உங்க வீட்டுப் பொண்ணு

சென்ற பொங்கல் தினத்தன்று விஜய் டிவியில் சிவகார்த்திகேயனை வைத்து எங்க வீட்டுப் பிள்ளை என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். அதில் சில சங்கடத்துக்குரிய விஷயங்கள் இடம் பெற்றன (குறைந்தபட்சம் என்னளவில்). கல்லூரிப் பெண்கள் சிலர் அவரது ரசிகைகள் எனக் காட்டப்பட்டு மேடையிலேயே குறும்புத்தனம் என்ற பெயரில் சில ஆபாசங்களில் ஈடுபட்டார்கள் (மறுபடி என்னளவில் தான்). அதன் காணொளிகளை இங்கே பார்க்கலாம் (விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் ஏற்றப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் காணொளியில் இந்த சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன):

http://www.dailymotion.com/video/x19n58l_engaveettu-4_shortfilms (07:00 to end)
http://www.dailymotion.com/video/x19n5qh_engaveettu-5_fun (start to 04:00)

  1. ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு பொங்கல் ஊட்டி விட்டு தனக்கும் அவரை ஊட்டி விடச் செய்கிறார்.
  2. ஒருவர் சிவகார்த்திகேயனின் கன்னத்தைக் கிள்ளி விட்டு தன் கன்னத்தையும் அவரைக் கிள்ள வைக்கிறார்.
  3. ஒருவர் லிஃப்ட்டுக்குள் தீபிகா படுகோனுடன் மாட்டுக் கொண்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கிறார்.
  4. ஒருவர் அவர் தன்னைக் கையில் தூக்கிக் கொண்டு அரங்கைச் சுற்றி வர வேண்டும் என்று சொல்கிறார்.
  5. ஒருவர் லிப்ஸ்டிக் தடவி ஒரு டிஷர்ட்டில் முத்தமிட்டு அதை அவர் அணிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
இதைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதப்பட்ட ஒரு பதிவும் அதற்கான என் எதிர்வினையும் அதைத் தொடர்ந்த விவாதங்களும்:

https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10151981171717108

*

Suresh Kannan

விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் தொடர்பான ஒரு நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பாகியதாம். நான் பார்க்கவில்லை. அதில் கலந்து கொண்ட பெண்களில் சிலர் அந்த நடிகரின் கன்னத்தைக் கிள்ளியதாகவும் தங்களின் சில அபிலாஷைகளை வைத்ததாகவும் தெரிகிறது.

சமூகத்தின் தவிர்க்க முடியாத இந்த கலாசார மாற்றத்தை பிடிக்காத சில வறிற்றெரிச்சல் இளைஞர்கள் இணையம் பூராவும் இதைக் கண்டித்து பதிவுகள் போடுகிறார்கள். ஆணாதிக்க சமூகம் இன்னமும் திருந்தவில்லை என்பதன் தெளிவான அடையாளமிது.

'உங்களுக்குப் பிடித்த நடிகை யார்?' என்று இளைஞர்களிடம் கேட்கப்படும் நிகழ்ச்சி சிலவற்றைப் பாருங்கள். வாயெல்லாம் பல்லாகவும் ஜொள்ளாகவும் தங்களுக்குப் பிடித்த நடிகைகளை வர்ணணைகளுடன் சொல்லித் தீர்ப்பார்கள். சிலுக்கு கடித்த ஆப்பிள் சில ஆயிரங்களுக்கு விலை போனதையும் புடவைத் திறப்பு விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகளின் இடுப்புகள் கூட்ட நெரிசலில் கிள்ளப்படும் செய்திகளைக் காணும் பா.வ சமூகச் செய்திகளை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?

ஆனால் நவீன காலத்தில் கூட இன்னமும் சட்டையில்லாத கமல்ஹாசன், சல்மான்கான் படங்களை வெட்டி கதவுக்கு பின்னால் ஒட்டி ரகசியமாக கனவு காணும் அதே கற்காலத்தில் பெண்கள் இருக்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறோம்? ஸ்கூட்டியில் விரையும் பெண்களை, அவர்கள் தங்களின் சமூக விலங்குகளிடமிருந்து ஒடித்து விட்டு பறக்கத் துணிவதை காண சகிக்காமல் ஓவர்டேக் செய்து வெறுப்பேற்றும் அதே மனோபாவத்தையே மேற்குறிப்பிட்ட இளைஞர்களிடமும் காண முடிகிறது.

