தோட்டா எனும் சரண் பட டைட்டில்

சூரியன் பதிப்பக‌த்திலிருந்து வெளியாகி இருக்கும் 'ஆல்தோட்ட பூபதி' ஜெகனின் (@thoatta) ட்வீட்களின் தொகுப்பான ட்விட்டர் மொழி நூலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை இது (சில மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டது):

*******

அடிப்படையில் ட்விட்டர் ஒரு சமூக வலைதளம். நட்புக்காக, ரசனைக்காக, பகிரலுக்காக‌, இன்னும் என்ன‌ என்னமோவிற்காக நவீனத் தொழில்நுட்பத்தின் குழந்தைகளான‌ கணிப்பொறி / செல்பேசி ஸ்பரிசம் கொண்ட உலகம் ட்விட்டரில் குழுமி இருக்கிறது. இன்றைய தேதியில் இவர்களின் எண்ணிக்கை 20 கோடி.


ட்விட்டர் என்பது விஞ்ஞானம் வரைந்த கலை. அது ஒரு சுவாரஸ்ய சவால்; அலுக்காத விளையாட்டு; ஆபத்தற்ற போதை. 140 கேரக்டர்கள் மட்டுமே அனுமதி. அதற்குள் வாசிப்பவனை ஈர்க்க வேண்டும். முடிந்தால் மயக்க வேண்டும். அடுத்த 140-ஐத் தேடச் செய்ய வேண்டும். தன்னைப் போல் அவனையும் அதில் ஆர்வத்துடன் கரையச் செய்ய வேண்டும். ரசனையின் வழி வாசகனை எழுத்தாளன் ஆகத் தூண்டும் ஊடகம் ட்விட்டர். நுகர்வோன் வியாபாரி ஆகும் விசித்திரம்!

திரைப்படம் போல், தொடர்கதை போல், புதுக்கவிதை போல் ட்வீட்களும் வெகுஜன இலக்கிய வடிவமாக உருவாகி வருகிறது. தமிழில் அரட்டைகேர்ள் மற்றும் அராத்து உடனடி உதாரணங்கள். ஜெயமோகன், சாரு நிவேதிதா, பா. ராகவன் போன்ற சமகாலத்தின் முக்கிய எழுத்தாளர்கள் இதைக் கவனித்து இவற்றின் சுவாரஸ்யத்தைச் சிலாகிக்கும் அளவு தரத்துடன் ட்விட்டர் படைப்பாளிகள் எழுதி வருகின்றனர். இன்னும் சிலர் ட்விட்டர் என்ற துருப்புச் சீட்டை மட்டும் கையில் வைத்துக் கொண்டு தமிழின் பிரபல சஞ்சிகைகளில் தொடர் எழுத அழைக்கப்படுமளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். இணையம் பயன்படுத்தும் சிறுபான்மையினரைத் தாண்டி லட்சக்கண‌க்கான வெகுஜனத் திரளை இவர்களின் எழுத்து சென்றடைய இது முக்கியத்திறப்பு. பேயோன் ஓர் உதாரணம். தோட்டா மற்றுமோர் உதாரணம்.

தோட்டா ட்விட்டர் வந்தது 4 மார்ச் 2011ல். இரண்டரை ஆண்டுகளில் கிட்டதட்ட பத்தாயிரம் ஃபாலோயர்கள். இது ஒரு சாதனை. அதுவும் இணையவெளியில் ஓர் ஆணாக இருந்து இதை அடைவது அசாத்தியச் சாதனை. எழுத்தில் சரக்கின்றி இதை அடைந்திருக்கவே முடியாது (காமம் பற்றியெல்லாம் எழுதாது இருப்பதால் சாக்லேட்பாய் இமேஜுடன் பெண் ரசிகைகளும் அதிகம் இருப்பதாய்க் கேள்விப்படுகிறேன்). தோட்டாவின் ட்வீட்களை அசல், அம‌ர்க்களம், அட்டகாசம் என தாராளமாய்ச் சொல்லலாம். ஃபாலோயர்களைப் பொறுத்தவரை எப்போதும் அவர் ஜேஜே, வசூல் ராஜா தான். பெண்களை விசாரித்தால் காதல் மன்னன், இதயத்திருடன், பார்த்தேன் ரசித்தேன் என்பதும் தெரிய வரலாம் (இவ்வாறு இந்த முன்னுரையின் வினோதத் தலைப்பை ஜஸ்டிஃபை செய்கிறேன்).

ட்விட்டரைப் பொறுத்தவரை தோட்டா ஒரு மாஸ் எண்டர்டெய்னர். ஐபிஎல் சமயங்களில் மட்டும் பொறுத்துக் கொண்டால் தோட்டாவை ட்விட்டரில் தாராளமாய் ரசிக்கலாம். ஆனந்த விகடன் வலைபாயுதே மற்றும் குங்குமம் வலைப்பேச்சு இரண்டிலும் தோட்டாவின் ட்வீட் இடம் பெறாத வாரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். "தோட்டா ட்வீட்டை ஆர்டி செய்வதற்குப் பெயர் ஓவர் கான்ஃபிடன்ஸ்" என யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது, எவ்வளவு சத்தியமான‌ வாக்கு!

