காதல் அணுக்கள் - தொடர்
இன்று காதலர் தினம்.
இன்றிலிருந்து சரியாக மூன்றாண்டுகள் முன்பு இதே போன்றதொரு வேலண்டைன் தினத்தில் எனது தேவதை புராணம் கவிதைகளை (காதல் புராணம் என்ற தலைப்பில்) பா. ராகவன் தமிழ் பேப்பரில் தினத்தொடராக 15 நாட்கள் வெளியிட்டார்.
ஒரு பெண் 7 வெவ்வேறு பருவங்களில் சொல்வதாய் அமைந்த கவிதைகள் என்பதால் என் பெயரின்றி வெளியிடலாம், தொடரின் இறுதியில் சொல்லிக் கொள்ளலாம் என்ற என் விருப்பத்தை ஒப்புக் கொண்டு ஆசிரியர் பெயர் இல்லாமலே அத்தொடர் வெளியானது. இப்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இவ்வளவு பரவலாய்த் தமிழர்கள் இல்லை. அப்போதே அது பரவலாய் நல்ல எதிர்வினைகளைப் பெற்றது. யார் எழுதுகிறார் என்றும் விவாதிக்கப்பட்டது (நான் கூட அவற்றில் கலந்து கொண்டேன்!). அந்த வெற்றி இல்லாமல் அத்தொகுப்பு நூல் வடிவம் கண்டிருப்பது சிரமமே.
இப்போது காதல் அணுக்கள்.
திருக்குறளில் காமத்துப்பால் என்பது எப்போதுமே எனக்கு வசீகரம். பெயர் காமத்துப் பால் என்றிருந்தாலும் உண்மையில் இவற்றில் பெரும்பாலவை காதலை மற்றுமே பேசுபவை (காமம் என்ற சொல்லே அப்போது காதலைத் தான் குறித்தது).
காமத்துப்பாலை ஒவ்வொரு குறளாக எடுத்துக் கொண்டு குறுங்கவிதை ஆக்கிப் பார்க்க முயலப் போகிறேன். ஒற்றை அதிகாரத்துக்கு 10 கவிதைகள். வாரம் ஓர் அதிகாரம் வீதம் 25 வாரங்கள் எழுத உத்தேசம். தமிழ் பேப்பரில் வெளியாகும்.
திருவள்ளுவர் ஆண்டை சரியெனக் கொண்டால் இரண்டாயிரம் ஆண்டுகளாக காதல் மாறவே இல்லை; காதலர்கள் மாறவே இல்லை. ஆணும் பெண்ணும் அதே போல் தான் இருக்கிறார்கள் - அதே ஊடல்; அதே கூடல்; அதே வெட்கம்; அதே திருட்டுத்தனம்; அதே பிரிவுத்துயர். எல்லாமே அப்படியே. நாம் பேசும் மொழியும் பழகும் ஊடகமும் தான் மாறிப் போயிருக்கிறது. பனையோலைக்குப் பதில் இணையதளம்; அதனால் வெண்பாவையும் நவீனப்படுத்த வேண்டியுள்ளது.
ஏன் காதல் அணுக்கள் என்ற தலைப்பு? வைரமுத்து எந்திரன் படத்தில் எழுதிய பாடல் மட்டும் காரணமல்ல. "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் / குறுகத் தறித்த குறள்" என்பது திருக்குறள் பற்றிய ஔவையின் வாக்காக திருவள்ளுவ மாலை குறிப்பிடுகிறது. ஒவ்வொரு குறளும் ஓர் அணு. அவற்றில் காதல் தொடர்பான அணுக்களை மட்டும் இத்தொடரில் நான் எடுத்துக் காட்டப் போகிறேன் என்பதால் காதல் அணுக்கள் எனப் பொருத்தத் தலைப்பு வைக்கத் தீர்மானித்தேன்.
மிகக் குறுகிய காலத்தில் பரிசீலித்து பிரசுரிக்க முடிவெடுத்த தமிழ் பேப்பர் பொறுப்பாசிரியர் மருதன் அவர்களுக்கு நன்றி.
எனக்கு முன்னால் திருக்குறளைக் கையாண்ட பெரியவர்களை நினைத்துக் கொள்கிறேன். பரிமேலழகர், மணக்குடவர் முதல் மு.வ., நாமக்கல் கவிஞர், கலைஞர், நவீன உரை எழுதிய சுஜாதா, காமத்துப்பாலுக்கு மட்டும் உரை கண்ட வீ.முனுசாமி, கண்ணதாசன் போன்ற முன்னோடிகளை வணங்கி அடியேன் எளிய முயற்சியைத் தொடங்குகிறேன்.
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!
Comments
அன்பு தினம் - என்றும் வேண்டும்...
தினம் என்றும் - அன்பாக வேண்டும்...
வாழ்த்துக்கள்...
இரண்டு விஷயங்கள்: 1) அவர்கள் தொடங்கி இவர்கள் வரை என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதில் எல்லோருமே அடங்கி விடுக்கிறார்கள். அதாவது எல்லோரையும் சொல்வது நோக்கமில்லை. நான் வாசித்த உரைகளை மட்டும் சொல்லி இருக்கிறேன். 2) ஆனால் நீங்கள் சொல்லும் கலைஞரைக் குறிப்பிட்டிருக்கிறேனே!