S6

வரும் சென்னைப் புத்தகக் காட்சியில் எனது ஐந்தாவது புத்தகமான குஜராத் 2002 கலவரம் கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளியாகவிருக்கிறது. கிழக்கு பதிப்பிக்கும் என் இரண்டாவது புத்தகம் இது. என் முதல் வரலாற்று நூலும் இதுவே.


தீராநதி, காலச்சுவடு ஆகிய‌ இதழ்களில் வெளியான கட்டுரைகள், அ.மார்க்ஸ் எழுதிய / தொகுத்த / மொழிபெயர்த்த சில கட்டுரைகள் ஆகியவை வழியாக 2002 குஜராத் கலவரங்கள் அது நடந்த சில மாதங்களிலேயே எனக்கு அறிமுகமானது.

அப்போது நான் கல்லூரியில் நுழைந்திருந்த நேரம். எப்போதும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பாய் நடந்திருந்த‌ காலம். இப்போது யோசித்துப் பார்த்தால் அப்போதிருந்த அற மனநிலை காரணமாகவே குஜராத் கலவரங்கள் மிக ஆழமாய் என்னுள் வேர் விட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இந்தப் புத்தகத்தின் ஆதி விதை அங்கே தான் விழுந்தது.

அது குறித்து தேடித் தேடி வாசிக்கத் தொடங்கினேன். பிற்பாடு உயிர்மை இதழில் சில கட்டுரைகள், The Hindu நாளேட்டில் சித்தார்த் வரதராஜன் எழுதிய ஒரு விரிவான கட்டுரை, Tehelka ரகசியப் புலனாய்வுகளின் தொகுப்பு, உண்மை அறியும் பெண்கள் குழுவின் அறிக்கை ஆகியவற்றை வாசிக்க நேர்ந்தது. தடை செய்து பின் விலக்க‌ப்பட்டிருந்த ராகேஷ் ஷர்மா இயக்கிய The Final Solution என்ற டாகுமெண்டரி படத்தை அப்போது தேனாம்பேட்டையில் ஒரு கட்டிடத்தின் மாடியில் ஒரு மாலையில் ஓர் அமைப்பு திரையிட்டது (எது என நினைவில்லை. கம்யூனிஸ்ட் பிரிவாக இருக்கும் என ஊகிக்கிறேன்).

என் முதல் திரைப்படமாக குஜராத் கலவரங்களைப் பின்புலமாகக் கொண்ட ஒரு கதையைத் தான் யோசித்திருந்தேன். படத்தின் பெயர் S6 (குஜராத் கலவரங்கள் நிகழக் காரணமான கோத்ரா ரயில் எரிப்பில் பாதிப்படைந்த பெட்டியின் எண் அது). நடிகர் பார்த்திபன் ஓர் ஐஏஎஸ் அதிகாரியாக பிரதானப் பாத்திரத்தில் வரும் அரசியல் படம் அது. அதன் காட்சி வாரியான‌ திரைக்கதை என் மனதில் சித்திரமாக உருவாகி இருந்தது. மணி ரத்னத்தின் பம்பாய், கமல் ஹாசனின் ஹே ராம் ஆகிய படங்களின் வலுவான பாதிப்பு அத்திரைக்கதையில் இருந்தது. 2005ல் சினிமா பின்புலமுள்ள சில‌ நண்பர்கள் அறிமுகமான போது அவர்களிடம் இக்கதையை விவாதித்திருக்கிறேன். பிற்பாடு நான் திரைத்துறையில் நுழைய எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. என் மனதின் படிமமாகவும் சில‌ காகிதக் குறிப்புகளாகவுமே எஞ்சி விட்டது S6.


அவ்வப்போது அது குறித்த செய்திகளைக் கவ‌னித்து வந்தேன். இடையில் உச்சநீதிமன்றம் அமைத்த சிற‌ப்புப் புலனாய்வுக் குழு நரேந்திர மோடியைக் கலவரங்களில் தொடர்பற்றவர் என அறிவித்தது. கடந்த ஜூனில் 2014 பொதுத் தேர்தல்களுக்கு பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதும் என் மூளையின் ஸ்லீப்பர் செல்கள் விழித்துக் கொண்டன. ஒரு வெளிப்படையான ஃபாசிஸ்ட்டின் கையில் தேசத்தின் உச்சப்பதவியை ஒப்படைப்பதன் பயம் அது.

குஜராத் கலவரங்கள் குறித்து முழுமையான வரலாற்றுப் பார்வையை அளிக்கும் ஒரு புத்தகம் தமிழில் இல்லை என்பதை அப்போது தான் உணர்ந்தேன். கடந்த‌ அக்டோபரில் தான் புத்தகம் எழுதலாம் எனப் பேசி முடிவானது. ஒரு மாதம் தகவல் சேகரிப்பு ஒரு மாதம் புத்தக ஆக்கம் என குறுகிய காலத்தில் அதிவேகமாக‌ இந்நூலை உருவாக்கி முடித்திருக்கிறேன்.

மிகத் திறந்த மனதுடன் மிகத் துல்லிய நடுநிலைமையுடன் தான் புத்தகத்தை அணுகினேன். கலவரங்களின் கோரத்தை விவரிக்கும் அதே நேரத்தில் அரசின் தரப்பில் வைக்கப்படும் வாதங்களையும் இப்புத்தகத்தில் சொல்லி இருக்கிறேன். மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றி மட்டுமில்லாது மோடிக்கு ஆதரவான தீர்ப்புகளையும் பேசி இருக்கிறேன்.

இந்த நூல் இந்து மதம் அல்லது நரேந்திர மோடிக்கு எதிரான புத்தகமோ இஸ்லாம் அல்லது காங்கிரஸுக்கு ஆதரவான முயற்சியோ அல்ல. நடந்த வரலாற்றை முடிந்த அளவுக்கு மிகத் துல்லியத்துடன் பதிவு செய்வது மட்டுமே நோக்கம்.

*

புத்தகத்தின் அட்டைப்படம் எனக்கான‌ ஓர் ஆச்சரியத்தை ஒளித்து வைத்திருக்கிறது. அது எரிந்து கொண்டிருக்கும் S6!

Comments

Anonymous said…
பொதுவாக எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை, ஆனால் உங்கள் புத்தகத்தை வாங்கி படிக்கும் எண்ணத்தில் உள்ளேன். நீங்கள் நிஜத்தை அருகில் நெருங்கி இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

Elangovan Ramasamy
Sankar said…
வாழ்த்துக்கள்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி