மயிரு [சிறுகதை]
குமுதம் இதழில் ' ஹேர் ஸ்டைல்! ' என்ற தலைப்பில் வெளியான சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம் இது . ****** விழிப்புத் தட்டியவுடன் சுடலை தன் தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். நேற்றுப் பெய்த முதல் மழையில் துளிர் விட்ட பச்சைப் பசும்புல்வெளி கணக்காய் வழுக்கை மண்டையில் ஆங்காங்கே சிறுசிறு மயிரிழைகள் முளை விட்டிருந்தன. எழுந்து போய் சுவற்றிலிருந்த பாதரசம் போன பெல்ஜியம் கண்ணாடி முன் நின்று தலையைப் பார்க்கும் ஆவலை சோம்பேறித்தனத்தினால் ஒத்திப் போட்டான் சுடலை. கார்த்திகைக் குளிர் மாசிக் கடைசி வரையிலும் வீசி விட்டுத் தான் ஓய்கிறது. அது மனிதர்களின் மனதிலும் உடலிலும் சோம்பலின் சொகுசை விதைத்துப் போகிறது. கண்களில் இன்னமும் தூக்கம் மிச்சமிருந்தது. வெளிச்சம் பார்த்தால் காலை ஏழு மணி ஆயிருக்கும் எனத் தோன்றியது. அம்மா சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள். இரண்டு ஆளுக்கு சமைக்க அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து என்ன தான் செய்வாளோ தெரியாது. அப்பா காலத்திலிருந்தே அதே பழக்கம். இப்போது அவளுக்கு பிரஷர் இருக்கிறது, அடிக்கடி தலை வலிக்கிறது என்கிறாள். மெதுவாக எழுந்து வேலை செய்தால்...