ஓநாயும் ஆட்டுக்குட்டியும் : என் புரிதல்

இன்று ரோஸா வச‌ந்தின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பற்றிய ஒரு பதிவை வாசிக்க நேரிட்டது. அதன் ஒன்லைன் என்னவென்றால் (அவரது வார்த்தைகளிலேயே) "தர்க்கரீதியான அடித்தளம் என்று ஒன்று இல்லவே இல்லாமல், அந்தரத்தில் சீட்டுமாளிகையாக கதை கட்டப்பட்டுள்ளது". அவர் நான் மிக மதிக்கும் சிந்தனையாளர்களுள் ஒருவர் என்பதாலும் படம் எனக்கு வேறு விதமான அனுபவத்தை அளித்தது என்பதாலும் நான் சில விஷயங்களைப் பேச விரும்புகிறேன். அவர் பாயிண்ட்களை உடைத்து சவால் விடும் நோக்கில் அல்லாமல் என் புரிதலை சுயபரிசீலனை செய்து கொள்ளும் பொருட்டு மட்டுமே இதை எழுதுகிறேன் (ஒருவேளை மிஷ்கினே இதிலிருந்து வேறுபடக்கூடும்).


படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகி விட்டது என்பதால் படத்தின் கதையை இங்கே பகிர்கிறேன். ஆனால் படம் பார்த்திராதவர்கள் (ஆனால் பார்க்கும் உத்தேசம் இருப்பவர்கள்) தயவு செய்து இதை முன்பே வாசித்து படம் பார்க்கும் அனுபவத்தை, சஸ்பென்ஸை இழக்க வேண்டாம். படம் பார்த்த பின் உங்கள் புரிதலோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

வுல்ஃப் என்பவன் தம்பா என்ற க்ரிமினலிடம் வேலை பார்க்கும் பெய்ட் கில்லர். காசுக்கு கொலை செய்பவன். அவன் நரிகளை மட்டுமே கொல்கிறான் என்று சொல்வது சமூக விரோதிகள் அல்லது கெட்டவர்களை மட்டுமே கொல்வதாக அர்த்தமில்லை. தொழில் நிமித்தம் தம் முதலாளிகளுக்காக கொலை செய்ய வேண்டியவர்களைக் கொல்பவன். அவர்கள் கொலைகாரர்களாக, கொள்ளைக்காரர்களாக, கற்பழிப்பவர்களாக, ரவுடிகளாக, அரசியல்வாதிகளாக, வழக்கறிஞர்களாக, போலீஸ்காரர்களாக, பணக்காரர்களாக, பிஸினஸ் செய்பவர்களாக, ஏதேனும் வழக்கில் சாட்சி சொல்பவர்களாக அல்லது சொல்ல மறுப்பவர்களாக, ஏதேனும் ரகசியம் அறிந்தவர்களாக அல்லது அறிந்ததாய் நம்பப்படுபவர்களாக‌, யாருக்கேனும் விரோதிகளாக / துரோகிகளாக அல்லது அவர்களின் நண்பர்களாக இன்னும் காசு வாங்கிக் கொண்டு கொல்ல என்ன என்ன வாய்ப்பு வகைமைகள் உள்ளனவோ எல்லாமாக‌ இருக்கக்கூடும். வுல்ஃப் பார்வையில் அவர்கள் நரிகள். அவ்வளவு தான்.

அதாவது தம்பா நல்லவன் என்றோ அவன் செய்யும் / செய்யத்தூண்டும் கொலைகள் எல்லாம் நல்நோக்கத்திற்காக என்று வுல்ஃப் சொல்ல வரவில்லை. ஆனால் குறைந்தபட்சம் அவன் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுகிறேன் என்ற அளவில் குற்றவுணர்வின்றி தொடர் கொலைகள் புரிந்து வந்தான். ஒரு ராணுவ வீரனின் மனநிலைக்கு ஒப்பானது இது. அவன் தன் எதிரி வீரர்களை மனச்சிக்கலின்றி கொல்வான். அதுவே சிவிலியன் உயிர் தன்னால் போகிறது என்றால்?

