தந்தைமையின் முலைப்பால்
குழந்தைகளின் பொம்மைகளாக இருப்பது பொறுப்புகள் மிகுந்த பணி என்று கருதும் அவை தாமும் குழந்தைகளாகவே நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கின்றன - மனுஷ்ய புத்திரன் ( 'அதீதத்தின் ருசி' தொகுப்பிலிருந்து) * சினிமா பார்த்தெல்லாம் கண்கள் ரெண்டும் பிசுபிசுத்து நிற்பேன் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. காதல், தவமாய்த் தவமிருந்து, பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், பரதேசி போன்ற படங்கள் கூட மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தின என்பது தாண்டி கலங்கடித்தது என்று சொல்லவியலாது. ஆனால் இந்த ராம் என்கிற ராட்சசன் என்னைச் சுக்கலாய் உடைத்து விட்டார். தங்க மீன்கள் . அன்பும் அழகியலும் இழையோடப் புனைந்திருக்கும் அழுத்தமான செல்லுலாய்ட் கவிதை. இதற்கு முன் வெளியான இதற்கு இணையான படம் என்ன என்று யோசித்தால் மிஷ்கினின் நந்தலாலா தான் நினைவுக்கு வருகிறது. செல்லம்மா என்ற மகளுக்கும் கல்யாணி என்ற தந்தைக்கும் இடையே இயல்பாகவே உயிர்த்திருக்கும் அதீத அன்பின் அதிருசியே இப்படம். கலாப்பூர்வம் என்பதற்கான எந்த சடங்குகளோ சம்பிரதாயங்களோ இன்றி மிகச் சுவாரஸ்யமாகப் பின்னப்பட்ட நேர்த்தியான திரைக்கதை. உறவின் பாசப் பிணைப்பைக் கா...