இன்றைய சமகால இளைஞிகள் பலரை சிவகார்ததிகேயன் தன்னுடைய எளிமையால் கவர்ந்துள்ளார். பலரின் கனவுக்கண்ணனாக மாறியுள்ளார். ஒரு காலத்தில் பாக்யராஜூக்கு பெண்களின் ரசிகைகள் இருந்தது ஏன் என்று யோசித்துப் பார்த்தால் இதன் பின்னாலுள்ள உளவியல் புரியும்.

இளம் பெண்களிடம் சமீபகாலத்தில் அசுர வேகத்தில் புகழ்பெற்றுள்ள சிவகார்த்திகேயனைக் கண்டால் எனக்கும்தான் வயிற்றெரிச்சலாக உள்ளது. என்ன செய்ய, இதையெல்லாம் மறைத்துத்தான் ஆக வேண்டும் நண்பர்காள்.

* 

Saravanakarthikeyan Chinnadurai

சுரேஷ் கண்ணன், இதை விளையாட்டாக எழுதுகிறீர்களா இல்லை சீரியஸா எனப் புரியவில்லை. இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் எதையாவது எழுதி விட்டு மேலே கேட்டால் பகடி என்று தப்பித்துக் கொள்கிறார்கள். அதனால் இப்போதைக்கு உங்கள் கருத்தை சீரியஸ் என்று நம்பும் அப்பாவியாக சில விஷயங்களைப் பேச‌ விரும்புகிறேன்.

ஒரு நடிகனை / நடிகையை அதீதமாய் ரசிப்பது (உங்கள் பாஷையில் ஜொள்ளு விடுவது) என்பது வேறு பாலியல் ரீதியாகத் தீண்டுவது என்பது வேறு. எந்த இளைஞனும் பொதுவிடத்தில் நடிகையின் கன்னத்தையோ வேறெதையோ பிடித்துக் கிள்ளியதாகவும் அதை யாரேனும் அங்கீகரித்ததாகவும் எனக்குத் தெரியவில்லை. அப்படி இருந்தால் அதைத் தாராளமாய்க் கண்டிக்கலாம் இதே அடிப்படையில்.

இப்போது சிவகார்த்திகேயன் விஷயத்துக்கு வரலாம் (சிவகார்த்திகேயன் என்றில்லை விஜய் அல்லது ரஜினி யாரிடம் இதைச் செய்திருந்தாலும் இதே தான். அன்னாரின் தகுதி சம்மந்தப்பட்டது அல்ல. விஷயம் தான் முக்கியம்)

எல்லோர் முன்னிலையிலும் சில இளம் பெண்கள் அவரது கன்னம் கிள்ள விரும்புவதாகச் சொல்லி அதைச் செய்கிறார்கள். இதை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. அதைப் பார்த்து பொறாமைப்படுவது வேறு கதை (அவனைத் தடவுகிறாளே என்னையும் தடவினால் என்ன என்று நினைப்பவரும் அந்தப் பெண்களை போக வஸ்துவாக நினைக்கிறார் என்றே அர்த்தம். அது தான் உண்மை என்றாலும் அடிப்படை இது தானே).

ஆனால் பொதுவான‌ ஒழுக்கவியல் வரையியலின் படியே இதை எப்படி ஏற்க முடியும்? நம் வீட்டுப் பெண் இதையே செய்தால் நாம் பொறாமை மட்டும் தான் படுவோமா இல்லை பல்லு மேல் போடுவோமா?

உண்மையில் அந்த பெண்களின் பின்னால் செயல்பட்ட உளவியல் என்ன என்பதை நாம் யோசிக்க வேண்டும். அன்றைய நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனோடு படுப்பதற்கும் தயார் என்பது தான் அந்தப் பெண்கள் விடுத்த அறைகூவலாக எனக்குக் கேட்கிறது. அதைத் தான் பூசிய‌ வடிவில் கன்னம் கிள்ள ஆசை என்று சொன்னார்கள்.

அவர்களுக்கு அது ஒரு மிதப்பாகத் தோன்றி இருக்கிறது. ஒரு செலிப்ரிட்டியின் கன்னம் கிள்ளினோம் என்று தம் தோழிகள் மத்தியில் பெருமை அடித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு. இதைப் பெருமையாகக் கருதும் / அதற்காக கிள்ளியவர்கள் மீது பொறாமைப்படும் அந்த உத்தமமான‌ தோழியர் கூட்டம் பற்றி மேலே சொல்ல ஏதுமில்லை.

