ஸ்டாக்ஹோம் அறிவிப்புகள்
ஆழம் - நவம்பர் 2013 இதழில் 2013 நொபேல் பரிசுகள் குறித்த என் சுருக்கமான அறிமுகக் கட்டுரை வெளியாகியுள்ளது.
*******
2013ம் ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என்ற ஆறு துறைகளுக்கான நொபேல் பரிசுகளும் அக்டோபர் 2ம் வாரத்தின் வெவ்வேறு தேதிகளில் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன (அமைதி மட்டும் ஆஸ்லோவில்). அவை பற்றிய ஒரு பறவைக்கோணம் இது.
*
2013 மருத்துவ நொபேல்
2013 மருத்துவ நொபேல் பரிசை அமெரிக்கர்கள் ஜேம்ஸ் ரோத்மேன், ராண்டி செக்மேன், ஜெர்னானியர் தாமஸ் சுடாஃப் ஆகியோர் பகிர்கின்றனர். "செல்களுக்கு இடையே குமிழ்களாக நகரும் மூலக்கூறுகளின் போக்குவரத்து எவ்வாறு சீராக நடைபெறுகிறது என்பது தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக" இவர்களுக்கு பரிசு.
செல்கள் மூலக்கூறுகளை உற்பத்தி செய்கின்றன. இவை மற்ற செல்களுக்கு பல்வேறு வேலைகளுக்காக சரக்கு போல் அனுப்பி வைக்கப்படுகின்றன. பல மூலக்கூறுகள் கூட்டாகி குமிழ்களின் வடிவில் (Vesicle) இவை நகர்கின்றன. சரியான இடத்திற்கு சரியான நேரத்தில் இவை எப்படி கொண்டு சேர்க்கப்படுகின்றன என்பதைத் தான் இந்த விஞ்ஞானிகள் விளக்கினார்கள்.
ஜேம்ஸ் ரோத்மேன் மூலக்கூறு குமிழ்கள் சென்று சேர வேண்டிய செல்லோடு பிணையும்படி இயங்கும் சில ப்ரோட்டீன்களைக் கண்டறிந்தார். குமிழ்கள் செல்களுக்கிடையே நகர்வதற்கு உதவும் சில ஜீன்களை ராண்டி செக்மேன் கண்டுபிடித்தார். சென்று சேர வேண்டிய வேண்டிய சரியான செல் பற்றி குமிழ்களுக்கு தரப்படும் சைகைகளை ஆராய்ந்தார் தாமஸ் சுடாஃப்.
இது செல்வினையியலில் (Cell Physiology) அடிப்படையான கண்டுபிடிப்புகள். நரம்பு மண்டல நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள், நீரிழிவு நோய் ஆகியவற்றை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள இக்கண்டுபிடிப்பு உதவியது.
*
2013 இயற்பியல் நொபேல்
2013 இயற்பியல் நொபேல் பரிசை பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃப்ரான்கோயிஸ் எங்க்லெர்ட், பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் இருவரும் பகிர்கின்றனர். "அணுத்துகள்கள் எப்படி நிறையைப் பெற்றன என்பதை சித்தாந்தரீதியாக விளக்கியதற்காக (சமீபத்தில் செர்ன் லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் நடத்தப்பட்ட அட்லாஸ் மற்றும் சிஎம்எஸ் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட அடிப்படைத் துகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்டது)" இப்பரிசு.
1964ல் இவ்விரு விஞ்ஞானிகளும் தனித்தனியாக இந்த சித்தாந்தத்தை மொழிந்தனர் (எங்க்லெர்ட் மறைந்த ராபர்ட் ப்ரௌட் என்பவருடன் இணைந்து).
பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே துகள்களால் ஆனது. துகள்கள் ஈர்ப்பு விசைகளால் கட்டப்பட்டுள்ளன. ஹிக்ஸ் ஓர் அடிப்படைத் துகள். இத்துகள் தான் நியம மாதிரியின் அஸ்திவாரமே. இது வெளியெங்கும் வியாபித்திருக்கும் கண்களுக்குப் புலப்படா ஒரு புலத்திலிருந்து உருவாகிறது. இந்தப் புலத்திலிருந்து தான் ஹிக்ஸ் துகள் நிறையைப் பெறுகிறது. இது எப்படி நடைபெறுகிறது என்று தான் இவ்விரு விஞ்ஞானிகளும் விவரித்தனர்.
நியம மாதிரியில் மிக அடிப்படையான கேள்வியை ஹிக்ஸ் துகள் நிரப்புகிறது என்றாலும் பிரபஞ்சத்தைப் பற்றி முழுமையாக அறிய இன்னும் நிறைய தூரம் போக வேண்டும்!
*
2013 வேதியியல் நொபேல்
2013 வேதியியல் நொபேல் பரிசு ஆஸ்திரியாவைச் சேர்ந்த மார்டின் கார்ப்ளஸ், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த மைக்கல் லெவிட், இஸ்ரேலைச் சேர்ந்த ஏரி வார்ஷல் மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. "சிக்கலான ரசாயன அமைப்புகளுக்கு பல்அளவை மாதிரிகளை உருவாக்கியதற்காக" இப்பரிசு.
1970களில் வேதிவினைகளின் மாதிரிகளை உருவாக்க மிகச் சிரமப்பட்டார்கள். ப்ளாஸ்டிக் மற்றும் மரக்குச்சிகள் கொண்டு கைகளால் உருவாக்கினார்கள். அப்போது இவற்றை உருவாக்க இரு முறைகளைப் பின்பற்றினார்கள். பெரிய மூலக்கூறுகளுக்கு எளிமையான கணக்குகளால் ஆன நியூட்டனின் இயற்பியலையும், சிறிய மூலக்கூறுகளுக்கு சிக்கலான புதிர்களால் ஆன துகள் இயற்பியலையும் பின்பற்றினார்கள். இம்மூவரும் இரண்டையும் ஒருங்கிணைத்து கணிப்பொறி மூலம் வேதிவினைகளுக்கான மாதிரிகளைத் துல்லியமாகவும் வேகமாகவும் எளிதாகவும் உருவாக்கும் நிரல்களை உருவாக்கினார்கள்.
இக்கண்டுபிடிப்புகளின் நீட்சியாய்த் தான் இன்று டாக்டர்களுக்கு ஸ்டெத்தாஸ்கோப் எப்படி இன்றியமையாததோ அதே போல் வேதியியலாளர்களுக்கு கணிணி பாவனை பயன்படுகிறது!
*
2013 இலக்கிய நொபேல்
2013 இலக்கிய நொபேல் பரிசு கனடாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோவுக்கு அளிக்கப்படுகிறது. "சமகாலச் சிறுகதையின் பிதாமகராக இருப்பதால்" இவருக்கு இப்பரிசு. இலக்கிய நொபேலை வென்றுள்ள 13வது பெண் இவர். இப்பரிசைப் பெறும் முதல் கனடா பெண்ணும் இவர் தான். சிறுகதை பிரிவுக்கு இப்போதுதான் முதல் முறையாக நொபேல் பரிசு வழங்கப்படுகிறது.
மிக நுட்பமான கதை சொல்லலுக்குச் சொந்தக்காரர் ஆலிஸ். உளவியல் ரீதியான யதார்த்தத்தையும் தெளிவான கதை சொல்லலும் இவர் கதையின் கூறுகள். சிறிய நகரங்களின் சூழலில் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாழ்வை நோக்கிய பயணத்தில் எழும் அற முரண்பாடுகள், உறவுச் சிக்கல்கள், உரசும் போராட்டங்கள், தலைமுறை இடைவெளிகள், ஆகியவற்றைச் சித்தரிக்கின்றன இவரது புனைவு.
சில விமர்சகர்கள் இவரை கனடாவின் செகாவ் என வர்ணிக்கின்றனர்.
*
2013 அமைதி நொபேல்
2013 அமைதி நொபேல் பரிசு ரசாயன ஆயுங்கள் தடுப்பு நிறுவனத்திற்கு (ஓபிசிடபுள்யூ) வழங்கப்படுகிறது. "ரசாயன ஆயுதங்களை ஒழிப்பதற்காக பரவலான முயற்சிகளை மேற்கொண்டதற்காக" இப்பரிசு.
