INTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்


காலமே வெளி!
இன்று கண்டது
நேற்றையது,
இன்றையது நாளைக்கு.
இக்கணத்தின் கரையைத்
தீண்டாத‌
இப்புதிய புவனத்தின் பிரவாகம்
வேறொரு பரிமாணத்தில்.

- பிரமிள் (E=mc2 கவிதையிலிருந்து, 1972)

நான் அதிகம் ஆங்கிலப் படங்களோ உலகப் படங்களோ பார்ப்பவனில்லை. IMDb Top 250 பட்டியலில் அதிகபட்சம் நான் 10 படங்கள் பார்த்திருந்தாலே பெரிய விஷயம். அவ்வப்போது ஆஸ்கர் விருதுப் பட்டியலில் அடிபடும் சிலவற்றை மட்டும் பார்ப்பது வழக்கம் (உதா: Life of Pi, Zero Dark Thirty, Gravity, Her). இவை எல்லாவற்றுக்கும் மேலாய் நான் பார்க்கும் முதல் கிறிஸ்டோஃபர் நோலன் படம் INTERSTELLAR. இதில் ஆர்வம் ஏற்படக் காரணம் சில மாதங்களுக்கு முன் இது wormhole-ஐ அடிப்படையாகக் கொண்ட படம் எனக் கேள்விப்பட்டது தான். சார்பியல் (Relativity) போன்ற சிக்கலான விஞ்ஞானங்களை குழப்பாமல் எப்படி திரையில் காட்சிப்படுத்தி இருக்க‌ முடியும் என்ற வியப்பில் பிறந்த மிக எளிமையான ஆர்வமே அது!


கொஞ்சம் சுயபுராணம். சார்பியல் கொள்கை எனக்கு அறிமுகமானது மூன்று படிநிலைகளில். முதன் முதலில் 15 வயதில் சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்தின் வழியாக. அதன் பிறகு 11ம் வகுப்பு படிக்கையில் தமிழ்நாடு பாடநூற்கழக இயற்பியல் புத்தகத்தின் மூலமாக‌. கடைசியாய் என் 10ம் வகுப்பு இயற்பியல் ஆசிரியர் ச‌ண்முகசுந்தரம் வழிகாட்டுதலில் கிட்டிய  Robert Resnick, Jearl Walker & David Halliday ஆகியோர் எழுதிய‌ Fundamentals of Physics புத்தகம் வாயிலாக‌. சார்பியல் குறித்த‌ பல விஷயங்கள் துல்லியமாகப் புரியவில்லை தான் (இப்போதும்) என்றாலும் அது இயற்பியலின் மீது தீராத‌ போதையைக் கிளர்த்தியது. ஒரு கட்டத்தில் 12ம் வகுப்பு முடித்ததும் பிட்ஸ் பிலானியில் ஐந்தாண்டு M.Sc., இயற்பியல் படிப்பில் சேரும் ஆசை கூட கொஞ்சம் நாள் இருந்தது. பிற்பாடு புரட்சி செய்யாமல் ஊருடன் ஒத்து வாழ பொறியியல் சேர வேண்டியதாயிற்று. ஆனாலும் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் புத்தகங்கள், Scientific American என அவ்வப்போது சார்பியலின் மீதான பிரேமை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. அது தான் INTERSTELLAR எதிர்பார்ப்புக் காரணத்தின் முன்கதை.

படம் எனக்கு மிகப் பிடித்திருந்தது. Theoretical Physics-க்கு உருவமளித்ததில் இது ஒரு முக்கியமான‌ சாதனை. அந்த உந்துதலில் மீண்டுமொரு முறை படத்தைப் பார்த்துத் திரும்பிய கையோடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இதை விமர்சனம் என்று எடுப்பதை விட இந்தப் படத்தை எப்படி அணுகினேன் என்ற அனுபவக் குறிப்பாகக் கொள்வதே சரி.

முடிவை முதலிலேயே சொல்லி விடுகிறேன். பிறகு பின்னோக்கிப் போகலாம். INTERSTELLAR - MUST MUST MUST WATCH!

