துன்பியல் த்ரில்லர்
ஆழம் - அக்டோபர் 2013 இதழில் Madras Cafe திரைப்படம் குறித்த என் விமர்சனக் கட்டுரை வெளியாகியுள்ளது.
*******
ஈழத்தில் பிரச்சனை எனில் தமிழ் நடிகநடிகையர் திரண்டு கறுப்புச்சட்டையணிந்து இராமேஸ்வத்தில் கூடிக்குரல் கொடுப்பது பழக்கம் தான் என்றாலும் தமிழில் ஈழப் போரின் பின்புலத்தை வைத்து எடுக்கப்பட்ட தீவிரமான படங்கள் மிகக்குறைவே.
ஆர்கே செல்வமணியின் குற்றப்பத்திரிக்கை, சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட், மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால், ஏஎம்ஆர் ரமேஷின் குப்பி ஆகியவற்றைச் சொல்லலாம். மெயின்ஸ்ட்ரீம் சினிமா அல்லாமல் லீனா மணிமேகலை செங்கடல் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். சுப்ரமணியம் சிவா தற்போது ஜெயமோகனின் உலோகம் நாவலை படமாக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பிரச்சனையை மேலோட்டமாய்ப் பேசும் தெனாலி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், நந்தா, ஆயிரத்தில் ஒருவன், பில்லா - 2, நீர்ப்பறவை, கடல், மரியான் போன்றவற்றை விடுத்துப் பார்த்தால் இது தான் உருப்படியான பட்டியல்.
தற்போது இந்தியில் சூஜித் சர்க்கார் Madras Cafe படத்தில் இதைத் தொட்டிருக்கிறார்.
*
பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தமிழ் மக்களையும் ஈழப் போரையும் தவறாகச் சித்தரித்திருப்பதாக இப்படத்துக்கு தடை கோரியதன் காரணமாக தமிழகஅரசு இத்திரைப்படத்துக்கு தடை விதித்திருக்கிறது.
சற்று நிதானமாக படத்தை அணுகி கவனித்தால் படத்தில் ஈழத் தமிழ் மக்கள் பற்றி எந்த தவறான சித்தரிப்பும் இல்லை. இலங்கையில் தமிழீழ மக்களின் உரிமைக்காகப் போராடிய அமைப்புகளின் மீது குறிப்பாய் விடுதலைப்புலிகளைக் கூட இப்படம் தவறாகக் காட்டவில்லை. எதிர்மறையாகக் காட்டப்பட்டுள்ள ஒரே விஷயம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் ஆளுமை மட்டுமே. அதுவும் வரலாற்றைத் திரிக்கும் வேலை ஏதும் இல்லை. அவரது கருத்துக்கள், பிடிவாதம் குறித்த விமர்சனங்களே இடம் பெறுகின்றன. ஒரு சராசரி வட இந்தியர் எவரோடு நீங்கள் ஈழப் போர் குறித்து உரையாடினாலும் அவர் பிரபாகரன் குறித்து இந்த வகை நிலைப்பாடே கொண்டிருப்பார். இயக்குநரும் அதையே முன்வைக்கிறார்.
படம் ஓர் ஈழத் தமிழர் / விடுதலைப்புலியின் பார்வையில் காட்டப்படவில்லை; ஒரு ரா அதிகாரி தான் கதை சொல்லி. அதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கு குறித்து புலனாய்வில் நேரடியாய்ப் பணி புரிந்த சிபிஐ அதிகாரிகள் கார்த்திகேயன், ரகோத்தமன் இருவரும் தனித்தனியாய் நூல்கள் எழுதி இருக்கிறார்கள். அவற்றுக்கிடையே கூட குறிப்பிட்ட அளவிலான முரண்கள் இருக்கின்றன. அதனால் இவ்விஷயத்தில் முழு உண்மை என்பது யாருக்குமே தெரியாது என்றே தோன்றுகிறது. சுஜீத் சர்கார் தனக்குத் தெரிந்த விஷயங்களைக் கொண்டு தன் கருத்துக்களை இப்படத்தில் பதிந்திருக்கிறார். அவ்வளவு தான்.
இதில் நமக்கு மறுப்பு இருந்தால், சரித்திரம் பிழையாகக் காட்டப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அதை எழுத்தின் மூலமோ பேச்சின் மூலமாகவோ வேறொரு படத்தின் மூலமாகமோ பதிவு செய்வதே ஜனநாயக வழியாக இருக்க முடியும்.