ஓபிசிடபுள்யூ ரசாயன ஆயுதங்களின் தயாரிப்பைக் கண்காணித்து அழிக்கும் சர்வதேச நிறுவனம் ஆகும். அமைதி நொபேலுக்கான தேர்வுப் பட்டியலில் பாகிஸ்தானின் மலாலா யூசுஃப்சய் கூட இருந்தார்.
முதலாம் உலகப்போரில் பரவலாய் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு 1925ல் கொண்டுவரப்பட்ட ஜெனீவா ஒப்பந்தம் ரசாயன ஆயுதப் பிரயோகத்தைத் தடை செய்தது. ஆனால் இது அவற்றின் தயாரிப்பை தடை செய்யவில்லை. இதனால் இரண்டாம் உலகப் போரிலும் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. பிற்பாடு பல தருணங்களில் ரசாயன ஆயுதங்கள் ராணுவங்களாலும், போராளிகளாலும், தீவிரவாதிகளாலும் பயன்படுத்தப்பட்டன.
1992 - 1993ல் தான் உலக அளவில் ஒரு ரசாயன ஆயுதத் தடை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டு 1997ல் அமல்படுத்தப்பட்டது. ஓ.பி.சி.டபுள்யூ தான் இப்பொறுப்பை எடுத்து செயல்படுத்தியது. தன் தொடர் பணிகள் மூலம் 189 நாடுகளில் ரசாயன ஆயுதங்களை அப்புறப்படுத்தி விட்டது. இன்னும் சில நாடுகள் இதை ஏற்கவில்லை. சமீபத்தில் கூட சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்ததும், அதை விசாரித்து அவற்றை அழித்தது.
சில நாடுகளில் ஓபிசிடபுள்யூ விதித்த ஏப்ரல் 2012 கெடுவுக்குள் ரசாயன ஆயுதங்களை அழிக்கவில்லை. அவற்றில் அமெரிக்காவும் ரஷ்யாவும் அடக்கம்!
*
2013 பொருளாதார நொபேல்
2013 பொருளாதார நொபேல் அமெரிக்காவைச் சேர்ந்த யூஜின் ஃபாமா, லார்ஸ் பீட்டர் ஹான்சென், ராபர்ட் ஷில்லர் ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது. "சொத்து விலைகள் குறித்து செயலறிவுசார் பகுப்பாய்வு செய்ததற்காக" இப்பரிசு.
சொத்து என இதில் சொல்லப்படுவது பங்குகள், பாண்டுகள் முதலியவை. 1960களில் யூஜின் ஃபாமா இன்னும் சிலருடன் சேர்ந்து அடுத்த சில நாட்களின் அல்லது சில வாரங்களின் பங்கு விலைகளின் போக்கை நிர்ணயிப்பது சிரமம் எனக் கண்டறிந்தார். பங்கு விலைகளை பங்கு விலைகளை சில நாட்களுக்கே அனுமானிக்க முடியாத போது சில வருடங்களுக்கு சொல்வது நினைத்துப் பார்க்கவே முடியாது என்பது தான் பொதுவான புரிதல். ஆனால் 1980களில் ராபர்ட் ஷில்லர் இதை மறுத்து அடுத்த சில வருடங்களின் பங்கு விலைகளை சில முறைகளின் மூலம் கண்டறியலாம் என நிரூபித்தார். இதற்குப் பின் லார்ஸ் பீட்டர் ஹான்சென் சில புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தி சொத்து விலைகளை அறியும் முறைகளைக் கண்டறிந்தார்.
சொத்து விலை நிர்ணயம் தொடர்பான புரிதலில் இவை முக்கிய மைல்கற்கள்.
*
நொபேல் பரிசுகள் மனித குலத்தின் முன்னேற்றத்தை சில அங்குலமேனும் நகர்த்தியவர்களுக்கான அங்கீகாரம். இவர்கள் வாழ்த்துகளுக்கல்ல; வணக்கத்துக்குரியவர்கள்!

Comments