திருவிழாப் பெண்கள்

நேற்றும் அதற்கு முன்தினமும் சென்னைப் புத்தகக்காட்சியை கால் வலிக்க இருமுறை சுற்றியாயிற்று. எப்போதும் போல் எழுத்து / வலைப்பதிவு / சமூக வலைதள அன்பர்களுடன் சேராது நண்பனுடன் தனித்தே திரிந்திருந்தேன். விதிவிலக்காய் பவுத்த அய்யனார் - முத்துமீனாள் தம்பதியருடன் மட்டும் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்து விட்டு நகர்ந்தேன் (அதுவும் கூட‌ நீயா நானா வழியான அறிமுக‌த்தின் காரணமாக). அப்புறம் நர்சிம்முடன் சில விநாடிகள். பாலகுமாரன், இந்திரா பார்த்தசாரதி (அவர் தானா?!), மனுஷ்யபுத்திரன், காலச்சுவடு கண்ணன், கவின்மலர் ஆகியோரைப் பார்க்க முடிந்தது.

மற்றபடி, கடந்த சில ஆண்டுகளின் வழக்கம் போல் சென்னை டூ பெங்களூர் லாஜிஸ்டிக்ஸ் இடர்பாடுகளுக்கு பயந்தே குறைந்த எண்ணிக்கையிலான நூல்களை ம‌ட்டும் உலோபி நுகர்வு செய்தேன். எப்போதும் என் கணக்கு ஆண்டுச் சம்பளத்தில் 1%. சுமைக்குப் பயந்தே இம்முறையும் அது நிறைவேறவில்லை. ஒரே ஆறுதல் இம்முறை இரண்டு நாட்கள் இருந்தபடியால் சாவகாசமாக‌ விலாவாரியாக புத்தகங்களைக் காணும் பேறு பெற்றேன் என்பது மட்டுமே.

என் சுய documentation-க்காக வாங்கிய புத்தகங்களை இங்கே பட்டியலிடுகிறேன். மற்றவர்களுக்கும் உதவக்கூடும்.
  1. விஸ்வரூபம் - இரா.முருகன் [கிழக்கு]
  2. எழில் நலம் - ம‌குடேசுவரன் [தமிழினி]
  3. ஏமாறும் கலை - யுவன் சந்திரசேகர் [காலச்சுவடு]
  4. வேப்பெண்ணெய்க் கலயம் - பெருமாள்முருகன் [காலச்சுவடு]
  5. நிழல்முற்றத்து நினைவுகள் - பெருமாள்முருகன் [கயல்கவின்]
  6. அன்சைஸ் - பா.ராகவன் [மதி]
  7. 57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புராணம் - வா.மு.கோமு [எதிர்]
  8. அணு மின்சாரம் : அவசியமா? ஆபத்தா? - சௌரவ் ஜா / சுந்தரேஸ்வர பாண்டியன் [கிழக்கு]
  9. நகர்வலம் - ஞாநி [ஞானபானு]
  10. வட்டியும் முதலும் - ராஜுமுருகன் [விகடன்]
  11. நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் [காலச்சுவடு]
  12. நகுலன் கதைகள் [காவ்யா]
  13. கல்யாணம் முடிந்தவுடன் - அசோகமித்திரன் [கவிதா]
  14. இருவர் - அசோகமித்திரன் [கவிதா]
  15. விடுதலை - அசோகமித்திரன் [கவிதா]
  16. விழா மாலைப் போதில் - அசோகமித்திரன் [கவிதா]
  17. வைதிஸ்வரன் கவிதைகள் [கவிதா]
  18. தஞ்சை பிரகாஷ் கதைகள் [காவ்யா]
  19. உச்சி வெயில் - இந்திரா பார்த்தசாரதி [கவிதா]
  20. குண்டலகேசி - இந்திரா பார்த்தசாரதி [கவிதா]
  21. குமுதம் : வினா விடை - கிருபானந்த வாரியார் [குகஸ்ரீ வாரியார்]
  22. வனவாசம் - கண்ணதாசன் [கண்ணதாசன்]
  23. கிருஷ்ணன் நம்பி - சுந்தர ராமசாமி [சாகித்திய அகாதெமி]
  24. ந.பிச்சமூர்த்தி - அசோகமித்திரன் [சாகித்திய அகாதெமி]
  25. க.ந.சுப்ரம‌ண்யனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் [சாகித்திய அகாதெமி]
  26. செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை / சுந்தர ராமசாமி [சாகித்திய அகாதெமி]
  27. இருபது வெள்ளைக்காரர்கள் - அய்யனார் விஸ்வநாத் [வம்சி]
  28. புதிய அறையின் சித்திரம் - மண்குதிரை [காலச்சுவடு]
  29. என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி - வா.மணிகண்டன் [காலச்சுவடு]
  30. காட்டின் பெருங்கனவு - சந்திரா [உயிர் எழுத்து]
  31. பெருந்திணைக்காரன் - கணேசகுமாரன் [உயிர் எழுத்து]
  32. உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணக்குமார் [உயிர் எழுத்து]
  33. இனி நான் டைகர் இல்லை - சமயவேல் [உயிர் எழுத்து]
  34. 1001 இரவுகள் - 3 பாகங்கள் [பூம்புகார்]
  35. மன்மதன் வந்தானடி - பட்டுக்கோட்டை பிரபாகர் [பூம்புகார்]
  36. மௌனத்தால் பேசாதே - பட்டுக்கோட்டை பிரபாகர் [பூம்புகார்]
  37. வின்னன் என்கிற கதாநாயகன் - பட்டுக்கோட்டை பிரபாகர் [பூம்புகார்]
  38. கொஞ்சம் காதல் வேண்டும் - பட்டுக்கோட்டை பிரபாகர் [பூம்புகார்]
  39. டிசம்பர் பூ டீச்சர் - பட்டுக்கோட்டை பிரபாகர் [பூம்புகார்]
  40. ரஜினி : ஒரு சரித்திரத்தின் சரித்திரம் - பா.தீனதயாளன் [மதி]
  41. 365 ANiMaL TaLeS [OM KIDZ]
  42. கண்மணி பாப்பா பாடல்கள்  VOL. 1 & 2 DVD [infobells]
  43. மழலையர் பாடங்கள் DVD [infobells]
  44. கல்குதிரை - பனிக்கால இதழ்
  45. தமிழ் ஆழி, நேர்காணல், உயிர் எழுத்து இதழ்கள்
பெருமாள்முருகனின் கெட்டவார்த்தை பேசுவோம் புத்தகம் இம்முறையும் கிடைத்தபாடில்லை.