*
பாலஸ்தீனத் தீவிரவாதிகளுக்கு எதிரான இஸ்ரேல் அரசின் ரகசிய வேட்டையை சித்தரிக்கும் ஸ்டீவன் ஸ்பீஸ்பெர்க்கின் Munich, அமெரிக்க சிஐஏவின் ஒஸாமா பின் லேடன் தேடுதல் வேட்டையைக் காட்டும் கேத்ரின் பிகலோவின் Zero Dark Thirty போன்ற படங்களோடு சூஜித் சர்க்காரின் Madras Café-ஐ ஒப்பிடத் தோன்றுகிறது.
அடிப்படையில் ராஜீவ் கொலை சதி பற்றிய படம் என்றாலும் இலங்கை ஈழப் பிரச்சனையில் ரா என்ற இந்திய உளவு அமைப்பின் கை எவ்வளவு தூரம் ஆழப் பதிந்திருந்தது என்ற உண்மையை முகத்தில் அறைகிறது. எந்த ஊரில் இருக்கிறது எனத் தெளிவாய்க் குறிப்பிடப்படாத Madras Café என்ற ஹோட்டலில் வைத்து தான் ராஜீவ் படுகொலைக்கான ஆரம்ப விதை ஊன்றப்பட்டிருக்கிறது என்கிறது படம்.
இது ஜேம்ஸ் பாண்ட் வகை சாகஸப்படம் அல்ல. எந்த வித ஹீரோயிஸமும் இல்லாது இயல்பாய் எடுக்கப்பட்டிருக்கிறது (“Use brains, not muscle” என வசனமே இருக்கிறது). ஆனாலும் படம் பரபரப்பு தூவின சுவாரஸ்யத்துடன் நகர்கிறது.
படத்தின் திரைக்கதை ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு தர்க்கத் துண்டுகளாக பிரிந்து கிடக்கிறது. ஒன்று இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து திருப்பிப் பெறப்பட்ட 1990ம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையில் தமிழர் உரிமைக்காகப் போராடும் அமைப்புகளை பலவீனமாக்கும் நோக்கோடு ரா உளவு அமைப்பால் இலங்கையின் ஜாஃப்னாவுக்கு அனுப்பப்படும் ஓர் இந்திய ராணுவ வீரன் பற்றியது. இன்னொன்று 1991ன் முற்பகுதியில் அவன் இந்தியா திரும்பிய பின், மக்களவைத் தேர்தலை ஒட்டி ஓர் ஈழத் தமிழ் அமைப்பினரால் முன்னாள் இந்தியப் பிரதமரின் உயிருக்குக் குறி வைக்கப்பட்டிருப்பது அறிந்து அதை முறியடிக்க முயற்சிப்பது.
மிகுதேடல் நிறைந்த வாசிப்புக்கும் உழைப்புக்கும் ஊடே சோம்நாத் டே மற்றும் சுபேந்து பட்டாச்சார்யா இருவரும் படத்தின் திரைக்கதையைப் புனைந்திருப்பது புலனாகிறது. நிஜ சம்பவங்களைப் புள்ளிகளாய் வைத்துக் கொண்டு திறமையாகக் கோடுகளால் இணைத்து அழகான சித்திரமாக திரைக்கதை அமைத்திருக்கின்றனர்.
சரித்திரத்தை நாவலாக்கும் / திரைப்படமாக்கும் முயற்சியில் பயன்படும் அதே நுட்பம் தான் இதிலும் உபயோகிகப்பட்டிருக்கிறது - கற்பனைப்பாத்திரம் ஒன்றை நாயகனாக்கி சரித்திரத்தில் பயணிக்கச் செய்வது. சாண்டில்யனின் ஜலதீபம், ர.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம், அகிலனின் நெஞ்சின் அலைகள், சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம், கமல்ஹாசனின் ஹே ராம், ப்ரியதர்ஷனின் சிறைச்சாலை போன்றவை உதாரணங்கள். இதில் மேஜர் விக்ரம் சிங் பாத்திரம்.