தம்பாவுக்காக இரு வேலையை முடிக்கும் போது சம்மந்தமே இல்லாமல் ஒரு விபத்தாக எட்வர்ட் என்ற அப்பாவியை வுல்ஃப் கொன்று விடுகிறான். அவனை சார்ந்து கண் தெரியாத பெற்றோர்களும் தங்கையும் இருக்கிறார்கள். அவர்கள் இப்போது அன்பும் அரவணைப்பும் பொருளாதார ஆதரவும் அற்று அனாதை ஆகிறார்கள். இதை வுல்ஃப் அறிய வரும் போது மனம் வருந்தி அவன் இடத்தில் இருந்து அந்தக் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள முடிவெடுக்கிறான். அந்தக் குடும்பமும் அதை அறிந்து அவனை ஏற்றுக் கொள்கிறது. அவன் தொடர்ந்து பெய்ட் கில்லராக நீடித்தால் இப்பொறுப்பை செய்ய முடியாது (சிறை, தூக்கு போன்ற காரணங்களால்) என்று புரிந்து அந்த வேலையை விடுகிறான். ஆனால் தம்பா அவனை விட மறுக்கிறான். தம்பாவிடம் இருந்த மிகச்சிறந்த அடியாளாக வுல்ஃப் இருந்திருக்கலாம். அதனால் அவனை விட மனசில்லாமல் மறுபடி மறுபடி தன் வேலைகளை செய்து தரும்படி கேட்கிறான். ஒருகட்டத்தில் எட்வர்ட்டின் குடும்பம் தான் வுல்ஃபை தன் வேலையை செய்ய விடாமல் தடுத்து வைத்திருக்கும் காரணி என்பதை அறிந்து அதை அகற்ற முற்படுகிறான். இது ஆரம்பத்தில் மிரட்டலாகவும் பின்னர் கொலை முயற்சிகளாகவும் இருந்திருக்கும்.

இது வுல்ஃபைக் கோபப்படுத்துகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் தன் (முன்னாள்) முதலாளியான தம்பாவையே தாக்கி விட்டுத் தப்பிக்கிறான். இந்த சண்டையில் தம்பா போலீஸில் பிடிபடுகிறான், மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். இப்போது தம்பாவுக்கு வுல்ஃப் இனி தனக்குப் பயன்பட மாட்டான் எனப் புரிந்து விடுகிறது. தான் அடிபட்டதற்கு வுல்ஃபைக் கொல்ல வேண்டும், தன் கையால் கொல்ல வேண்டும். எட்வர்ட் குடும்பத்தையும் கொல்ல வேண்டும். பழிவாங்கலே நோக்கம்.

வுல்ஃப் போலீஸில் சரணடைந்து விட்டால் தம்பா எட்வர்ட் குடும்பத்தை ஒன்றும் செய்ய மட்டான் என்பது உறுதியில்லை. அவன் கொடூரமானவனாகவே சிந்தரிக்கப்படுகிறான். தவிர, வுல்ஃப் இப்போது போலீஸில் சரணடைந்தால் தூக்கு உறுதி. பிறகு எட்வர்ட்டின் குடும்பத்தை யார் கவனிப்பது? அவனுக்கு எட்வர்ட் குடும்பத்தை தம்பாவிடம் இருந்து காப்பாற்றுவது மட்டும் நோக்கமல்ல, அவர்களை நன்றாக வாழ வைத்தாக வேண்டும். அதற்கு அவன் போலீஸ், தம்பா இருவரிடம் இருந்தும் தப்பிக்க வேண்டும். அதனால் அவன் ஒரு திட்டம் போடுகிறான். என்னவென்றால் எட்வர்ட் குடும்பத்தினர் மூவரையும் தனித்தனியாகப் பிரித்து ஒவ்வொரு இடங்களில் வைக்கிறான். எட்வர்ட்டின் இறந்த நாள் அன்று அவன் கல்லறையில் குடும்பத்தினரை இணைத்து அஞ்சலி செலுத்தி விட்டு அவர்களை வட இந்தியாவுக்குத் தப்புவிப்பதே நோக்கம். பிற்பாடு அவர்களோடு இணைந்து கொள்வான். ஏதேனும் வேலை செய்து அவர்களைக் காப்பாற்றுவான்.

தம்பாவுடனான சண்டையின் போது வுல்ஃப் போலீஸால் சுடப்படுகிறான். தோட்டாவுடன் தப்பித்தோட முயலும் வுல்ஃப் ரோட்டில் மயங்கி விழுகிறான். இங்கே தான் படம் துவங்குகிறது. சந்துரு என்ற மருத்துவக்கல்லூரி மாணவன் அவனைப் பார்த்து மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்து முடியாமல் போக, தன் வீட்டுக்கு எடுத்து வந்து நள்ளிரவில் தானே அறுவை சிகிச்சை செய்கிறான். அடுத்த நாள் காலையில் சந்துரு விழிக்கும் முன்னே வுல்ஃப் தப்பிக்கிறான். ஆனால் சந்துரு அந்த நள்ளிரவில் வுல்ஃபை மருத்துவமனையில் சேர்க்க முயற்சிக்கையில் விட்டு வந்த தடயங்கள் காரணமாக‌ போலீஸ் மோப்பம் பிடித்து வந்து சந்துருவையும் அவன் குடும்பத்தையும் கஸ்டடியில் எடுக்கிறது. போலீஸின் எண்ணம் சந்துருவும் அவன் குடும்பமும் வுல்ஃபின் கூட்டாளிகள். அவர்களுக்கு எட்வர்ட்டின் குடும்பத்துடன் வுல்ஃபின் தொடர்பு பற்றித் தெரியாது. அவர்களைப் பொறுத்த வரை தம்பாவும் வுல்ஃபும் ஏதோ காரணத்துக்காக சண்டைப் போடுகிறார்கள். அவ்வளவு தான். இப்போது சந்துரு வுல்ஃபுக்கு உதவி இருப்பதால் அவனும் வுல்ஃபின் கூட்டாளியாய் இருக்க வேண்டும்.

இங்கே தான் வுல்ஃபின் திட்டம் மாறுகிறது. அவனுக்கு சந்துருவைப் போலீஸில் இருந்து காப்பாற்ற வேண்டும். அதாவது போலீஸ் சந்துருவுக்கும் வுல்ஃபுக்கும் சம்மந்தம் இல்லை என நம்ப வேண்டும். அதற்கு ஒரே வழி சந்துரு வுல்ஃபைக் கொல்வதே. வேறு ஆதாரங்கள் ஏதும் செல்லுபடியாகாது - வுல்ஃபே வந்து சாட்சி சொன்னால் கூட. போலீஸ் தர்க்கங்கள் ஏற்காது; சந்துரு குடும்பத்தையே நாசம் செய்து விடும். அதனால் வுல்ஃப் தன்னையே பலிகடா ஆக்கத் தீர்மானிக்கிறான்.