*

இது முழுக்க விஞ்ஞானப் படம் என்றும், முழுக்க மனிதம் பற்றிய படம் என்றும் இரு வேறு தரப்புகளைக் காண்கிறேன். உண்மையில் இது something in between, consciously. இன்னும் சொன்னால் இரண்டையும் கச்சிதமாக இணைத்துப் பின்னி மிகச் சுவாரஸ்யமாக‌ முன்வைக்கிறது. நானறிந்த வரை ஹாலிவுட்டில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பாணி இது. ET, Jurassic Park ஆகியவற்றில் இதைத் தான் செய்தார். நோலனும் அதையே செய்திருக்கிறார். ஒரே வித்தியாசம் அவற்றில் இருப்பதை விட இது சற்று அடர்த்தியாய் விஞ்ஞானம் பேசுகிறது. அதுவே இந்த‌ப் படத்தைத் தனித்துவமாக்குகிறது.

மனித குலத்தை வழிநடத்துவதே (தர்க்கத்துடன் ஒட்டிய) உள்ளுணர்வுகள் தாம் என்பதே படம் சொல்லும் செய்தி. மர்ஃப் கடிகாரத்தில் தகவல் இருப்பதைக் கண்டறிவதும், அமேலியா எட்மண்ட்ஸ் கிரத்துக்குப் போக நினைப்பதும் அப்படித்தான்.

INTERSTELLAR படத்தின் திரைக்கதையை வழக்கம் போல் தன் சகோதரர் ஜோனதன் நோலனுடன் இணைந்து எழுதியுள்ளார் கிறிஸ்டோஃபர் நோலன். முதல் பாதியில் கதைப்போக்கில் தொடர்ச்சியாய் விழும் முடிச்சுகள்; இரண்டாம் பகுதியில் தாங்கள் தலைசிறந்த முடிச்சவிக்கிகள் என்பதை நிரூபிக்கிறார்கள் நோலன் சகோதரர்கள். விண்வெளி பற்றிய படம் தான் என்றாலும் Gravity போல் வறட்சியாக அல்லாமல் Speed போன்ற ஒரு டிபிகல் ஹாலிவுட் மசாலா படத்துக்கு இருக்க‌ வேண்டிய அதிவேகமும் சுவாரஸ்யமும் படத்தில் தெறிக்கிற‌து. அதே சமயம் Gravity அளவுக்கு இது மாபெரும் visual treat அல்ல என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். காரணம் அதற்கான போதுமான‌ வாய்ப்போ தேவையோ இதில் இல்லை.

கால விரிவை (Time Dilation) அடிப்படையாகக் கொண்டு பல விஞ்ஞானப் புனைவுகளும், கவிதைகளும் எழுதப்பட்டு விட்டன. உதா: A. H. Reginald Bullerன் லிமெரிக் (There was a young lady named Bright, / Whose speed was far faster than light; / She started one day / In a relative way, / And returned on the previous night.) மற்றும் சுஜாதாவின் விளையாட்டு (ஐன்ஸ்டைனின் தியரி சரியென்றால் / இக்கவிதையை நாளை துவங்கி / நேற்று முடிக்கலாம்.). INTERSTELLAR-க்கு நெருக்கமான ஒரு சிறுகதை தமிழில் உண்டு. சேவியர் எழுதிய ஏலி ஏலி லெமா சபக்தானி (http://xavi.wordpress.com/2006/12/01/eloeeloe/).

ஆனால் இவற்றில் எல்லாம் இருந்து INTERSTELLAR முக்கியமான தளத்தில் முற்றிலும் வேறுபடுகிறது. மற்றதில் எல்லாம் கால விரிவின் விளைவுகளை வைத்தே படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். INTERSTELLAR-லும் அது உண்டு தான். ஆனால் அதைத் தாண்டி இதில் கால விரிவு எப்படி நடக்கிறது என அறிவியல்பூர்வமாய் அணுக முயன்றிருக்கிறார்கள்.

*

படத்தைப் புரிந்து கொள்ள நாம் விண்வெளி மற்றும் இயற்பியலின் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் கால விரிவு என்றால் என்ன? எளிமையாகச் சொன்னால் காலம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்காது. எப்படி நம் உடல் எடை வெவ்வேறு கிரகங்களிலும் அதனதன் ஈர்ப்பு விசை காரணமாக மாறுபடுகிறதோ அதே போல் காலமும் மாறுபடும். ஆனால் ஈர்ப்பு விசையும் எடையும் போல் இந்த வித்தியாசமானது அத்தனை நேரடியானதோ எளிதில் உணரக்கூடியதோ அல்ல. இதை ஐன்ஸ்டைன் தன் சார்பியல் கொள்கைகளில் (Relativity Theories) விளக்குகிறார்.