புத்தகக்காட்சியில் ஆங்காங்கே கேட்ட சில உரையாடல்கள்:
  • அப்பா, மங்கூஸ் மண்டையன் பேரு சித்ரா லக்ஷ்மணனாம். புக்லாம் எழுதி இருக்கான் போலருக்குப்பா.
  • மச்சி, அங்கே வேண்டாம். இந்தக் கடை நல்லா இருக்கு. இங்கே போவோம். (அங்கே பெண்கள் கூட்டம்)
  • பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு புக் எழுதிட்டு செத்துப் போயிடனும். ஆயுசு முழுக்க ராயல்டி.
  • அப்பளம் சார். சுடச்சுட டெல்லி அப்பளம் சார், இங்கே தவிர இது வேற எங்கேயும் கிடைக்காது சார்.
  • தி.நகர் சாரதாவின் கணவர் எங்கிருந்தாலும் புத்தகக் கண்டாட்சி அலுவலகத்துக்கு உடனடியாக வரவும்.
கிண்டர் கார்டன் அட்மிஷன் எல்லாம் நடத்துகிறார்கள். ஐந்து நிமிடங்களில் முந்நூறு ரூபாய்க்கு ஏ4 சைஸில் உங்களின் பக்கவாட்டுப் படத்தை வரைந்து தருகிறார் ஒருவர். நான் கடக்கையில் ஒரு மிக அழகான முப்பதுகளின் பெண்ணொருவர் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். ஓவியத்தை அல்லாமல் சிற்பத்தை மட்டும் சற்று நேரம் கவனித்து நீங்கினேன்.

என் மூன்று புத்தகங்களுமே புத்தகக் காட்சியில் கிடைக்கின்றன. இன்னமும் இவ்வருடப் புத்தகம் தயாராகாத படியால் புத்தகக் காட்சிக்கு வராது. எப்படியும் குறைந்தபட்சம் இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் எனத் தெரிகிறது.

கிழக்கு, காலச்சுவடு, உயிர்மை, வம்சி, உயிரெழுத்து, காவ்யா, கவிதா என எல்லா முக்கியப் பதிப்பகங்களிலுமே புத்தக விலை கழிவு போகவும் மிக அதிகம் என்றே தோன்றுகிறது. வேறு வழியே இல்லையா? அவ்வகையில் சாகித்திய அகாதெமி மட்டுமே விதிவிலக்கு. ஆனால் துரதிர்ஷடவசமாய் என் ருசிக்கு அங்கே அதிகப் பண்டங்கள் இல்லை.

சுஜாதா, மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா என எனக்கு உவப்பானவர்கள் எவர் நூலையும் இம்முறை வாங்கவில்லை. உயிர்மையில் ஒரு புத்தகம் கூட வாங்காமல் விடுவதும் இது தான் முதல் முறை. இவ்விஷயங்களில் திட்டுமிட்டு எல்லாம் ஏதும் செய்யவில்லை. அது அவ்வாறே நடந்தது. அவ்வளவு தான்.

இது எனக்கு பதினொன்றாவது சென்னைப் புத்தகக் கண்காட்சி. ஒரு தசாப்தம் கழிந்தும், 350 கிமீ தள்ளிப் போய் வேறொரு மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டாலும், தொலைபேசியிலோ, இணையதளத்திலோ சொன்னால் புத்தகங்கள் வீடு தேடி வரும் சொகுசு வந்த பின்பும் இன்னும் புத்தகக்காட்சியின் மேலுள்ள மோகம் மட்டும் கொஞ்சமும் குறைந்தபாடில்லை.

பெண்களை தினமும் தான் பார்க்கிறோம். ஆனால் அனைவரையும் திருவிழாவில் ஒருசேரக் காண்பது தனி சுகமல்லவா!

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி