கள்ளிச்செடி வளர்ப்பவன் - சில கருத்துக்கள்

அழகியசிங்கர் நடத்தி வரும் நவீன விருட்சம் இணையதளம் எனக்கு பல இளம் நவீன கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஒருவர் லதாமகன். அதில் வந்த அவர் கவிதை ஒன்றினை படித்தது / பிடித்தது தொடரில் குறிப்பிட்டிருந்தேன். பின் ஆனந்த விகடனில் அவரது கவிதைகள் வெளியான போதும் கவனித்திருந்தேன். இடையில் என் பரத்தை கூற்று நூலிற்கு ஒரு விமர்சனம் எழுதிய வகையில் மற்றுமொரு தொடுகை. பிற்பாடு ட்விட்டர் மூலமும் ஓரளவு பழக்கமானார். பிறகு அரட்டைக்குத் திரட்டையவை போட்ட போது விடுபட்டதற்காக நான் வருந்திய இருவரில் லதாமகனும் ஒருவர்.


லதாமகன் கள்ளிச்செடி வளர்ப்பவன் என்ற தன் முதல் கவிதைத் தொகுப்பை அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் இலவச மென்னூலாக வெளியிட்டிருக்கிறார்: http://issuu.com/lathamagan/docs/poems-1?mode=window&viewMode=doublePage

மொத்தம் 54 பக்கங்கள். 50 கவிதைகள். உட்கார்ந்தால் ஒரே மூச்சில் 15 நிமிடத்தில் படித்து முடித்து விடலாம் என்றாலும் அது கவிதைக்கு செய்யும் மரியாதையாகா என்பதால் நேற்றிரவும் இன்றும் மூன்று முறை முழுக்க வாசித்து விட்டு சில‌ கருத்துக்கள் பகிரத் தோன்றியதால் இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒருவிதத்தில் கைம்மாறு என்றும் கொள்ளலாம்.

என்வரையில் ஒரு கவிஞனின் முதல் தொகுப்பில் கால்வாசிக் கவிதைகள் நன்றாக இருந்தாலே வெற்றி பெற்றதாகக் கொள்வேன். அவ்வகையில் நிச்சயம் இது ஒரு குறிப்பிடத்தகுந்த ஒரு தொகுப்பே. ஒருமுறை சொல்வனம் தரத்திலான கவிதைகள் எழுதுபவர் என லதாமகனைக் குறிப்பிட்டேன். அதை நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன். அது வெகுஜன இதழின் தேவைக்காக செய்து கொண்ட சமரசம் என இந்தத் தொகுப்பு சாட்சி சொல்கிறது. லதாமகன் நவீனக் கவிஞரே!

தொகுப்பில் எனக்கு 21 கவிதைகள் பிடித்திருந்தன: இது ஒரு நிஜக்கதை, இரண்டாவது கோப்பை, என்னைத் தனியன் என்பார்கள், இடைவெளி, முகம் - 1, நீயின்றி அமையும் ஒரு உலகு, போகும் நாள், கொன்று விடு அல்லது செத்துப் போ, கனாக்காலம், ஒரு போருக்குப் பின், அவர், இருத்தல் எனும் துயரம், மஞ்சள், உயில், சின்ன துயரம், வெறுமை வனம், இப்படியாக..., அடையாளம், திரும்புதலுக்கான சுவர்கள், உடனிருப்பவர்களுக்கு, வாசல். இது மொத்தத்தில் 40% மேல்!

தொகுப்பில் நிறைய பூனைகள் வருகின்றன. அப்புறம் கொஞ்சம் குழந்தைகள்; கொஞ்சம் கடவுள்கள். அவ்வப்போது யாராவது எதையாவது பிய்த்து எறிகிறார்கள். ர‌த்தமும் சிவப்பும் வேறு ஆங்காங்கே திட்டுத்திட்டாய். ஒரே சொல்லாட்சி மறுபடி மறுபடி வருகையில் அது கவிதையாக அல்லாமல் டைல்ஸ் பேட்டர்ன் போல் தோன்றி அலுப்பூட்டுகிறது.

மற்றும் சிலர்
போன்ற ஓரிரு கவிதைகள் நவீனக் கவிஞர்களுக்கான ஆரம்ப நிலை க்ளீஷேவாக மட்டும் நிற்கின்றன. குழந்தைகள் வைத்து எழுதியிருக்கும் கவிதைகளான கடவுள், ரஞ்சு ஆகியவை கொஞ்சம் போலித்தனமானவையாக‌ இருக்கின்றன. வாழும் காலம் என்ற கவிதை என்னவென்றே புரியவில்லை. கள்ளிச்செடி வளர்ப்பவன் என்ற தொகுப்பின் தலைப்புக் கவிதையில் அப்படியே அப்பட்டமாய் மனுஷ்ய புத்திரன் சாயல். எழுதியவர் பெயரை மறைத்து விட்டுக் காட்டினால் மனுஷ்ய புத்திரனே கூட தன்னுடைய கவிதை என நம்பிவிடக்கூடும் (நிச்சயம் இது பாராட்டில்லை).

2008 முதல் 2010 வரையிலான இந்தக் கவிதைகளை ஒட்டுமொத்தமாய் வாசிக்கையில் ஒரு நிறைவுணர்வு ஏற்படுகிறது. இலுப்பைப்பூவை ஆலைச்சர்க்கரை எனத் தரும் தேசத்தில் இலுப்பைப்பூ கேட்டதற்கே ஆலைச்சர்க்கரை தந்திருக்கிறார்!

ஒரு சின்ன வேண்டுகோள் : ப்ரௌஸர்களில் adobe flash player இன்ஸ்டால் செய்யாத / செய்ய முடியாத கணிப்பொறிகள், செல்பேசிகளில் உங்களின் இந்த மென்னூலை வாசிக்க முடியாது. பிடிஎஃப் / ஹெச்டிஎம்எல் ஆக வெளியிடுவது பற்றி யோசிக்கலாம். இன்னும் ஃப்ளாஷ் ஸ்பரிஸித்திடாத‌ எத்தனையோ டிவைஸ்களை தமிழர்கள் வைத்திருக்கிறார்கள்!

அடுத்த தொகுப்புக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நிறையப் பேரைச் சென்றடைய அது தாள்களால் ஆனதாக இருக்கட்டும்.

Comments

ஆகா! நன்றி தலைவரே :)

கவிதைகளைக் குறித்த கருத்துக்களை அப்படியே எடுத்துக்கொள்கிறேன்.

ஃபிடிஎப் நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். ஒரு 15 நாள் இடைவெளியில் இந்த தொகுப்புக்கே கொடுக்கும் எண்ணமிருக்கிறது :)


Print - worthy குறித்த அவநம்பிக்கை நேற்றெழுதிய கவிதை வரை உண்டு. :)


நன்றிகள் மறுபடியும்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி