பரத்தை கூற்று : முனைவர் ஆய்வு
சுகன்யா தேவி ஒரு கல்லூரி மாணவி. கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் தமிழில் முனைவர் பட்ட ஆய்வு. சென்ற மாதம் கவர்னர் ரோஸய்யா கையால் டாக்ட்ரேட் பட்டம் பெற்றார். அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு ' சமகாலக் கவிதைகளில் சமூகக் கருத்துக்கள் '. அதற்கு அவர் தேர்வு செய்த பல கவிதை நூல்களுள் எனது பரத்தை கூற்று ம் ஒன்று (தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரின் புத்தகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன). அதன் நிமித்தம் சுமார் ஓராண்டு முன் அவர் பெங்களூரில் என்னைச் சந்தித்து ஒரு சிறிய நேர்காணல் செய்தார். அவரது முனைவர் ஆய்வேட்டில் இது இடம் பெற்றுள்ளது. அவருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் பதிகிறேன். * 1. பரத்தை தொழில் மேற்கொண்டிருக்கும் பெண்களின் சிக்கல்களை மட்டும் மையமாக வைத்துக் கவிதை எழுதியிருப்பதேன்? முன்னுரையிலேயே சொல்லி இருப்பதைப் போல் பரத்தை கூற்று நூலாக வெளியானது 2010ம் ஆண்டின் இறுதியில் தான் என்றாலும் இக்கவிதைகளை நான் எழுதியது 2006ன் தொடக்கத்தில். அப்போது கல்லூரி மாணவனாக சென்னை என்ற பெருநகரில் வசித்ததால் எந்த பிரயத்தனங்களுமின்றி பரத்தமை குறித்து தானாகவே அறிய வாய்த்தது. இது தவிரஎன் நண...