உடல் எனும் சிலுவை

ஆழம் ‍ - செப்டெம்பர் 2013 இதழில் Ship of Theseus திரைப்படம் குறித்த என் விமர்சனக் கட்டுரை வெளியாகியுள்ளது.

*******

எல்லா மாறுதல்களுக்கும்
நம் மனதைப் பழக்க முடிகிறது
இந்த உடல்தான்
ஒவ்வொன்றையும் வன்மையாக எதிர்க்கிறது.


மனுஷ்ய புத்திரனின் இவ்வரிகளின் திரைவடிவம் தான் Ship of Theseus திரைப்படம்!

ஒரு பொருளின் உதிரி பாகங்கள் அனைத்தையுமே மாற்றி விட்டால் இருப்பது அப்பொருளா வேறு ஒன்றா? வெளியே எடுத்த உதிரி பாகங்கள் அனைத்தையும் கொண்டு ஒரு புதுப்பொருள் உருவாக்கினால் அது அதே பொருளா? உண்மையாய் அப்பொருள் இரண்டில் எது? இது ஒரு தத்துவார்த்த கேள்வி. 1ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி ப்ளுடார்க் இச்சிந்தனையை கப்பலையும் அதன் உதிரி பாகங்களையும் வைத்து எழுப்பினார். அது தான் Ship of Theseus. இந்த வினோதப் புதிரின் அடிப்பட்டையில் அமைந்தது தான் Ship of Theseus படமும்.


இது ஓர் இந்தி - ஆங்கில தத்துவ திரைப்படம். இந்திய சினிமாவில் philosophical genre அரிது. நம்மூர் மிஷ்கினின் நந்தலாலா, மீரா நாயரின் Monsoon Wedding, தீபா மேத்தாவின் Midnight's Children, ப்ரயாஸ் குப்தாவின் Siddharth: The Prisoner, ராக்கேஷ் ரஞ்சன் குமாரின் Dear Friend Hitler போன்றவற்றை இவ்வகைமையில் சொல்லலாம்.

படத்தின் இயக்குநர் ஆனந்த் காந்தி அடிப்படையில் ஒரு குறும்பட இயக்குநர். இது தான் அவருக்கு முதல் முழு நீளப்படம். கன்னி முயற்சியிலேயே இந்நூற்றாண்டு இந்திய சினிமாவின் முக்கியமான திரைப்படத்தைப் படைத்து விட்டார் ஆனந்த்.

*

மூன்று வெவ்வேறு கதைகளை ஒரு மையச்சரடு வழி இணைக்கும் திரைக்கதை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் நீட்சியாக ஒருவரின் உடல், அடையாளம், நம்பிக்கைகள் ஆகியவற்றைத் தத்துவரீதியாக கேள்விக்குள்ளாக்குகிறது இப்படம். அதாவது உடல் தான் இங்கே தீஸியஸின் கப்பல்; உறுப்புகள் உதிரி பாகங்கள்.

ஆலியா பார்வையற்ற இளம் பெண். ஆனால் தன் ஆண் நண்பரின் விவரணை உதவியுடன் புகைப்படம் எடுத்து அபாரமான கலைஞராக விளங்குகிறார். தன் படைப்புகளில் அவர் சமரசம் செய்து கொள்வதில்லை. அவருக்கு விழிப்படல மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறது. பார்வை கிடைத்த பிற்பாடு அவளது புகைப்படக்கலை என்ன ஆகிறது என்பது மீதிக்கதை. மைத்ரேயா ஒரு துறவி, ஆனால் நாத்திகர். விலங்குகளைத் துன்புறுத்தி ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும் மருந்து நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுபவர். அவருக்கு கல்லீரலில் கரணை நோய் பீடிக்க அவர் எதிர்த்து வந்த மருத்துவத்தையே சார வேண்டி இருக்கிறது. அவர் என்ன முடிவு எடுக்கிறார் அவரது கொள்கைகள் என்னவாகின்றன என்பது பிற்பாதி. நவீன் ஒரு பங்குத் தரகன். சமூக சிந்தனை ஏதுமற்ற சராசரி இளைஞன். அவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்த சில நாட்களில் சிறுநீரகம் திருடப்பட்ட ஓர் ஆசாமி பற்றி அறிய நேர்கிறது. அது பற்றிக்  குற்றவுணர்வுடன் விசாரிக்கையில் வெளிநாட்டவர் ஒருவருக்கு அது விற்கப்பட்டிருப்பதை அறிந்து அவரைத் தேடிப் போகிறான். அவன் தேடல் என்னவாகிறது என்பது உச்சக்காட்சி.

ஜெர்மானிய நாவலாசிரியர் பேட்ரிக் சஸ்கிண்டின் Das Parfum நாவலில் வரும் க்ரெனௌல்லி என்ற கொலைகாரன் பாத்திரத்துடன் ஆலியா தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறாள். க்ரெனௌல்லிக்கு வாசனை; ஆலியாவுக்கு ஒளி. அவனுக்கு செண்ட்; இவளுக்குப் புகைப்படம். ஆனால் இருவருக்குமான தேடல் ஒன்று தான். அது அவனைக் கொலைகாரனாகவும் இவளைப் பெரும் கலைஞராகவும் ஆக்குகிறது.

மைத்ரேயாவின் கதையில் வரும் சார்வாகா என்ற பாத்திரத்தினுடனான அவரது உரையாடல்கள் முக்கியமானவை. நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்ள மறுக்கும் மைத்ரேயாவிடம் விலங்குகளின் மேல் பிரயோகிக்கப்படும் வன்முறை போன்றதே அவர் தன் உடலை வருத்துவதும் என்கிறான். அடிப்படைவாதத்தில் ஊறிய ஒரு தற்கொலைப் போராளியுடன் அவரை ஒப்பிடுகிறான். அது சரியென்றே படுகிறது.

நவீனின் பகுதி எளிமையான ஒரு சிறுகதை போன்றது (உண்மையில் சுஜாதாவின் டிஎன்ஏ என்ற குறுநாவலை நினைவுறுத்துகிறது இது), சிந்தனைகளை விட அதிகம் சம்பவங்களால் ஆனது. மூன்றில் மிக நேரடியாக சொல்லப்பட்ட கதை இது தான். படுக்கையிலிருக்கும் தன் பாட்டி சிறுநீர் கழிக்க நவீன் உதவும் காட்சி விளக்கமாக காட்டப்படுவதன் மூலம் அவனது கதாபாத்திரம் சுலபமாக நிறுவப்பட்டு விடுகிறது.

மூன்று கதைகளும் மும்பையில் தொடங்கி உலகின் வெவ்வேறு ஸ்தலங்களில் முடிகிறது. படம் நெடுக ஆழமான உரையாடல்களின் வழி, நுட்பமான காட்சிகளின் வழி பல்வேறு சிக்கலான தத்துவத் தெறிப்புகளை முன்னிறுத்தி அதன் நீட்சியாய் கேள்விகளையும் எழுப்பி பார்வையாளனை சிந்தனைமயமாக்கி விடுகிறது படம்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஹெராக்ளைடஸ், சாக்ரடீஸ், ப்ளாட்டோ போன்ற பெரியவர்கள் சிந்தித்ததை நம்மையும் தற்போது யோசிக்க வைக்கிறது இப்படம்.

Ship of Theseus ஒருமாதிரி செல்லுலாய்டில் செதுக்கிய மினி விஷ்ணுபுரம் என்பேன்.

*

இப்படத்திற்கு மிகப்பிரதானமான பங்களிப்பாளர்கள் என இருவரைச் சொல்லலாம். ஒருவர் இயக்குநர் ஆனந்த் காந்தி; இன்னொருவர் ஒளிப்பதிவாளர் பங்கஜ் குமார். குஷ்பு ரங்கா என்பவருடன் இணைந்து இருவரும் திரைக்கதை எழுதியுள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர்களைக் கொண்டு இறக்குமதி செய்யப்பட்ட கேமெராக்கள் பயன்படுத்தி பெரும்பணம் செலவழித்து உலகத் தரத்தில் ஒளிப்பதிவு செய்வதாய்ச் சொல்லும் அத்தனை பேரும் இந்தப் படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு காட்சியும் உச்சபட்ச நேர்த்தியுடன் அழகியல் கவிதையாய்ப் பதிவாகி இருக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் பயன்படுத்தியது வழக்கமான உயர் ரக சினிமா கேமெரா அல்ல; Canon EOS-1D Mark IV என்ற DSLR கேமெரா மட்டுமே.

ஆலியா பாத்திரத்தில் நடித்த அய்தா அல் காஷெஃப் என்ற எகிப்திய நடிகையும், மைத்ரேயா பாத்திரத்தில் நடித்த நீரஜ் கபி என்ற நாடக நடிகரும் மிக அபாரமாக வெளிப்பட்டிருக்கிறார்கள். சோஹம் ஷா ஏற்றிருக்கும் நவீன் பாத்திரத்திற்கு நடிக்கும் வாய்ப்பு குறைவு தான் (படத்தின் தயாரிப்பாளர் இவர் தான்).

இந்தப் படம் உண்மையில் 2012ன் பிற்பகுதியிலேயே டொரான்டோ திரைப்பட விழாவில் வெளியாகியது. பிற்பாடு பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் குவித்திருக்கிறது. இந்தியாவின் கிரண் ராவும் (அமீர் கான் மனைவி) யூடிவியும் இணைந்து இப்படத்தைத் தற்போது திரைக்குக் கொண்டு வந்திருகிறார்கள். படத்தைப் பார்த்து சேகர் கபூர், ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், திபாகர் பேனர்ஜி, அதுல் குல்கர்னி என இந்திய சினிமாவின் முக்கிய ஆசாமிகள் மிரண்டு போய் இருக்கிறார்கள்; பாராட்டித் தள்ளி இருக்கிறார்கள்.

இப்படம் நெடுநாளைக்கு சிந்தனைகளின் வழி உங்களை உறக்கமிழக்கச் செய்யும்!

*******

Comments

ஆழம் ‍இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...
உன்னுடைய விமர்சனம் படம் பார்க்க தூண்டுது நண்பா! :)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி