தமிழில் ஒரு ஹாலிவுட் சினிமா
எனது சினிமா விமர்சன முறையின் அடைப்படை குறித்த மூன்று முக்கிய விஷயங்களை முதலில் சொல்லி விடுகிறேன்: 1. நான் படம் பார்க்கும் போதே இயக்கம், திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்றெல்லாம் யோசித்து அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்க்க மாட்டேன். என் வரையில் திரைப்படம் என்பது ஒரு பண்டம். நுகர்வுப்பண்டம். எப்படி சிக்கன் பிரியாணி உண்ணும் போது அதன் அரிசியின் வகை, மசாலாக் கலவை, கறி வெந்திருக்கும் தன்மை, சமையல் காரரின் கஷ்டம், இது மற்றவர்களுக்குப் பிடிக்குமா எல்லாம் யோசிக்காமல் அதன் சுவையை மட்டும் அனுபவிப்பேனோ அதே போல் தான் ஒரு படம் பார்க்கும் போது நான் திறந்த மனதுடன் எந்த முன் தீர்மானமுமின்றி அந்தப் படத்தை மிக முழுமையாக அனுபவிப்பேன். ஆக, ஒரு படம் முடிந்து வெளியே வரும் தருணம் அது குறித்த என் மதிப்பீடு உருவாகி இருக்கும். பிறகு அப்படம் குறித்து அசை போடும் போது தான் அந்தக் குறிப்பிட்ட மதிப்பீட்டை என் மனம் வந்தடைந்த காரணங்கள் புலப்பட ஆரம்பிக்கும். அதைத் தான் விமர்சனமாகச் சொல்கிறேன் / எழுதுகிறேன். சுருங்கச் சொன்னால் தியேட்டருக்குள் என் தர்க்கம், வியாக்கியானம் எல்லாம் நுழைவதே இல்லை;