இது போல் காலம் விரிய இரண்டு சந்தர்ப்பங்கள் உண்டு: 1) இரு வேறு வேகங்களில் நகரும் பொருட்களுக்குள் காலம் வேறுபடும் என்கிறது சிறப்பு சார்பியல் கொள்கை (Special Relativity). இதை சார்பியல் வேக கால விரிவு (Relative Velocity Time Dilation) என்கிறார்கள். அதாவது அதிவேகமாக நகரும் ஒரு பொருள் கால விரிவை உணரும். பூமியில் இருக்கும் காலத்தை விட விண்வெளியில் அதிவேகத்தில் நகரும் ஒரு விண்கலத்தில் இருப்பவர்களுக்கு காலம் மெல்ல நகரும். ஒளி வேகத்தின் அருகில் சென்றால் காலத்தில் பின்னோக்கிப் போகலாம் எனும் புனைவுகள் இதை ஒட்டியவை தாம்.

அடுத்தது 2) இரு வேறு ஈர்ப்பு விசைகளுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் காலம் வேறுபடும் என்பது பொதுச் சார்பியல் கொள்கை (General Relativity). இதை ஈர்ப்பு விசை கால விரிவு (Gravitational Time Dilation) என்கிறார்கள். அதாவது அதீத ஈர்ப்பு விசையின் கீழ இருக்கும் பொருள் கால விரிவைப் பெறும். மிக அதிக ஈர்ப்பு விசைக்கு ஆட்பட்டிருக்கும் ஒரு கிரகத்தின் காலம் பூமியில் இருக்கும் காலத்தை விட மெல்ல நகரும். அந்த கிரகத்தில் ஒரு மணி நேரம் கழியும் போது இங்கே ஏழாண்டுகள் கடந்து விட வாய்ப்புண்டு! இதைத் தான் INTERSTELLAR படத்தில் அழகாக‌ எடுத்தாண்டிருக்கிறார்கள்.

(விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் அஸ்ட்ரோநட்கள் பூமி திரும்புகையில் விண்வெளியில் இருந்த காலத்துக்கு இணையாய் அவர்களுக்கு வயது கூடாமல் மெல்லிய வேறுபாடு இருப்பதற்கு மேற்சொன்ன இரண்டுமே காரணம்.)

அடுத்தது அண்டவெளிப் புழுத்துளை (Wormhole). ஐன்ஸ்டைன் - ரோஸன் ப்ரிட்ஜ் என்பது இதன் அறிவியல் பெயர். இதுவரை நிரூபிக்கப்படாத, தற்போதைக்கு சித்தாந்தப்பூர்வமான விஷயம் இது. துளை என்று பெயர் இருந்தாலும் அது இரட்டைப் பரிமாணத்தில் சித்தாந்தத்தை எளிதில் விளக்க வைக்கப்பட்ட பெயர் மட்டுமே. மற்றபடி புழுத்துளை என்பது ஒரு கோளம். பிரம்மாண்ட கோளம். இதற்கு இரு முனைகள் இருக்கும். மிக மிகத் தொலைவே இருக்கும் இரு வேறு இடங்களுக்கு, இரு வேறு காலங்களுக்கு இது சுருக்கு வழி. மிக மிகத் தொலைவு என்றால் கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகள். அதாவது ஒளி வேகத்தில் பயணித்தாலே கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகி விடும் அந்த இரு இடங்களுக்கு மத்தியிலான தூரத்தைக் கடக்க‌. புழுத்துளை இந்தப் பிரச்சனையைத் தீர்க்க உதவும். புழுத்துளையின் ஒரு முனையில் நுழைந்தால் கொஞ்ச‌ம் நேரத்தில் அடுத்த முனையை அடைந்து விடலாம். அதாவது கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகள் தூரத்திலிருக்கும் ஓரிடத்தை சில மணித்துளிகளில் கடக்கும் சூட்சமம். இந்த விஷயத்தை படத்தில் ஒரு காட்சியில் ரோமில்லி என்ற இயற்பியலாளர் பாத்திரம் மிக அழகாக விளக்குகிறது. இது இயற்கையாக உருவாகாது. உருவாக்க வேண்டும். படத்தில் எதிர்கால அதிஅறிவுஜீவி மனிதர்கள் தற்கால மனிதர்களுக்கு உதவ இதை உருவாக்குகிறார்கள்.