தனிப்பட்ட முறையில் எனக்கு அவரது நுண்மையான சில‌ அவதானிப்புகள் பிடிக்கும் ("யோசித்து பார்த்தால், உண்மையில் ஸ்கூல் யூனிபார்ம் தான் குழந்தைகளுக்கு மாறுவேடம்!", "எப்பவாவது தாயம் விழுந்தா அதிர்ஷ்டம், எப்பவுமே தாயம் விழுந்தா துரதிர்ஷ்டம்!") - ஆனால் ஏனோ அவற்றை அவர் அதிகம் தொடுவதில்லை. அப்புறம் சமகால நிகழ்வுகளை ஒட்டிய அவரது அங்கதம் மிக்க குறுவிமர்சனங்கள் விருப்பம். சொல்லப்போனால் இந்த டைமிங் கமெண்ட்களின் எக்ஸ்ட்ரா லார்ஜ் வடிவம் தான் குங்குமம் இதழில் வெளிவந்த ‌நயம்படப் பேசு மற்றும் குட்டிச்சுவர் சிந்தனைகள் தொடர்கள். பொதுவாக இவை கேலி, கிண்டல், நையாண்டி வகையறா எனினும்  ஒவ்வொரு முறையும் சொல்லத் தேர்ந்தெடுக்கும் வடிவத்தில் வெரைட்டியான க்ரியேட்டிவிட்டி காட்டி இருப்பது தான் இத்தொடர்களின் முக்கியமான சாதனை. ட்விட்டரின் 140 கேரக்டர்களிலிருந்து வெளியேறி எழுத்தாளன் என்ற ஒற்றைக் கேரக்டர் உருவாகிக் கொண்டிருப்பதைத்தான் இவை சொல்கின்றன.

சக‌ எழுத்தாளனாய், அக‌ சினேகிதனாய் அவரை வரவேற்கிறேன். அவரது புதிய புத்தகத்திற்கு என் வாழ்த்துக்கள். வழமை போல் இதுவும் வெல்லும்.

தோட்டா - Bull's-eye!

*

Comments

Anonymous said…
There's certainly a lot to know about this topic.
I love all of the points you've made.

Here is my blog :: green coffee weight loss
Sankar said…
> வெரைட்டியான க்ரியேட்டிவிட்டி
> டைமிங் கமெண்ட்களின் எக்ஸ்ட்ரா லார்ஜ்
> சாக்லேட்பாய் இமேஜுடன்
> மாஸ் எண்டர்டெய்னர்
> Bull's-eye!

மனதில் நெருடலாகப் பட்டதைச் சொல்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். ஒரு தமிழ் நூலுக்கான முகவுரையில் இத்தனை ஆங்கில சொற்கள் தேவையா ? இதற்கு ஆங்கில நூல்களையே வாங்கிப் படித்துப் போகலாமே :)
இரண்டு விஷயங்கள்:

1) நான் தனித்தமிழில் எழுத ஒருபோதும் பிரயத்தனப்படுவதில்லை. என் எழுத்து மொழி என்று ஒன்று இருக்கிறது. அது என் பேச்சு மொழியிலிருந்தே உருவாகிறது. அதில் தான் நான் எழுதுகிறேன். அது தமிழால் மட்டும் ஆனதல்ல. அவசியப்படுகையில் சமஸ்கிருத இறக்குமதிச் சொற்களையும், ஆங்கிலத்தையும் எடுத்துக் கொள்கிறேன். அதை எந்தப் பூச்சும் இன்றி முன்வைக்கிறேன்.முழுக்கத் தமிழில் எழுத மெனக்கெடுவதையே நான் பூச்சாகத் தான் பார்க்கிறேன். தமிழை வளர்க்க வேறு மார்க்கங்கள் உண்டு. இயல்பிலிருந்து வழுவியே அதைச் செய்ய வேண்டும் என அவசியமில்லை என்பதே என் கருத்து.

2) அந்த நூலின் உள்ளடக்கம். அது ஃபேன்ஸியானது. மிக மிக ஜாலியான உள்ளடக்கம். அதன் ஆசிரியருக்கான அடைமொழியிருந்தே (சிந்தனைச் சிற்பு சயனைடு குப்பி) அது புரியும். அதை மிக நவீனமான மொழிக்குள் வைத்துப் பிதுக்க விரும்பவில்லை. அதனால் அந்தப் புத்தகத்தைப் பற்றி இயல்பாகப் பேசுகையில் என்ன சொல்வேனோ அதையே எழுதிக் கொடுத்தேன். அதில் ஆங்கிலம் இருந்ததைக் கவனித்தும் திருத்த முனையவில்லை. அது அப்படித் தான் இருக்க வேண்டும் என்றே தோன்றியது. அதன் இயல்பைப் பாழ்படுத்த விரும்பவில்லை. மிக கான்சியஸாகவே எடுக்கப்பட்ட முடிவு தான் அது. (இப்போது இந்தப் பதிலிலுமே கூட அப்படித் தான் ஆங்கிலம் நுழைந்து விட்டது!)
Sankar said…
உங்கள் விளக்கத்‌துக்கு நன்றி :) என்னால் ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும், உங்கள் கருத்தை மதிக்கிறேன் :)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி