சந்திரயான் : A Belated Review

நான் இதுகாறும் எழுதியுள்ள ஐந்து புத்தகங்களில் அதிகபட்ச அங்கீகாரம் (தமிழ அரசு வழங்கிய சிறந்த நூலுக்கான பரிசு) பெற்றதும், ஆனால் அதே சமயம் குறைவான வாசகர் எதிர்வினைகளைப் பெற்றதும் என் முதல் நூலான சந்திரயான் தான். இப்போது அந்த நூலுக்கு பொருட்படுத்தத் தகுந்த ஒரு விமர்சனம் வெளியாகி இருக்கிறது.

https://www.goodreads.com/review/show/878516183

Goodreads வாசித்த நூல்களைப் பற்றிய விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு பிரபல தளம். சென்ற வருடம் அமேஸான் இந்தத் தளத்தை விலைக்கு வாங்கியது. இதில் தான் பி. சங்கர் இதை எழுதி இருக்கிறார். முன்பு ட்விட்டரில் தீவிரமாக இயங்கியவர். அவர் விமர்சனத்தில் சொல்லி இருக்கும் சில கருத்துக்களுக்கான விளக்கங்கள்:

1) நூலின் முடிவில் ஓர் அழகான நேரக்கோடும் உள்ளது. இதனை ஆசிரியர் அவராகவே உருவாக்கி இருந்தால், இது மிகவும் பாராட்டப் பட வேண்டிய முயற்சி.

அது திரட்டிய தகவல்களை வைத்து நானே தொகுத்து உருவாக்கியது தான். அதற்கு நிறையவே உழைக்க வேண்டி இருந்தது. கவனித்தமைக்கு / உணர்ந்தமைக்கு நன்றி.

2) சில எழுத்துப் பிழைகள் ஆங்காங்கே தென்பட்டன.

அடுத்த பதிப்பு கொண்டு வரும் திட்டம் இருந்தால் பதிப்பகத்திடம் சொல்லி இவற்றை சரி செய்ய முயலாலாம். இதெல்லாம் சிறிதெனனினும் எனக்கு ப்ரியமான உதவிகள்!

3)  தமிழில் நிலாவை வைத்து ஆயிரம் பாடல்கள் உள்ளன ஆனால் நூலின் முதல் பக்கத்தில் ஏதோ ஆங்கில நாடகத்தின் உரையாடலைப் போய் பயன்படுத்தி இருக்கிறார்.

சந்திரயான் நூலின் 13 அத்தியாயங்களிலும் ஆங்கில மேற்கோள்கள் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறேன். அந்த uniformity-க்காக ஷேக்ஸ்பியரின் நாடக வரிகளைப் பயன்படுத்தினேன். அவ்வளவு தான். மற்றபடி ஆங்கிலத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றோ தமிழைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றோ நோக்கங்கள் இல்லை. 

4)  சந்திரன், உரோகிணி, சாபம் என்று எழுதி இருந்ததை எல்லாம் ஓர் அறிவியல் நூலில் தவிர்த்திருந்திருக்கலாம் என்று தோன்றியது. 

நிலா என்பது ஆதிகாலந்தொட்டே பல்வேறு சமூகங்களிலும் ஒரு தொன்மம். அதாவது myth. அதனோடு பல மூட நம்பிக்கைகளும் புராணக் கதைகளும் பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. அதனால் நிலவைப் பற்றி ஒரு சுருக்கமான அறிமுகத்தை அளிக்கும் போது அதன் தொன்மங்களையும் இணைத்தே பேச வேண்டும் என்று தோன்றியதாலேயே அவற்றைச் சேர்த்தேன். அதே நேரம் அவை வெறும் கதைகள் என்பதனையும் அடிக்கோடிட்டே எழுதி இருந்தேன். இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன். இறுதிப் பிரதியில் அந்த அறிமுக அத்தியாயத்தில் நான் ஒரு வரி வைத்திருந்தேன் (பிறகு எடிட்டிங்கில் நீக்கப்பட்டது). இந்நூலினை அந்த அளவுக்கு பல்சுவையாகவே அணுகி இருந்தேன்.

"அவ்வளவு ஏன், நிலா என்ற பெயரில் ஒரு பிரபல தமிழ் நடிகை கூட இருக்கிறார்!"

*

Comments

Sankar said…
Thanks a lot for publishing my review and for providing your answers for my questions too :-) Felt honored.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்