இன்னொன்று கருந்துளை (Black hole). கருந்துளை என்பது விண்வெளியில் நிஜத்தில் இருக்கும் சில இடங்கள். எரிந்து முடிந்து சக்தி தீர்ந்த ஒரு நட்சத்திரமே தன்னைச் சுற்றி இருக்கும் விஷயங்களை ஈர்த்துத் தின்று செரித்து கருந்துளை ஆகி நிற்கிறது! மிக மிக அதீத ஈர்ப்பு விசை கொண்டவை இவை. அவற்றுக்குள் நுழைந்த எதையும் அது வெளியே விடாது, ஒளி உட்பட. அதன் ஈர்ப்புக்குள் நுழையும் எல்லைக் கோட்டை Event Horizon என்கிறார்கள். நம் கேலக்ஸியான பால்வழி மண்டலத்திலேயே (Milky Way) 43 லட்சம் சூரியன்களுக்கு இணையான எடை கொண்ட ஒரு பிரம்மாண்ட கருந்துளை இருக்கிறது. கருந்துளைகளின் மையத்தில் ஈர்ப்பு விசை ஒருமை (Gravitational Singularity) என்றொரு விஷயம் இருக்கிறது. பொதுச் சார்பியல் கொள்கை இதை விளக்குகிறது. படத்தில் இரண்டு விதமாக கருந்துளை பயன்பட்டிருக்கிறது. ஒன்று அதீத ஈர்ப்பு விசையை ஏற்படுத்தி கால விரிவை ஏற்படுத்துவதற்கு (மில்லர் கிரகத்தில் கூப்பருக்கும் அமேலியாவுக்கும் நடப்பது இது தான்). அடுத்து மனிதகுலத்தை புதிய‌ கிரகத்துக்கு இடம்பெயர்க்க ஒரு சமன்பாட்டுப்புதிரை (Equation) அவிழ்க்க வேண்டும், அதற்கு கருந்துளையின் மையத்திலிருக்கும் ஒருமை பற்றிய தகவல்கள் தேவை என்ற வகையில்.

கடைசியாய் ஐந்து பரிமாண உலகம் (Five-Dimensional Space). நம்முடையது நான்கு பரிமாண உலகம். முப்ப‌ரிமாண வெளி மற்றும் நான்காம் பரிமாணமாய் காலம். இங்கே நாம் காலத்தின் துணையுடன் முப்ப‌பரிமாண வெளியில் உலவுகிறோம். இதில் காலம் நம்முடன் நகருமே ஒழிய காலத்தில் முன்போ பின்போ நாம் பயணிக்க இயலாது. நம்மால் காண முடிந்தது நிகழ்காலம் மட்டும் தான். ஆனால் ஐந்து பரிமாண உலகத்தில் வெளி - காலம் (Spacetime) சேர்ந்த நான்கு பரிணாமத்திலும் உலவ‌ முடியும். அதாவது காலத்திலும் முன்பும் பின்பும் பயணிக்கலாம். ஈர்ப்பு விசை விளையாட்டுகளின் வழியே ஒரு மிக முன்னேறிய எதிர்கால‌ மனித இனத்துக்கு இந்த வித்தை சாத்தியம் என்பது தான் நோலன் சகோதர்களின் கற்பனை.

*

சந்தேகமில்லாமல் திரைக்கதை தான் படத்தின் ஹீரோ. கோட்பாட்டு அறிவியலை உயிரூட்டி திரையில் உலவ விட்டது தான் படத்தின் பெரிய பங்களிப்பு. ஆனால் அதைத் தாண்டி படம் முன்வைக்கும் மனித உணர்வுகளும் முக்கியமானவை. உயிர் வாழும் இச்சை எவ்வளவு பெரிய ஆளையும் மோசமான கீழ்மை செய்ய வைக்கும் என்பது தொடங்கி ஒரு சிறுமி உயிரற்ற ஒரு தானியங்கி சூரிய சக்தி விமானத்தின் (Solar Drone) மீது காட்டும் பரிவு, எட்மண்ட்ஸ் கிரகம் போகலாம் என்று கோரக் காரணம் சரியான உள்ளுணர்வா, காதலின் மேலீடா எனப் புரியாமல் தவிக்கும் அமேலியா, TARS என்ற ரோபோவுடன் கூப்பர் பல இடங்களில் பேசும் வசனங்கள், மனித இனத்தைக் காப்பாற்ற டாக்டர் ப்ராண்ட் இறுதி மூச்சு வரை நிகழ்த்தும் போராட்டமும் குற்ற உணர்வும், கூப்பர் - மர்ஃப் இடையேயான‌ தந்தை மகள் உறவுப் புணைப்பு மற்றும் புரிதல் (யோசித்துப் பார்த்தால் அந்தப் புரிதலை நம்பித் தான் மொத்த படமுமே!). Saluting Nolan brothers for everything!