மேஜர் விக்ரம் சிங்காக ஜான் ஆப்ரகாம் குறை என்று ஏதும் குறிப்பிட முடியாத இயல்பில் நடித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. படத்தில் நடிப்பில் மிகக் கவர்ந்தவர்கள் இருவர். ஒருவர் இலங்கையில் பணிபுரியும் ப்ரிட்டிஷ் யுத்த கள செய்தியாளர் ஜெயாவாக நடித்திருக்கும் இந்தி நடிகை நர்கீஸ் ஃபக்ரி; மற்றவர் ஜாஃப்னாவில் ரா உளவுப்புரிவு அதிகாரியாகப் பணிபுரியும், இந்தியாவுக்கு துரோகம் செய்யும் பாலா பாத்திரம் ஏற்றிருக்கும் கன்னட நாடக நடிகர் ப்ரகாஷ் பேலாவாடி. இருவரும் மிக யதார்த்தமான நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பிரபாகரனை ஒட்டிய அண்ணா பாஸ்கரன் பாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் ரத்னமும் பரவாயில்லை. படத்தில் நிறைய தமிழ் வசனங்களும் உண்டு.
இதில் வரும் பாலா கதாபாத்திரம் 1987ல் ரா அதிகாரியாக இருந்து அமெரிக்காவின் சிஐஏவிடம் ஒரு பெண் விவகாரத்தில் சிக்கி, அதை மறைக்க அவர்களுக்கு உளவு சொல்லிக் கொண்டிருந்து மாட்டிக் கொண்ட கேவி உன்னிக்கிருஷ்ணன் என்பவரை ஒட்டியது எனத்தோன்றுகிறது. படத்தின் கதை நடக்கும் காலம் இச்சம்பவத்துக்குப் பிந்தையது என்ற போதிலும், புலிகளுக்கு அல்ல, சிஐஏவுக்கே உளவு சொன்னார் என்றாலும் திரைக்கதை சுவாரஸ்யத்துக்காக அதைப் பயன்படுத்தி உள்ளார்கள். இது போல் ரா அமைப்பின் உள்ளரசியல் போன்றவற்றையும் கோடி காட்டுகிறது.
குற்றப்பத்திரிக்கையில் ராஜீவ் கொலையாளிகள் நுட்பமற்று சித்தரித்திருந்தாலும் அது தான் முதல் முயற்சி. பிறகு குப்பி, டெரரஸ்ட் படங்களில் யதார்த்தமான பதிவுகள் இடம் பெற்றன. மெட்ராஸ் கஃபே படத்திலும் அதற்கு இணையான துல்லியத்தோடு கிட்டத்தட்ட அனைத்து பாத்திரங்களும் காட்டப்பட்டிருக்கின்றன.
படத்தில் எல்டிடிஈ, பிரபாகரன், காங்கிரஸ், ராஜீவ் காந்தி என நேரடியாகப் பெயர் குறிப்பிடப்படவில்லை. மாற்றுப் பெயர் பயன்படுத்தி இருக்கிறார்கள். ரா மட்டும் அப்படியே. விக்ரம் நாவலில் ரா (R&AW - Research & Analysis Wing) அமைப்புக்கு ப்ரா (BR&A – Bureau of Research & Analysis) என மாற்றுப் பெயர் சூட்டி இருப்பார் சுஜாதா!
படத்தின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. கமல்ஜீத் நேகி என்பவர் பணியாற்றி இருக்கிறார். கலை இயக்குநர் நிஜத்துக்கு வெகு அருகில் கொண்டு வர மெனக்கெட்டிருக்கிறார். உதாரணமாய் ரா அலுவலங்கள் எல்லாமே அபாரம்.
நகைச்சுவை, கவர்ச்சி, பாடல்கள், சண்டை என படத்தின் மையை இழையைச் சீரழிக்கும் மசாலா சமாச்சாரங்கள் இல்லை. தட்டையாக அமைக்கப்பட்டிருக்கும் விக்ரம் சிங்கின் மனைவி பாத்திரம் தவிர படத்தில் பெரிய குறை ஏதுமில்லை.
ஒரு வரலாற்று நிகழ்வை அசலாகக் காட்சிப்படுத்தி இருக்கும் படக்குழுவினருக்கு மரியாதை செலுத்தும் முகமாகவும் வெளிப்பாட்டு சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டும் தடையை நீக்கி இப்படம் தமிழகத்தில் வெளியிடப்பட வேண்டும்.

Comments