பிறகு எட்வர்ட்டின் குடும்பத்தை யார் காப்பாற்றுவது? சந்துரு தான். எல்லோரும் வேடிக்கை பார்த்து நகர்ந்த போது ரிஸ்க் எடுத்து தன்னை சுமந்து திரிந்து அறுவையும் செய்தவன் நிச்சயம் நல்லுள்ளம் கொண்டவனாகத் தான் இருப்பான் என்ற நம்பிக்கை. அதனால் வட இந்தியாவுக்கு அனுப்புவது வரை தான் உயிருடன் இருந்து பார்த்துக் கொண்டால் பின் சந்துரு கவனித்துக் கொள்வான் என்பது கணக்கு. இதில் தன் உயிர் சந்துரு கையால் போகும் போது போலீஸும் சந்துருவை விடுவித்து விடும். இது தான் வுல்ஃபின் புதிய திட்டம். இதை செயல்படுத்த‌ சந்துருவை தன் ஓட்டத்தில் இணைக்க வேண்டும். அதற்காகவே சந்துருவை தொலைபேசி அழைக்கிறான். பின்னர் கடத்துகிறான். இது தான் காரணம்.

வுல்ஃபுக்குத் தெரியும் தான் சந்துருவை அழைப்பது போலீஸுக்குத் தெரிந்து விடும் என்பது. போலீஸ் சந்துருவையும் அதன் மூலன் தன்னையும் பின்தொடர்வார்கள் என்பதும் தெரியும். அவர்கள் சந்துரு மூலமே தன்னைக் கொல்லத் திட்டமிடுவார்கள் என்பதை வுல்ஃப் ஊகித்திருந்தானா என்பது தெளிவில்லை. ஆனால் போலீஸின் திட்டம் எப்படி இருப்பினும் வுல்ஃபின் திட்டமே அது தான். எட்வர்ட் குடும்பத்தைப் பாதுகாப்பாய் அனுப்பிய பின் தன் தியாகம் மூலம் சந்துருவை போலீஸ் பிடியிலிருந்து விடுவிப்பது. பின் சந்துரு எட்வர்ட் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை. இதன் படியே எட்வர்ட் நினைவு நாளன்று தொலைபேசி சந்துருவை வரவழைக்கிறான். தன்னை சந்திக்க வரும் சந்துருவைக் கடத்துகிறான். எதிர்பார்த்தபடி பின்தொடரும் போலீஸையும் தம்பாவின் ஆட்களையும் ஏமாற்றி விட்டுத் தப்பிக்கிறான். இதில் தம்பாவின் ஆட்களை மட்டும் சுட்டுக் கொல்கிறான். தம்பாவின் போலீஸ் கையாள் மூலம் விஷயம் அவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும் என்பது வுல்ஃபுக்குத் தெரியும். அதனால் இரண்டு தரப்பையுமே சமாளித்து சந்துருவைக் கடத்துவதே திட்டம். வுல்ஃப் பலசாலி, புத்திசாலி என இக்காட்சிகளில் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.

வுல்ஃபைக் கொல்வது தம்பாவின் நோக்கம். போலீஸுக்கும் அவனைக் கொல்ல வேண்டும். இந்நிலையில் தம்பாவுக்கு இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு எட்வர்டின் குடும்பம். அவர்களை எப்படியேனும் வுல்ஃப் தேடி வருவான் என அவனுக்குத் தெரியும். அதனால் தன் ஆட்களை எட்வர்ட் குடும்பத்தைத் தேடி அனுப்புகிறான். அவர்கள் எட்வர்ட்டின் தாயை மட்டும் ஒரு கோயில் வாசலில் பிச்சைக்காரி வேடத்தில் கண்டுபிடிக்கின்றனர். அவரை கண்காணிக்க ஆள் போடுகிறான்.

தம்பாவும் மருத்துவமனையின் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பிக்கிறான். துரத்தல் ஆரம்பம் ஆகிறது. சந்துருவை கைதியாக வைத்தபடி எட்வர்ட் குடும்பத்தில் ஒவ்வொருவராக வுல்ஃப் தேடிச் செல்வது ஒரு பக்கம். தம்பாவின் இரு அடியாட்கள் எட்வர்டின் அம்மாவிலிருந்து தொடங்கி நூல் பிடித்தாற் போல் வுல்ஃபைத் தொடர்வது ஒரு பக்கம் (அவர்கள் தம்பாவுக்கும் அடிக்கடி தகவல் சொல்லி அவன் கட்டளைப்படி செயல்படுகின்றனர்). இன்னொரு புறம் போலீஸ் எட்வர்ட் பற்றி ஏதும் தெரியாமல் சிட்டியை சல்லடை போட்டு வுல்ஃபைத் துழாவுகிறது (இதில் சிபிசிஐடி லால் மட்டும் கொஞ்சம் சிந்தித்து சிமெட்ரி வரை வந்து விடுகிறார்). வுல்ஃபுக்குள் இருக்கும் ஆட்டுக்குட்டியைக் காட்டும் காட்சிகள் இவை.