டைலன் தாமஸின் கவிதை வரிகள் (Do not go gentle into that good night, / Old age should burn and rave at close of day; / Rage, rage against the dying of the light.) மொத்த மனித குல அஸ்தமனத்துக்கெதிரான‌ போராட்டத்துக்கான குறியீடாகி உள்ளது!

இன்னொரு வினோத விஷயம் - எனக்கு INTERSTELLAR படம் வலுவாய் ராமின் தங்க மீன்கள் படத்தை நினைவூட்டியது. படத்தின் ஆரம்பக் காட்சிகள், அதில் கூப்பருக்கு வெளிப்படும் மர்ஃபின் மீதான அன்பு, பள்ளிக்கூடத்தில் ஆசிரியையுடன் மர்ஃபுக்காக சண்டை இடுதல் என் எல்லாமும். செல்லம்மாவுக்கு குளமும் தங்க மீன்களும் போல் மர்ஃபுக்கு அவள் அறையும் ஆவியும், வோடஃபோன் நாய்க்குட்டி போல் சமன்பாட்டுப் புதிருக்கான தகவல். மர்ஃப் மீதான அன்பிலேயே, அவள் தலைமுறையைக் காக்கவே கூப்பர் Endurance விண்வெளிப் பயணத்துக்கு ஒப்புக் கொள்கிறான் என்பது ஒருபுறம், இன்னொருபுறம் முன்னேறிய எதிர்கால மனிதர்கள் பூமியைத் தொடர்பு கொள்ள கூப்பரைத் தேர்ந்தெடுக்கக் காரணமே அவனுக்கும் மர்ஃபுக்கும் இடையே இருக்கும் அன்பும் புரிதலும் தான். எல்லாவற்றுக்கும் மேலாக பூமி திரும்பும் கூப்பர் வயதான நூறு வயதை நெருங்கும் மர்ஃபைப் பார்க்கிறான். இருவரும் பரஸ்பரம் கரம் பற்றிக் கொண்டு பேசுகையில்:

"அப்பா, நீ நிச்சயம் திரும்ப வருவாய் எனத் தெரியும்."
"எப்படி?".
"திரும்ப வருவேன் என்று என் தந்தை என்னிடம் சொல்லிச் சென்றாரே!"

*

திரைக்கதைக்கு அடுத்து படத்தில் சிலாகிக்கத் தகுந்த விஷயமாக இருப்பது ஹான்ஸ் ஸிம்மரின் பின்னணி இசை. இது கொஞ்சம் இந்தியத்தனத்துடன் இருப்பதாகத் தோன்றுகிறது. குறிப்பாக விண்வெளிப் பயணக் காட்சிகள் எல்லாவற்றிலும் வரும் தீம் இசை மிக அற்புதமாய் அமைந்திருக்கிறது. உண்மையாகவே இந்த ஆள் அந்த ஊர் இளையராஜா தான்!

பிரதானப் பாத்திரங்கள் ஏற்றிருக்கும் மேத்யூ மெக்கொனௌகே (கூப்பர்), ஆன்னி ஹேத்தவே (அமேலியா) இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கால விரிவின் காரணமாக பூமியில் 23 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் குடும்பத்தார் அனுப்பிய வீடியோக்களைக் காணும் மேத்யூவின் நடிப்புக்கு ஒரு பலத்த கைதட்டல். ஆன்னி புன்னகைத்தாலே போதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்களை விட மிகப் பிடித்தது சிறுவயது மர்ஃபாக வரும் மெக்கென்ஸி ஃபாய் தான். சந்தோஷம், குழப்பம், பயம், கோபம், சோகம் என அவளது வெவ்வேறு முகபாவங்களிலும் அத்தனை உயிர்ப்பு!

ஐந்தாம் பரிமாணக் காட்சியில் பல‌ பாத்திரங்களை / இரு காலங்களை மாற்றி மாற்றிக் காட்டும் எடிட்டிங் பிரமாதமாக வந்திருக்கிறது. மில்லர் கிரகத்தில் நீர் சூழ் காட்சிகள் அனைத்தும் ஒளிப்பதிவின் பேரழகு - குறிப்பாய் அந்தப் பேரலை!

*

சம்மந்தமில்லாத / முக்கியமும் இல்லாத‌ ஒரு குறிப்பு: அந்த ஐந்தாம் பரிணாமக் காட்சி 12B படத்தை நினைவுபடுத்தியது - அதில் ஜோதிகாவுடன் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஷாமை பின்புறமிருந்து ஷாமே பார்ப்பாரே. அது சாதாரணக் காட்சி தான், தவிர அதில் சார்பியல் எல்லாம் இல்லை தான். ஆனாலும் அடிப்படைக் காட்சி ஒற்றுமையின் காரணமாக‌!