அதைத் தான் நாம் விரும்புகிறோமா? அச்செயலைச் செய்த பெண்களின் அம்மாவோ அப்பாவோ காதலனோ வருங்காலக் கணவனோ அதைப் பார்த்துப் பெருமைப்படுவார்களா? (ஆண்கள் இதை ஒரு நடிகையிடம் செய்திருந்தாலும் இதே கேள்வி வேலிட் தான்)

எப்படி ஒரு சாதாரண ஆண் ஒரு பெண் செலிப்ரிட்டியைக் கண்டபடி தொடுவது எப்படி ஆபாசமாகப் பார்க்கப்படுகிறதோ அதே போல் தானே ஒரு சாதாரண பெண் ஓர் ஆண் செலிப்ரிட்டியை அப்படித் தொடுவதும் பார்க்கப்பட வேண்டும். இதில் எங்கே தவறு வந்தது?

இந்த ஒழுக்கவியல் கோட்பாடு பொதுப்புத்தி என்றோ பழமைவாதம் என்றோ சொன்னால் இருந்து விட்டுப் போகட்டும். யாரோடும் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கலக்கலாம் என்ற கலாச்சாரம் இந்த நிலத்தில் பரவலாகும் வரும் போது இதையும் ஒப்புக் கொள்ளும் மனநிலை எனக்கும் என் போன்றவர்களுக்கும் வரக்கூடும்.

கன்னம் கிள்ளலை கலவி வரை யோசிக்க வேண்டுமா எனக் கேட்டால் அது அவரவர் அனுபவங்கள் / விழுமியங்கள் சார்ந்தது.

நீங்கள் இதை ஆணாதிக்க சிந்தனையாக, பெண்ணடிமைத்தனமாக, ஆண் பெண் சமத்துவமாகத் திசை திருப்ப முயல்வது தான் இருப்பதிலேயே மோசமான விஷயம். ஒரு நடிகனின் கன்னம் கிள்ளும் கிளுகிளுப்பிலா பெண் சுதந்திர‌ம் அடங்கி இருக்கிறது!

*

Shan Shylesh Koothaadi

முதலில் எதிர்பாலின ஈர்ப்புக்கும் போகப்பொருளாக பார்க்கும் விஷயத்திற்கும் ஒரு இடைவெளி வகுத்து விடுவோம். ஏன் எனில் நீங்கள் "என் கன்னத்தை கிள்ளவில்லை" என்ற பொறாமை போகப்பொருள் மனோபாவத்தின் இன்னொரு கூறு என்று சொல்லி இருக்கிறீர்கள். அப்படி எனில் இதை ஒரு ஆண் பெண் மீது செய்து.. ஏதோ ஒரு பெண் விரும்பினால் அவள் அவனை போக வஸ்துவாக பார்க்கிறாள் என்றா பொருள்?

சரி மேலே இருக்கும் பத்தி புரியவில்லை எனில் விட்டுவிடலாம். அது அவ்வளவு முக்கியமல்ல. சில முக்கிய கேள்விகள் உள்ளன.

1. கன்னம் - கலவி - விழுமியங்கள்/வாழ்ந்த வளர்ந்த விதம் சார்ந்தது என்றீர்கள். சரி, http://www.news.com.au/world/man-kicked-out-of-saudi-arabia-for-being-8216too-handsome8217-to-reveal-all-in-movie/story-fndir2ev-1226654931463

இந்த குறிப்பிட்ட செய்தியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்??

ஒரு பெண் ஒருத்தனை கூர்ந்து நோக்கி அவன் அழகை ரசித்தாலே அவனிடம் கலவி செய்ய விரும்புகிறாள் எனபது இங்கே மிகச்சரியே. இதே போல கலாச்சாரம், விழுமியம், வளர்ந்த விதமெல்லாம் சார்ந்து எல்லா அடிப்படைவாதிகளும் தங்களை நியாயப்படுத்திக்கொண்டே போகலாமே?

2./// நம் வீட்டுப் பெண் இதையே செய்தால் நாம் பொறாமை மட்டும் தான் படுவோமா இல்லை பல்லு மேல் போடுவோமா? /////

இந்த கேள்வி சரியா என்று நீங்களே பாருங்கள்.

3. 70 சதவீத ஆண்/பெண்கள் கலவியின் உச்சத்தின் போது தங்கள் இணையை நினைப்பது இல்லையாம். - இது வெறும் தகவல் கேள்வியல்ல.

4. ஒரு சாதாரண ஆண் ஒரு பெண் செலிப்ரிட்டியை தொடுவது.... - இது போல் பர்மிஷன் பெற்று எங்கும் நடந்ததாக தெரியவில்லை. நகைக்கடை திறப்பு விழாக்களில் கிள்ளியவை "இசைவு" பெற்று செய்தவை அல்லவே. அப்படி எதாவது நடந்து அது கண்டிக்கப்பட்டிருக்கிறதா என்ன???