வுல்ஃப் தன்னை ஏன் கடத்துகிறான் எனத் தெரியாமல் சந்துரு இடையில் அவனை அடித்துப் போட்டு விட்டு அவன் திட்டத்தைக் குழப்பி விடுகிறான். போலீஸ் வுல்ஃபை நெருங்கி விடுகிறது. தம்பாவுக்கும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் எனத் தகவல் தெரிந்து விடுகிறது. இந்த நெருக்கடியில் தான் சந்துரு சுதாரித்துக் கொண்டு தவறான சிமெட்ரியை போலீஸுக்குச் சொல்கிறான். தம்பாவின் தேடல் தாமதம் அடைகிறது. இடையில் வுல்ஃப் தன்னைத் தேடி வந்த வில்லனின் அடியாட்கள் எல்லோரையும் கொல்கிறான். எட்வர்ட் குடும்பத்தினரை சிமெட்ரியில் ஒன்றிணைக்கிறான். 

சிமெட்ரியில் வைத்து வுல்ஃப் கதை சொல்வது உண்மையில் சந்துருவுக்குத் தான். தான் இத்தனை வன்முறைகளையும் நிகழ்த்தியது ஓநாய்த்தோல் போர்த்திய ஆட்டுக்குட்டியாகத்தான் என்பதையே வுல்ஃப் அங்கு முன்வைக்கிறான். அது தான் எட்வர்ட் குடும்பத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு தான் சாகத் தயாராகும் புள்ளி. பிறகு போலீஸையே சந்துரு எதிர்த்து நிற்பதிலிருந்து அவனது திடமான‌ மனமாற்றம் தொடங்குகிறது (இடையில் குழந்தை கார்த்தியைக் கொல்வதாக மிரட்டும் போதும், அறுவை சிகிச்சைக்கு உள்ளான வுல்ஃபை இரக்கமின்றி அடிக்கும் போதும், திருநங்கை கொல்லப்படும் போதும் சந்துருவுக்குள் இருந்த ஓநாய் வெளிப்படுகிறது. நிச்சயம் அது ஆட்டுக்குட்டியின் உயிர்பிழைக்கும் ஓட்டம் அல்ல).

பிறகு அந்த காம்ப்ளெக்ஸ் பார்க்கிங்கில் சந்துரு தம்பாவின் ஆட்களைக் கொல்லவும் தயங்குவதில்லை. இறுதியில் போலீஸ் முன்னிலையில் சந்துருவைத் தன்னைச் சுட்டுக் கொள்ளச் செய்கிறான் வுல்ஃப். அந்தக் கணத்தில் தான் நமக்கு அவன் ஏன் சந்துருவைக் கடத்தினான் என்ற உண்மையே புலப்படுகிறது. இந்த ஓட்டத்தில் எட்வர்டின் பெற்றோர் கொல்லப்பட்டு விட‌ மிஞ்சிய ஒரே ஆளான குழந்தை கார்த்தியை சந்துருவிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்து விட்டு வுல்ஃப் இறக்கிறான். போலீஸ் சூழ்ந்திருக்க சந்துரு கார்த்தியை மார்போடு அணைத்தபடி அவ்விடத்தை விட்டு அகல்கிறான். வுல்ஃபின் கூட்டாளி இல்லை சந்துரு என போலீஸ் கன்வின்ஸ் ஆகி விட்டதையே இது காட்டுகிறது. கார்த்தியை வடநாட்டுக்கு அனுப்பியோ தானே உடன் வைத்தோ சந்துரு தன் பொறுப்பை நிறைவேற்றுவான்.

