Junction Lo - Aagadu
- Madamiyan (Tevar)
Comments
:))
எனக்கும் அந்த ’உல்லம் துல்லுமா’, ‘வெல்லம் அல்லுமா’ உறுத்தல் தவிர்த்து, அற்புத குரலழகி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.