5. //ஒரு நடிகனின் கன்னம் கிள்ளும் கிளுகிளுப்பிலா பெண் சுதந்திர‌ம் அடங்கி இருக்கிறது!///

மிக நியாயமான கேள்வி. அதில் இல்லை. முதலில் அது "பேட் டச்சில்" வரலை. அதைக்கூட விட்டுவிடுவோம். சுதந்திரம் அதை நாம் விவாதித்து சரியா தவறா என கேட்கும் போது அழிகிறது. இது கூட Moral Policing தானே?

பிகு : நீண்ட கமெண்ட் என்பதால் பதில் அளிக்க தோன்றுவதற்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது. நிச்கயம் கேள்வி எண் 1க்கு விடை எதிர்பார்க்கிறேன்.

*

Saravanakarthikeyan Chinnadurai

1) இதற்கு பதில் சொல்வதை விட மறுபடி கேள்வி கேட்கிறேன். இதே போல் ஸோகால்ட் முற்போக்குவாதிகளும் கலவி கூடாத உறவு முறைகள் போன்ற வரைமுறைகள் எல்லாவற்றையும் ரத்து செய்து விட்டு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் எத்தனை பேரை வேண்டுமானலும் கலவி செய்யலாம் விலங்குகள் போல வாழ்வதை நியாயப்படுத்தினால்?

அதாவது நமக்குத் தேவையான ஒழுக்கம் என்பது "பார்த்தாலே கற்பு என்ற வஸ்து போச்சு" என்பதற்கும் "யாரை வேண்டுமானாலும் கலக்கலாம்" என்பதற்கும் மத்தியில் இருக்கிறது. நமக்கு இப்போது என்ன வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். இன்று யாரும் குனிந்த தலை நிமிராமல் இருக்கச் சொல்வதில்லை. பெண்கள் அன்னிய ஆண்களோடு பேச வேண்டாம் என்று சொல்வதில்லை. மாற்றத்தை யாரும் தடுக்கவே முடியாது. அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இடையில் நடைபெறும் வலியப் புகுத்திய அதிர்ச்சிகளைத் தான் கண்டிக்கிறேன்.

2) இதன் அர்த்தம் ஆணாதிக்கம் அல்ல. உரிமை எடுத்துச் சொல்லுதல் தான். இதே போல் ஆண் ஊர் மேய்ந்தால் பல் மேல் அந்த வீட்டுப் பெண்களும் போடலாம் என்றே சொல வருகிறேன். இன்னும் ஒன்று சொல்கிறேன். என் வீட்டுப் பெண்களின் இடத்தில் அவர்களை நான் வைத்துக் கருத்துச் சொல்வதே அவர்களின் மீது நான் அக்கறை எடுத்துப் பேசுவதற்குச் சாட்சி. எவளோ எவனையோ நோண்டிட்டு போறா, எனக்கென்னெ என்று போகவில்லை என்று அர்த்தம்.

3) இது நிஜம் என்று வைத்துக் கொண்டாலும் இதை நியாயப்படுத்துகிறீர்களா? அது இன்னொரு விதமான ஒழுங்கீனம். அவரவர் மனசாட்சிக்கே விட வேண்டியது. தவிர மறுபடி இதில் நம் வீட்டாரையே உதாரணம் சொல்ல வேண்டியவனாகிறேன். அப்படி நடந்தால் இது உலக வழக்கம் தானே என சமாதானம் செய்து கொண்டு இன்னும் பலரை நினைத்துக் கொள் என உற்சாகப்படுத்துவீர்களா? அல்லது அதை தவிர்க்க உங்களை மாற்றிக் கொள்வீரா?

4) பர்மிஷன் கேட்டு ஒப்புக் கொண்டு நடந்தால் அதை எதிர்ப்பீர்களா ஆதரிப்பீர்களா என்பதே கேள்வி. நான் மாட்டேன். எப்படி இந்த விஷயத்தை எதிர்க்கிறேனோ அப்படியே அதையும் எதிர்ப்பேன். இன்னொன்று. இப்படி நடந்ததில்லை என்று சொல்வதிலேயே என் பக்க நியாம் ஒளிந்திருக்கிறது. ஏனென்றால் பெண் அதை ஒழுங்கீனம் எனக் கருதுகிறாள். அதனால் தான் அதை அனுமதிப்பதில்லை. மாறாக சிவகார்த்திகேயனுக்கு அது பெருமையான விஷயம். தாங்கள் போகப்பொருளாக ஆக்கி அவன் ஹீரோ ஆகிறான் என்பதே அந்த முட்டாள் பெண்களுக்குப் புரியவில்லை.