ஆரம்பத்திலேயே வுல்ஃப் சந்துருவிடம் தான் அவனை அழைத்த காரணத்தைச் சொல்லாமல் விடுவதற்குக் காரணம் சந்துரு அப்போது அதற்கு தயாராகி இருக்கவில்லை என்பது தான். சொன்னாலும் ஒப்புக் கொள்ள மாட்டான். எட்வர்ட் குடும்பத்துக்குப் பொறுப்பேற்கவோ வுல்ஃபை கொல்லவோ இரண்டுக்கும் ஒப்ப மாட்டான் என்பதாலேயே. அந்த மனமாற்றத்தை அவன் தன் செய்கைகளாலும் முன்கதையை சொல்வதன் மூலமும் மெல்ல மெல்ல‌ ஏற்படுத்துகிறான்.

வுல்ஃபைப் பொறுத்தவரை அவனது மரணம் அவனது அதுவரையிலான பாவங்களுக்கான பதில். சிமெட்ரியில் சொல்லும் கதை வுல்ஃபின் confession தான். சந்துரு அவனைப் புரிந்து கொண்டு மாறுவதே அவனுக்கு வழங்கப்படும் பாவமன்னிப்பு.

இக்கதையில் வுல்ஃப் எப்படி ஓநாய் என்றால் ஆட்டுக்குட்டி (எட்வர்ட்) ஒன்றை தெரியாமல் அடித்து விடும் செயலிலும் பிற்பாடு தான் மூர்க்கமான போராட்டத்தின் மூலமாக புலிகளிடமிருந்தும் கரடியிடமிருந்தும் சந்துரு உள்ளிட்ட ஆட்டுக் குட்டிகளைக் காப்பாற்றுவதாலும் தான். மற்றபடி சந்துருவிடம் அவன் ஓநாயின் குணத்தோடு நடந்து கொள்ளவில்லை என்பது உண்மையே. ஃப்ளாஷ்பேக் தவிர்த்து படம் தொடக்கம் முதல் அவன் இறக்கும் வரை அவன் நல்ல ஓநாய் தான்.


படத்தில் தர்க்கப்பிழைகளே இல்லை என சொல்ல வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில இருக்கத்தான் செய்கின்றன. தவிர மிஷ்கினே சொல்லிய படி அவர் எடுப்பது யதார்த்த சினிமாவே அல்ல. அவருடைய சினிமா உலகம் யார்த்த சினிமாவுக்கும் ஃபேண்டஸி சினிமாவுக்கும் இடையில் ஒரு புள்ளியில் நிற்கிறது. அவரது தனித்துவம் அது தான்.

Comments

Anonymous said…
அட்டகாசம் SIR.
dewmystics said…
இன்றுதான் இந்த படம் பார்த்தேன். இப்படி இந்த விமர்சனத்தை உடனே பார்க்க நேர்ந்ததே எனக்கு ஆச்சர்யம்.படம் பார்க்கும் முன் விமர்சனம் படிக்கும் வழக்கம் இல்லை. ஏன் சந்த்ரு அழைக்கப்படுகிறான் என்று எனக்கு புரியாமல்தான் இருந்தது. சந்த்ரு வுல்ஃபை கொல்ல கன்வின்ஸ் செய்யப்படும்போதான, எல்லா கதாபாத்திரங்களின் தலை உயர்த்துதல்களும் தாழ்த்துதல்களுமே அவர்கள் மனநிலையை அழகாக புரியவைத்துவிடுகிறது. இது நிச்சயம் வேறுபட்ட படம். ஆனால் படம்தான்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி