கள்ளிச்செடி வளர்ப்பவன் - சில கருத்துக்கள்
அழகியசிங்கர் நடத்தி வரும் நவீன விருட்சம் இணையதளம் எனக்கு பல இளம் நவீன கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஒருவர் லதாமகன் . அதில் வந்த அவர் கவிதை ஒன்றினை படித்தது / பிடித்தது தொடரில் குறிப்பிட்டிருந்தேன் . பின் ஆனந்த விகடனில் அவரது கவிதைகள் வெளியான போதும் கவனித்திருந்தேன். இடையில் என் பரத்தை கூற்று நூலிற்கு ஒரு விமர்சனம் எழுதிய வகையில் மற்றுமொரு தொடுகை. பிற்பாடு ட்விட்டர் மூலமும் ஓரளவு பழக்கமானார். பிறகு அரட்டைக்குத் திரட்டையவை போட்ட போது விடுபட்டதற்காக நான் வருந்திய இருவரில் லதாமகனும் ஒருவர். லதாமகன் கள்ளிச்செடி வளர்ப்பவன் என்ற தன் முதல் கவிதைத் தொகுப்பை அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் இலவச மென்னூலாக வெளியிட்டிருக்கிறார்: http://issuu.com/lathamagan/docs/poems-1?mode=window&viewMode=doublePage மொத்தம் 54 பக்கங்கள். 50 கவிதைகள். உட்கார்ந்தால் ஒரே மூச்சில் 15 நிமிடத்தில் படித்து முடித்து விடலாம் என்றாலும் அது கவிதைக்கு செய்யும் மரியாதையாகா என்பதால் நேற்றிரவும் இன்றும் மூன்று முறை முழுக்க வாசித்து விட்டு சில கருத்துக்கள் பகிரத் தோன்றியதால் இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். ...