5) மாரல் போலீசிங் என்று சொன்னாலும் அக்கறையில்லை. அப்படிப் பார்த்தால் திருமணம் கூட ஒரு வகையில் மாரல் போலீசிங் தான். ஒருவனுடன் / ஒருத்தியுடன் மட்டும் படு என்று திருமணத்தில் அறிவுறுத்தப்படுகிறது. அதைக் கேள்வி கேளுங்களேன். அதாவது திருமணம் என்ற அமைப்பையே நீங்கள் ஒழித்து விட்டு என் மாரல் போலீசிங்கிற்கு வாருங்கள் என்கிறேன். மற்றபடி ஒரு பெண்ணும் ஆணும் பேசக்கூடாது பேசினால் தாலியோ ராக்கியோ கட்டுங்கள் என்று சொல்லும் காட்டுமிராண்டிகளையும் மாரல் போலீசிங் என்று சொல்லி விட்டு என் வீட்டுப் பெண்ணாய் இருந்தால் இது என்னை என் தாயை என் தந்தையை இன்ன பிற குடும்பத்தார் மனநிலையை எவ்வாறு பாதிக்கும் என்று நினைத்து அக்கறைப்படுவதையும் மாரல் போலீசிங் என்று சொல்வதில் தர்க்கமுண்டா என உங்கள் கருத்துக்கே விடுகிறேன்.

*

Shan Shylesh Koothaadi


1,5. முற்றாகவே நான் "Moral Policing"கிற்கு எதிரானவன். இப்போதே யார் யாரோடு மேண்டுமானாலும் கலக்கலாம், இருவரின் சம்மதத்தோடு என்பது தானே இப்போதைய சட்டமும் (என் கருத்தும்). இங்கே திருமணம் என்பது ஒரு Commitment. அதில் விருப்பட்டே ஆணோ பெண்ணோ நுழைகிறார்கள். அங்கேயும் பந்தத்திற்கு மதிப்பு கொடுத்தே இன்னொருத்தனுடன்/த்தியுடன் கலவி புரியாமல் இருப்பது. இது அவர்களாகவே நுழையும் கமிட்மென்ட் என்பதால் இது தருவித்துக்கொண்டது. வேண்டாமெனில் உதறிவிட்டு, விவாகரத்து செய்து விட்டு கலவி செய்யட்டும். பிரச்சனை இல்லை.

இதனால் சொல்ல வருவது. திருமணம் என்ற அமைப்பின் விவரணைகள் அல்ல. எல்லாமே Individual freedom/emancipation தாண்டித்தான். தனிமனிதனின் சுதந்திரம் பிறிதொரு மனிதனுக்கு கேடு விளைவிக்காத வரை அதில் Moral Polcing செய்வது எனக்கு ஒவ்வாது.

2. மீண்டும். இங்கே திருமணம் - கமிட்மெண்ட் - பந்தம் - நான் உன்னை மட்டுமே நேசித்து கலவி செய்வேன் என்று சொல்வது. அந்த வீட்டு ஆண் என பொதுமை படுத்தவதால் சொல்கிறேன். தகப்பன் உட்பட எல்லோருமே பெண்னோ ஆணோ ஊர் மேய்ந்தால் அறிவுரை சொல்ல மட்டுமே உரிமையுள்ளவர்கள். அதை ஏற்பதும்/நிராகரிப்பதும் தனி நபர் உரிமை. இங்கே, Free sex மனப்பான்மை உள்ள ஒருத்தி/ஒருவன் திருமண கமிட்மெண்ட் செய்யாமல் இருப்பதே நியாயப்படி சரி. இங்கே ஒரு கேள்வி, Living Together குறித்த உங்கள் கருத்தென்ன?

3. ஒழுங்கு/ஒழுங்கீனம் என்பது தான் உண்மையில் என்ன? சூழ் நிலைகளை பொறுத்து தானே இவைவெல்லாம்? யார் எது ஒழுங்கென முடிவு செய்வது. என் கேள்வி இதை என்ன செய்ய முடியும் என்பது தான். இங்கே உங்கள் பதில் மனசாட்சிக்கே விட்டுவிட வேண்டியது தான். ஏன் தெரியுமா.. இதை எப்படி கட்டுப்படுத்தவது என உங்களுக்கு தெரியவில்லை. ஒருவனை கிள்ளினால், முத்தம் கொடுத்தால், பலரோடு கலவி செய்தால் Physically தடுத்துவிட முடியும்.. அதாவது பல் மேல் போடலாம்... ஆனால் இதை?? -- நான் சொல்வதெல்லாம் மற்றவைகளையும் அவர்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுங்கள் என்பது தான். ஏன் திணிப்பு, ஏன் அழுத்தம், ஏன் வன்முறை பிரயோகம்??

4. Kissing Fan என கூகுளில் டைப் செய்து தேடவும்.

என் கேள்விகளின் அடிப்படை மிகவும் எளிதானது. இச்சமூகம் சில ஒழுக்கவியல் கோட்பாடுகளை வைத்துள்ளது. அதை நிராகரிப்பதா ஏற்பதா என்பது தனி மனிதன் சார்ந்து இருக்கட்டும் என்கிறேன் நான். அதன் பாதிப்பு இன்னொரு மனிதனின் மேல் வீழாதவரை அவனை சமூகத்தின் ஒழுக்கவிதிகள் சொல்லி கட்டிபோடுவது எவ்வகையில் சரி??? இச்சமூகம் ஆரம்பித்த காலம் தொட்டு சரியோ தவறோ கலீலியோவின் உலகம் உருண்டை தொடங்கி, பெண்களுக்கு ஒரு நூற்றாண்டு முன் ஓட்டுரிமை கொடுத்த வரை மாற்றங்கள் எப்போதும் ஏதேனும் ஒழுக்கவியல் காரணம் சொல்லி புறக்கணிப்பட்டு தானே வந்திருக்கிறது??? அதை நாமும் செய்ய வேண்டுமா??

பிகு : எனக்கு முற்போக்கு முகமூடியில் சிறிதும் ஆசையில்லை. அறிவையோ,வித்தியாசமாய் காட்டவோ சொல்லவில்லை. சுத்தமாய் எந்த முன்முடிவும் இன்றி இங்கு வந்திறங்கும் ஒரு வேற்றுகிரகவாசி எல்லாவற்றையும் பார்த்து Rationalலாய் என்ன சிந்தித்து சொல்வானோ, என் மனதிற்கு பட்டதை சொல்லி இருக்கிறேன்.

*

Saravanakarthikeyan Chinnadurai 

குடும்ப அமைப்பு என்பது கட்டுப்பாடு மட்டுமல்ல. அது பொருளாதாரம் சார்ந்தது. மனித சமூகத்தின் முன்னேற்றம் சார்ந்தது. அது நமக்கு வசதியாக இருக்கிறது. குடும்ப அமைப்பு சிதறுவதைப் பற்றி நான் உணர்ச்சிவசப்பட்டுக் கவலைப்படவில்லை. அது நம் ஒட்டுமொத்த மனித குலத்தின் வளர்ச்சியை அறுக்கும். அதனால் நான் பொதுவாக லிவிங் டுகெதர் போன்ற வாழ்க்கை முறைகளுக்கு எதிரானவன். ஆனால் அப்படி வாழத் தேர்பவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது என்பதையும் மறுக்கவில்லை. எப்படி கே, லெஸ்பியன் போன்ற உறவு முறைகளை புரிந்து கொள்கிறேனோ அதே போல் இதையும் புரிந்து கொள்கிறேன் அவ்வளவு தான். எப்படி உலகம் முழுக்க கேவாகவும் லெஸ்பியனாகவும் மாற வேண்டும் என்று நினைக்க முடியாதோ அதே போல் லிவிங் டுகெதர் பரவலாவதையும் ஏற்கவில்லை.

இன்னொரு விஷயம் நீங்கள் சொல்லும் யாரும் யாரோடும் போகலாம் என்பதற்குள் சிவகார்த்திகேயன் விஷயம் வராது. நான் யாரை வேண்டுமானாலும் புணர்வேன், அந்த ஃப்ரீ செக்ஸ் நிலைப்பாட்டின் ஒரு பகுதியாகவே சிவகார்த்திகேயனைக் கன்னம் கிள்ளியது என்று அந்தப் பெண்கள் பொது வெளியில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டால் நான் என் அத்தனை கண்டனங்களையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். ஏனேனில் அப்போது அது அவர்கள் வாழ்க்கை முறையின் பகுதி என்றாகி விடுகிறது. அதையும் செய்து விட்டு அதைக் கேஷுவலாக செய்கிறோம், மற்றபடி ஒரே புருஷன் தான் என்று நடிப்பதையே வெறுக்கிறேன்.

*

Shan Shylesh Koothaadi 

நீங்கள் கே, லெஸ்பியன் குறித்து சொன்ன போது.. பரவலாவதை ஏற்கவிலலி என்றீர்கள். இதை என் குடும்பத்தில்/ எனக்கு நடக்கும் வரை என்று கொள்ளலாமா? ஏற்பது/ மறுப்பது தானே தர்க்க ரீதியில் சரி? அவர்கள் Minorityயாய் இருக்கும் வரை பிரச்சனை இல்லையெனில் ஏன் அப்படி?? - சரி நீங்கள் இதற்கு லிவிங்க் டூகெதருக்கு எதிரானவன் என்பதால் விட்டுவிடுவோம்.

யாரை வேண்டுமானாலும் புணர்வேன் என்பதும் யாரை வேண்டுமானாலும் கிள்ளுவேன் என்பதும் வெவ்வேறு நிலைப்பாடுகள் தானே? அவர்கள் நிலைப்பாடு எது - கிள்ளுவேன், அல்லது ஃபோர் ப்ளே மட்டும் செய்வேன்.. இப்படி அவர்களே வைத்துக்கொள்ளலாம் தானே? - அதையும் கூட நீ கிள்ளினால் அவனோடு படுக்க வேண்டும் என்று ஏன் நாம் சொல்ல வேண்டும்??

//அதனால் நான் பொதுவாக லிவிங் டுகெதர் போன்ற வாழ்க்கை முறைகளுக்கு எதிரானவன். ஆனால் அப்படி வாழத் தேர்பவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது என்பதையும் மறுக்கவில்லை./////

--- யாரை வேண்டுமானாலும் புணர்வேன்/ கிள்ளுவேன் / மாரை பிடித்து திருகுவேன் - (அவருக்கும் எனக்கும் விருப்பம் என்னும் போது) இவற்றை எல்லாம் தனித்தனி செய்கையாக வைத்துக்கொள்வோம். நீங்கள் சொன்ன வாழ்த்தேர்வு இவற்றிற்கு பொருந்துமா???

*

Saravanakarthikeyan Chinnadurai

கிள்ளியதிலேயே புணர்ச்சி இச்சை தான் இருக்கிறது என்பது தான் என் வாதம். அதிலேயே நீங்கள் வேறுபடுகிறீர்கள். உங்கள் கடைசி கமெண்டின் அத்தனை கேள்விகளும் இதைச் சுற்றித் தான். இதில் நம் இருவரில் ஒருவர் எதிர்சாரிக்கு கடந்து வந்தால் தான் மேற்கொண்டு விவாதமே சாத்தியம். நன்றி.

***

ஜில்லுனு ஒரு காதல் படத்தில் வடிவேலு ஒரு பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்ததற்கு பஞ்சாயத்து கூட்டப்படும். அங்கே "எல்லோரும் உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு என்னை மன்னிச்சிடுங்க" என்று சொல்வார். "பண்றதையும் பண்ணிட்டு எங்க வீட்டுப் பிள்ளையாடா?" என அவரை நையப் புடைப்பர். ஆனால் வாழ்க்கை வேறு, சினிமா வேறு!

Comments

Sankar said…
சில காலம் முன்னாள் பெண்கள் ஆண்களிடம் அலுவல் நிமித்தமாய் கை குலுக்கினால், பேருந்தில் ஆண் பக்கத்தில் அமர்ந்தால் சமுதாயத்தில் தவறாகப் பார்த்தார்கள். இப்போது அது பெரும்பாலும் மாறி விட்டது. எது சரி எது தவறு என்று கணிக்கப்படுவது காலத்துக்கேற்ப மாறிக் கொண்டேதான் இருக்கும்.

கன்னம் கிள்ளுவது அன்பின் வெளிப்பாடு. கிள்ளுபவருக்கும் பிடித்திருக்கிறது. கிள்ளப்படுபவருக்கும் பிடித்திருக்கிறது. சிவகார்த்திகேயனை அவர்கள் யாரும் அத்துமீறி வன்முறையில் ஈடுபடவில்லை. டிடி கமலுக்கு முத்தம் கொடுத்தபோது பொங்கிய ஆட்களைப் போன்றுதான் நீங்களும் பேசுகிறீர்கள்.

> அதாவது நமக்குத் தேவையான ஒழுக்கம் என்பது "பார்த்தாலே கற்பு என்ற வஸ்து போச்சு" என்பதற்கும் "யாரை வேண்டுமானாலும் கலக்கலாம்" என்பதற்கும் மத்தியில் இருக்கிறது. நமக்கு இப்போது என்ன வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.


சிறு திருத்தம். "நமக்கு" இல்லை "எனக்கு". உங்களைப் போன்றே பலரும் சிந்தித்தால் நீங்கள் அனைவரும் சேர்ந்து "நமக்கு" என்று ஒரு குழுவாக இயங்கிக் கொள்ளலாம். ஆனால் அப்போது கூட அடுத்தவர்கள் அனைவரும் உங்கள் உங்களுடைய "ஒழுக்கம் - விளக்கம்" என்பதை ஏற்க வேண்டியதில்லை. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். நீங்கள் டுவிட்டரில் காமம் பற்றி பேசுவதும், பெண்களிடம் பேசுவதும், எனக்கும் என் போன்ற கருத்துடைய நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது நம் சமுதாய கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என்று உங்களை அடிக்க வந்தால் ஒத்துக் கொள்வீர்களா ?
ஹா... ஹா... உரையாடல் அதைவிட கொடுமை...!

ஹா... ஹா...
@Sankar P

டிடி கமலை முத்தமிட்டது ஒரு நடிகை ஒரு நடிகனை முத்தமிடும் கணக்கில் தான் வருகிறது. அவர்கள் சூழலின் எல்லைகள் வேறு. எல்லாவற்றுக்கும் மேல் அது டிடியின் பப்ளிஸிட்டி ஸ்டன்ட்டாக இருக்கலாம் அல்லது ஸ்க்ரிப்படாகவும் இருக்கலாம். அதனால் இந்த ஒப்புமையே தவறு. ஒருவேளை செலிப்ரிட்டி அல்லாத சாதாரண பெண் இதைக் கமலிடம் செய்திருந்தால் அதை வேண்டுமானால் இதோடு ஒப்பிடலாம்.

மற்றபடி கலாசாரம் கெடுகிறது என்றெல்லாம் கவலை கொள்ளவில்லை. காலத்திற்கேற்றாற் போல் கலாசாரம் மாறுகிறது என்பதை நானே அந்த விவாதத்தில் ஒப்புக் கொள்கிறேனே. அது இயல்பாக நம் தேவையை ஒட்டி நிகழ வேண்டும். நீங்கள் சொல்ல ஆண் பெண் பேசுதல், கை கொடுத்தால் எல்லாம் இங்கே அப்படித் தான் நுழைந்தன. அதன் பின்னால் அதற்கான அவசியமும், நியாயமும் இருக்கின்றன. துருத்தவில்லை.

மாறாக திடீரென உளைக்கும் ஒருவரின் வக்கிர ஆசையை, அற்பத்தனத்தை கலாசார முற்போக்குத்தனமாக விதந்தோதக்கூடாது. டிவியில் ஒரு பெண் தன்னை நிர்வாணம் செய்து கொண்டு ஒரு நடிகருடன் கலவியில் ஈடுபட்டால் அதையும் கலாசாரம் என்று ஏற்றுக் கொள்வீர்கள் போலிருக்கிறதே. கேட்டால் 2050ல் எல்லாம் இப்படித் தான் என்பீர்கள்.

இன்னும் சொல்லப்போனால் இதைத் தாலிபானியம், பிற்போக்குத்தனம், மாரல் போலீஸிங் என்று சொல்லி விடுவார்களோ எனப் பயந்து இதைக் கண்டிக்காமல் இருக்க முடியாது. முற்போக்கு முகமூடியை விட என் மனதுக்குத் தவறெனப் படுவதைச் சாடுவதே முக்கியம்.

என்னுடைய கேள்விகள் எளிமையானவை:
1) அந்தப் பெண்கள் தம் பெற்றோரிடம், வருங்கால கணவரிடம் இதை நியாயப்படுத்திப் பேச முடியுமா? என்ன அது என்ன? இதெல்லாம் இன்னிக்கு சகஜம் என்றா? எதெல்லாம்?
2) தம் வருங்காலக் கணவருக்குப் பல‌ பெண்கள் இதையே செய்தால் அதை அவர்கள் ஏற்பார்களா? அதாவது துளியும் வருத்தமே இல்லாமல் இதை ஒப்புக் கொள்வார்களா?
3) அந்த வீடியோவை, அதில் அந்தப் பெண்களின் முகபாவங்களை பேச்சுக்களை வைத்துச் சொல்லுங்கள். அதில் காமம் தென்படவில்லையா? அது வெறும் விளையாட்டு மட்டுமா?
4) உங்களுக்கு திருமணமாகவில்லை என்று வைத்துக் கொண்டால் உங்களுக்குப் பார்க்கும் பெண் அவர்களில் ஒருவராக இருந்தால் மயிரளவும் உறுத்தலின்றி அவரை விரும்புவீரா?
5) ஒரு நடிகருக்கு அந்தப் பெண்கள் ஊட்டுவதை / கிள்ளுவதை / தூக்கச் சொல்வதை நீங்கள் நியாயப்படுத்தும் போது அதையே தினசரி பழகும் நண்பர்களுக்கு நீட்டிக்கலாம் தானே?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி