'பரத்தை கூற்று' என்ற என் கவிதைத் தொகுதியின் தலைப்பில் இலக்கண சந்திப்பிழை உள்ளது, 'பரத்தைக் கூற்று' என்று வல்லினம் மிகுந்து வரும் வேண்டும் என்று அவ்வப்போது சொல்லப்பட்டு வருகிறது. அதை விளக்கும் முகமே இப்பதிவு. பரத்தையது கூற்று = பரத்தை(+அது) + கூற்று = பரத்தை கூற்று. 'அது' - ஆறாம் வேற்றுமை உருபு. அதாவது 'பரத்தை கூற்று' என்பது ஆறாம் வேற்றுமைத் தொகை. பொதுவாய் ஆறாம் வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகும். உதாரணம் : சிங்கப்பல், அறிவுத்திமிர். ஆனால் அதில் ஒரு conditional rule இருக்கிறது. வருமொழி அஃறிணையாய் இருந்தால் மட்டுமே வல்லினம் மிகும். உயர்திணையாய் இருந்தால் மிகாது. இப்படி ஒரு வினோத விதி இருக்கிறது (ஆதாரம் : http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=171&pno=242 ) நான் நூலிற்குத் தலைப்பு வைத்த போது இதெல்லாம் ஆராய்ந்து வைத்திலன். தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, செவிலித்தாய் கூற்று என்று தான் சங்க அக இலக்கியங்கள் பேசுகின்றன. இவ்வரிசையில் குறுந்தொகையில் குறைந்தபட்சம் 3 பாடல்கள் ( 1 , 2 , 3 ) பரத்தை கூற்றாய் வருகின்றன. புத்...