மற்றுமொரு random thought: படத்தில் ரத்தம் இல்லை, சுத்தமாய் செக்ஸ் இல்லை (ஒரு ஹெல்மெட் முத்தம், ஓர் அரை முத்தம் தவிர‌). ஆனாலும் ஏன் இந்தியாவில் U/A தணிக்கைச் சான்றிதழ்? பெரியவர்களின் அறிவியல் வழிகாட்டுதலுடன் குழந்தைகள் காண வேண்டும் என்கிறார்களா! (on serious note, பூமி இப்படி ஆகி விடும் எனக் குழந்தைகள் பயப்படலாகா?)

இன்னுமொன்று: படம் பார்த்தவர்களுக்கும் பார்க்கவே போகாதவர்களுக்கும் என உத்தேசித்து படத்தின் detailed கதையை spoiler என்ற முன்னறிவிப்புடன் இப்பதிவில் சேர்க்க நினைத்தேன். ஆனால் இதுவே நீளமாகி விட்டதால் முதல் பாதி வரை எழுதியிருந்த அதை நிறுத்தி விட்டேன். முதல் பத்தியை மட்டும் இங்கு தருகிறேன். எதிர்பார்ப்பு பொருத்துத் தொடரலாம்.

எதிர்காலத்தின் ஏதோ ஒரு காலம். ஒரு தர்க்கக் கணக்கீட்டில் 2040ம் ஆண்டு என வைத்துக் கொள்கிறேன். பூமி மனித இனம் வாழ லாயக்கற்றதாக ஆகி விடுகிறது. அடிக்கடி புழுதிப் புயல் வீசுகிற‌து. எப்போதும் தூசு விழுந்து கொண்டே இருக்கிரது. டம்ளர், தட்டு என எதையும் நேராய் வைக்க முடியாத அளவு தூசு. ஒரு விதக் கருகல் நோயால் எந்த விவசாயமும் சாத்தியமற்றதாக ஆகி விடுகிறது. அமெரிக்காவில் கோதுமை எல்லாம் போய் மக்காச்சோளத்தை உண்டு வாழ்கிறார்கள். எல்லோரும் சுயவிவசாயம். செல்ஃபோன் இல்லை, டிவி இல்லை. விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம் இவற்றுக்கு எல்லாம் பணம் செலவழிப்பது நின்று போய் உணவு மட்டுமே பிரதானம் ஆகி விடுகிறது.

கடைசியாய் ஒன்று: நாசாவின் இடம் பற்றிய குறிப்பை அளித்து விட்டுப் பின் போக வேண்டாம் என கூப்பர் ஐந்தாம் பரிணாமத்திலிருந்து ஏன் சொல்கிறான்? என ஒருவர் ட்விட்டரில் கேட்டிருந்தார். படைப்பில் எந்தப் பிழையும் இல்லை. பார்வையாளரின் கவனப் பிழையே. உண்மையில் அது INTERSTELLAR திரைக்கதையின் ஒரு brilliant scene sequence.

இது கதையின் முக்கிய திருப்பத்தின் spoiler. படம் காணாதவர்கள் Please avoid. கூப்பர் ஐந்தாம் பரிணாமத்துள் நுழைந்து காலத்தில் பின்னோக்கி வந்ததும் அவன் காணும் முதல் காட்சியே கூப்பர் மர்ஃபை விட்டுப் பிரிந்து Endurance மிஷனுக்குக் கிளம்புவது தான். அதைத் தவிர்க்க "STAY" என்று மோர்ஸ் கோடில் மர்ஃபுக்குச் செய்தி சொல்கிறான். ஆனால் உடனேயே TARS ரோபோ அவனைத் தொடர்பு கொள்கிறது, கடந்த காலத்தை மாற்ற நாம் இங்கே வரவில்லை என்கிறது. ஒருமை குறித்த தகவல்களை பூமிக்குச் சொல்லவே தான் வரவழைக்கப்பட்டிருக்கிறோம் என்பது கூப்பருக்குப் புரிகிறது. அதனால் அவன் காலத்தில் மேலும் பின்னோக்கிப் போகிறான். மர்ஃபின் அறையில் நாசாவின் இருப்பிடத்தின் Co-ordinates-ஐ பைனரி எண்களாக தரைப் புழுதியில் எழுதி வைக்கிறான். அது தான் உண்மையில் Endurance பயணத்தின் ஆரம்பப்புள்ளி. எதிர்காலத்திருந்து வந்த கூப்பரே அதைத் தொடக்கி வைக்கிறேன். நிகழ்காலத்தில் கூப்பரே அதில் பயணிக்கிறான்.

*

ஆங்காங்கே அரைகுறையான‌ தர்க்கக் கேள்விகள், ஆர்வக்கோளாறான விஞ்ஞானக் கேள்விகள் எழுவதைக் காண்கிறேன். INTERSTELLAR படத்துக்கு அறிவியல் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்தவர் கிப் தார்ன் என்ற சித்தாந்த இயற்பியலாளர். இன்றைய தேதியில் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கொள்கைக்கு உலக அளவில் பேட்டைக்காரராக விளங்குபவர். உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளரான ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸுடன் இணையாய் நீண்ட காலம் பணியாற்றியவர். படத்தின் திரைக்கதை, காட்சிகள், கிராஃபிக்ஸ் என அனைத்தும் அவரது மேற்பார்வை / சரிபார்த்தலுக்குப் பின்பே முடிவாகி இருக்கிறது. இதை எல்லாம் விட புழுத்துளை மற்றும் கருந்துளையை திரையில் உருவாக்க‌ அவர் செய்த கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான ஆலோசனையின் விளைவாக‌ புதிதாக இரண்டு ஆராய்ச்சி பேப்பர்கள் வெளியாகின என்கிறார்கள். இதை எல்லாம் விட‌ INTERSTELLAR திரைக்கதை எழுதும் முன் கலிஃபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரியில் சார்பியல் குறித்து தனியே கோர்ஸ் படித்திருக்கிறார் ஜோனதன் நோலன். இவ்வளவு தூரம் உழைத்திருக்கிறார்கள்.

மூன்று மணி நேரம் படம் பார்த்து முக்கால் மணி நேரம் விமர்சனம் எழுதும் நமக்கே இவ்வளவு கேள்வி வரும் போது ஆண்டுக்கணக்கில் அதோடு வாழ்ந்தவர்களுக்கு இவை தெரியாதா! படத்தை முழுக்க‌ கவனிக்காமல், உள்வாங்காமல், புரிந்து கொள்ளாமல் அதில் குற்றம் கண்டுபிடித்து காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதன் அறிவீனத்தை வியக்கிறேன்.

இது தவறுகளே இல்லாத படம் என சொல்ல வரவில்லை. எந்தப் படத்தையும் போல இதிலும் தர்க்கப்பிழைகளும், அறிவியற்பிழைகளும் இருக்கக்கூடும். அதை மறுக்கவே இல்லை (உதாரணமாய் எனக்கே சில கேள்விகள் உண்டு தான்: பூமிக்கும் Endurance மிஷனில் இருப்பவர்களுக்கும் இடையே நிகழும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் மின்காந்த அலைகளாகவே இருக்க வேண்டும். எனில் அச்செய்திகளும் வந்து சேர‌ பல கோடி ஒளி ஆண்டுகள் ஆகும். உடனடியாய் எப்படி நிகழ்கிறது? ஒருவேளை அதுவும் புழுத்துளை வழியே நடக்கிறதா? எனில் எப்படி?). ஆனால் நிஜமாகவே நாம் கண்டுபிடிப்பது தவறு / விடுபடல் தானா என்பதை உறுதி செய்யும் தேடலும் உழைப்பும் வேண்டும். அவ்வளவு தான்.

*

படம் புரியவில்லை என நிறையப் பேர் சொல்வதைக் கேட்கிறேன். நிதானமாக யோசித்தால் உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஓரளவு தெரிந்திருந்து, படத்தில் வரும் வசன‌ங்களைக் கூர்ந்து கவனித்தாலே 90% படம் நிச்சயம் புரிந்து விடும். சில விஞ்ஞான விஷயங்கள் abstract-ஆக விடுவதில் பிரச்சனையே இல்லை. அது படத்தைப் புரிந்து கொள்ளத் தடங்கல் இல்லை. உதாரணமாய் கருந்துளையிலிருந்து வரும் ஒருமை பற்றிய தகவல் கொண்டு அவிழ்க்கப்படும் சமன்பாடு எப்படி பூமியிலிருக்கும் மனிதர்களை வேறு கிரகத்துக்கு இடம் பெயர்க்க உதவும் என்பது எனக்குத் தெளிவாய்ப் புரியவில்லை. ஆனால் அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அத்தகவல் உதவும் என்பது வரை புரிந்தாலே போதும்.

இதில் புரிதலைத் தாண்டி சிரமப்படும் விஷயம் இரண்டு தான் என்பது என் கணிப்பு. முதல் விஷயம்: கவனம். பலரும் அத்தனை வசனங்களையும் காட்சிகளையும் கவனித்துப் படம் பார்ப்பதில்லை (எனக்கு சப்டைட்டில் இருந்ததால் இந்தப் பிரச்சனை இல்லை). சிக்கலான விஷயங்களில் பாதியைப் படமே எளிமைப்படுத்திச் சொல்கிறது. ஐந்தாம் பரிமாணக் காட்சி அமைப்பு எல்லாம் சினிமா அளவில் ஒரு சாதனை என்பேன். மிக எளிதாக அந்த விஞ்ஞான விஷயத்தை உள்வாங்க அது உதவுகிறது. இப்படி ஆங்காங்கே கிடைக்கும் தகவல்களைக் கோர்த்தால் தான் படம் முழுமையாகப் புரியும். இரண்டாவது விஷயம் கற்பனை. அதீத ஈர்ப்பு விசையில் காலம் விரியும், ஐந்தாம் பரிமாணத்தில் காலத்தில் முன் பின் நகரலாம் என்பதைக் கற்பனை செய்யத் திராணி வேண்டும். அதாவது எப்படி எனக் கேட்கலாம். அதற்கான பதிலை பாதியை விஞ்ஞானத்திலிருந்தும், பாதியை உங்கள் கற்பனையிலிருந்தும் எடுக்க வேண்டும். நோலன் செய்திருப்பது அதைத் தான். இன்னும் கொஞ்சம் ஆழமாய் யோசித்தால் ஐன்ஸ்டைன் செய்ததே கூட அதைத் தான்!

Imagination is more important than knowledge. For knowledge is limited to all we now know and understand, while imagination embraces the entire world, and all there ever will be to know and understand.”  - Albert Einstein

***

Comments

Unknown said…
ரொம்பவும் மெனக்கெட்டு எழுதியிருக்கிறீர்கள்...பாராட்டுகள்...நன்றி..
கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தேன், சாதாரண சப்பை படங்களுக்கு விமர்சனம் எழுதும் யாரேனும் INTERSTELLARஐ நெருங்குகின்றனரா என்று. என்னை பொறுத்த மட்டில் (நான் பின் தொடருபவர்களில் சி.சரவணகார்த்திகேயனால் மட்டுமே முடிந்திருக்கிறது.வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்.

ஒரு விண்ணப்பம்: முழுக்கதையையும் எழுதி நீங்கள் வெளியிட்டால் பேருவகை அடைவேன் :-)
Unknown said…
படத்தை அனு அனுவாக ரசித்து அந்த உணர்வை எங்களுக்கும் கொடுத்து இருக்கிங்க பாராட்டுக்கள்....
Unknown said…
Seriously did not understand the physics details, yet it was an instigating writing enough for me to watch it writer, i m sure this has taken you lot of time and research to write, good one, rocking post!!
அருமையான பதிவு. பாராட்டுக்கள் :-)
Anonymous said…
நேற்று படம் பார்த்த போது பாதி புரிந்தது. இப்போது முழுதாய் புரிந்தது. நன்றி. சுந்தர் வேல்
//
எனில் அச்செய்திகளும் வந்து சேர‌ பல கோடி ஒளி ஆண்டுகள் ஆகும். உடனடியாய் எப்படி நிகழ்கிறது? ஒருவேளை அதுவும் புழுத்துளை வழியே நடக்கிறதா? எனில் எப்படி?)
//

Yes... In NASA, when they explain about the astronauts, they say this. Sending 7 people, but getting pings only from 3. Also, at Mann's planet they decide send Cooper back to Earth, Mann steals the spaceship and tries to doc to Endurance to do the same. This means, wormhole is twoway. Anything travels through wormhole instantly, hence data transfer is possible.

But, I couldn't understand, why from otherside they can send only ping, not data when from earth they can send video data. We cannot say it is one way because, they talk about reverse travel to earth.
அற்புதமான விமர்சனம். சூப்பர்.
raji said…
அப்போம் எங்க ஸ்கூல் பசங்கள பாக்க சொல்லலாம்
Anonymous said…
பயனுள்ள கட்டுரை... சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் :-)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி