போலி புத்திஜீவிகள் மீதான‌ வழக்கு

மறுபடியும் ஒருமுறை மிகத் தெளியாய் மிக‌ வலுவாய் ஏமாற்றி இருக்கிறார் காதல் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

வழக்கு எண் : 18/9 என்ற வித்தியாசப் பெயர் கொண்ட இப்படத்தை நான் எதிர்பார்த்திருக்க நிறையக் காரணங்கள் இருந்தன. முக்கியமாய் இரண்டு - கல்லூரி என்கிற அபார மொக்கைக்குப் பின் பாலாஜி சக்திவேல் போன்ற ஒரு திறமைசாலி அதிஜாக்கிரதை உணர்வுடன் நான்கு வருடங்களாக செதுக்கிக் கொண்டிருந்த படம் என்பது ஒன்று; படம் பார்த்த அத்தனை பேருமே இது ஏதோ தமிழ் சினிமாவில் அபூர்வமாய்ப் பூக்கும் குறிஞ்சி என்ற ரீதியில் கொடுத்த பில்டப் மற்றொன்று. இந்தப் பின்புலத்துடன் பார்த்தால் எனக்கு படம் பலத்த ஏமாற்றத்தினை அளித்தது என்பது மிகையில்லை.


 கல்லூரி படமே சிறந்த படம் தான்; எனக்கு மிகப் பிடிக்கும் என கண்ணீர் மல்க நிற்பவர்கள் தயவு செய்து இந்த வரியுடன் இந்த விமர்சனத்திலிருந்து விலகிவிடலாம். உங்களிடம் பேச விஷயமேதுமில்லை. நாம் பேசும் பாஷைகள் வேறு வேறு.

ஓர் ஆசிட் வீச்சு வழக்கில் விளிம்பு நிலை மனிதர்கள் எவ்வாறு அதிகாரத்தின் மற்றும் பணத்தின் கொடுஞ்சதியால் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது படம். கதை நன்று. ஆனால் இந்த பொட்டன்ஷியல் ஒன்லைனரை தன் இடதுகையால் கிறுக்கிய அபத்தத்  திரைக்கதையால் முற்றிலும் நசுக்கி மலடாக்கி விட்டார் பாலாஜி சக்திவேல்.

படத்தின் சாதக அம்சங்கள் என சிலவற்றைக் குறிப்பிடலாம். படத்தின் இறுதியில் ஜோதியின் முகத்திரை விலகும் வலுவான காட்சி. வேலு, தினேஷ் மற்றும் ஆர்த்தி பாத்திரங்களுக்கான பொருத்தமான நடிகர் தேர்வு. செல்ஃபோனில் வரும் "ஐட்டம் காலிங்" போன்ற சில புத்திசாலித்தன‌ சுவாரஸ்யங்கள். மற்ற எல்லாமே பாதக அம்சங்கள் தாம்.

குறிப்பாய் படம் நெடுகிலும் விரவிக்கிடக்கும் சொத்தைக் காட்சிகளும், மொக்கை வசனங்களும் சகிப்பதற்கரியன.

படத்தில் வைக்கப்பட்டிருக்கும் பல நாடகத்தனமான முதிர்ச்சியற்ற காட்சிகள் கொல்கின்றன (உதாரணம்: அந்த பாலியல் தொழிலாளி சம்மந்தப்பட்ட காட்சிகள்). யதார்த்தமாய்க் காட்டுகிறேன் பேர்வழி என்று முயற்சிக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஆபாசமாய்த் துருத்திக் கொண்டு பல்லிளிக்கின்றன (உதாரணம்: ஜோதியின் அம்மா பார்க்கும் போதெல்லாம் வேலுவைத் திட்டும் காட்சிகள்). அதே போல் எண்ணிலடங்கா தர்க்கப்பிழைகள் படம் முழுக்க‌ மண்டிக் கிடக்கின்றன (உதாரணம்: ஆர்த்தியின் விவரணையில் தினேஷ் தண்ணீர் வால்வை அடைக்கும் காட்சி எப்படி வந்தது?).

அதிகார‌த்தையும் பணத்தையும் தோலுரிக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் காட்சிகள் ஒரு ஹரி படத்தின் மசாலாக் காட்சிகளுக்கு இணையான நகைப்புக்குரியதாக இருக்கின்றன (உதாரணம்: தினேஷின் அம்மா மற்றும் அமைச்சர் இடையேயான காட்சிகள்). எளியவர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் தமிழ் சினிமா பார்த்து நைந்து போன க்ளீஷே (உதாரணம்: வேலுவின் சிறுவயதுக் காட்சிகள்). அதே போல் சமூகத்துக்கு கருத்து சொல்கிறேன் என்று சம்மந்தமே இல்லாமல் வரும் காட்சிகளும் எரிச்சலூட்டுகின்றன (உதாரணம்: கூத்துக்கலை தொடர்பான காட்சிகள்). கடைசியில் பொயட்டிக் ஜஸ்டிஸ் வழங்கும் போர்வையில் செய்யப்பட்டிருக்கும் காட்சிகள் (உதாரணம்: ஜோதி இன்ஸ்பெக்டரைப் பழி தீர்ப்பது) ஒட்டுமொத்த படமும் இரண்டு மணி நேரம் என்ன எதார்த்தத்தை முன்வைக்க முயன்றதோ அதையே கேலிக்குரியதாக்கி விடுகிறது. இது போல் சொல்லிக் கொண்டே போகலாம்.

அர்த்தியை எடுத்த எம்எம்எஸ்ஸை இன்னும் நானே பார்க்கவில்லை தினேஷ் சொல்வதன் மூலம் இயக்குநர் எதை நிரூபிக்க முயல்கிறார்? நாயகி இன்னமும் களங்கப்பட‌வில்லை என்றா? ஓர் எதார்த்தப் படத்தில் இதற்கு என்ன சார் அவசியம்? எம்எம்எஸ் எடுத்துப் பரப்பும் மாணவர்களுக்கு அந்த இன்ஸ்பெக்டர் தோப்புக்கரணம் தண்டனையாய்த் தருவதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்? பணக்கார இளைஞர்களின் குற்றங்கள் இப்படி சுலபமாக மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன என்றா? மன்னிக்கவும் மிஸ்டர் பாலாஜி சக்திவேல், இதுவும் மகா கேனத்தனமாக இருக்கிறது. அப்புறம் அமைச்சரின் முகத்தை எதற்கு ஸ்மட்ஜ் செய்து காட்டி இருக்கிறீர்கள்? சென்ஸார்ஷிப்பா? க்ரியேட்டிவிட்டியா?

பாலாஜி சக்திவேலுக்கு எப்போதும் படத்தை எங்கே முடிப்பதென்று தெரியாது. காதல் என்ற அவரது கெரியரின் ஒரே மாஸ்டர்பீஸ் படத்திலும் கூட இது தான் நடந்தது. என்வரையில் காதல் படம் ஐஸ்வர்யாவுக்கு அவரது ஜாதியினர் தாலியறுப்பதோடு முடிந்து விடுகிறது. அது தான் அப்படத்தின் உச்சக்காட்சி. அதுவே அப்படத்தின் ஒட்டுமொத்த‌ வலி, அதிர்ச்சி, சோகம் எல்லாவற்றையும் ஒருங்கே வழங்கிவிடுகிறது. பிறகு வரும் முருகன் ட்ராஃபிக் சிக்னலில் பைத்தியமாகத் திரியும் காட்சி, ஐஸ்வர்யாவின் கணவன் அவன் மீது அன்பு காட்டுவது எல்லாமே அவசியமற்ற செருகல்கள். அதன் மூலம் பார்வையாளன் எதையுமே பெறுவதில்லை. அது கலையின் ஒரு பகுதியே அல்ல.

மாஸ்டர்பீஸிலேயே இப்படி இருக்கும் போது, இந்தப் படத்தில் மட்டும் என்ன எதிர்பார்த்துவிட முடியும்? கடைசி பதினைந்து நிமிடங்கள் மிக மோசமாக எழுதப்பட்டு அதைவிட மோசமாக எக்ஸிக்யூட் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த லட்சணத்தில் என் நண்பன் இப்படத்தின் நரேஷன் ராஷோமன் போல் இருக்கிறது என்று (பாராட்டாய்) சொல்கிறான். அவன் விருமாண்டி படம் பார்த்தால் அகிரா குரோசவா அதைப் பார்த்து தான் ராஷோமன் எடுத்தார் என சொல்லக்கூடும்!

கேனான் 5டி மற்றும் 7டி டிஜிட்டல் ஸ்டில் கேமெராக்களில் தான் (லென்ஸ்கள் மட்டும் சினிமா லென்ஸ்கள்) மொத்தப் படமும் ஒளிப்பதியப்பட்டதாய்க் கேள்விப்படுகிறேன். உலக அளவில் குறும்படக்காரர்கள் மத்தியில் - திரைப்படங்களிலும் கூட - இது பரவலாக இருக்கும் பழக்கம் தான். இந்தியில் ராம்கோபால் வர்மாவும் (Not a Love Story), அனுராக் கஷ்யப்பும் (That Girl in the Yellow Boots) இதை ஏற்கனவே செய்திருக்கிறார்கள். ஆனால் இப்படத்தில் அது சரியாய்க் கைகூடவில்லை என்று தோன்றுகிற‌து. நிறைய இடங்களில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படம் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வு ஏற்படுகிறது. நேச்சுரல் லைட்டிங் எல்லாம் இக்கதைக்குத் தேவை தான். ஆனால் ஒளிப்பதிவில் ஜீவன் இல்லை. காதல் படம் கூட எந்த‌ லைட்டிங்கும் இல்லாமல் ஒளிப்பதிவு செய்யப்பட்ட படம் தான். ஆனால் அது அப்படத்திற்கு அவ்வளவு அழகான ஓர் உயிரோட்டத்தை நல்கியது. இது வித்தியாசமான முயற்சியாக மட்டும் தேங்கிப் போகிறது.

இசை. இரண்டே பாடல்கள். ஒரு பாடல் நலம். இசையற்ற குரல் ஒலிக்கும் மற்றது நாராசம். போலவே பின்னணியிசை.

வேலு (ஸ்ரீ), தினேஷ் (மிதுன் முரளி) மற்றும் ஆர்த்தி (மனீஷா யாதவ்) ஆகியோரின் நடிப்பு அபாரம். குறிப்பாய் ஸ்ரீயின் கண்களில் ஒரு கனல் இருக்கிறது. சரியான வாய்ப்புகள் அமைந்தால் பிரமாதமாய்ப் பிரகாசிப்பார் எனத் தோன்றுகிறது. எல்லோரும் விதந்தோதும் ஜோதி (புனே திரைப்படக் கல்லூரி மாணவி ஊர்மிளா மகந்தா) என்னளவில் சுமாராகவே ஸ்கோர் செய்கிறார். அவர் நடிப்பில் உயிர் இல்லை. பாத்திரத்துக்கும் பொருத்தமில்லை. வேலுவின் நண்பனாக வரும் சிறுவன் கதாபாத்திரமும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரமும் பொறுமையை சோதிக்கின்றன. என்னவோ தெரியவில்லை, தினேஷின் அம்மா ஜெயலக்ஷ்மியின் (ரித்திகா) கதாபாத்திரம் எனக்கு நடிகை புவனேஸ்வரியை நினைவுபடுத்தியது!

வழக்கு எண் : 18/9 படத்தைப் பற்றி வேறொன்றும் சிலாக்கியமாய்ச் சொல்ல விஷயமிருப்பதாக நினைவில்லை.

*

என் பிரச்சனை பாலாஜி சக்திவேல் என்கிற ஓர் எதிர்பார்ப்புக்குரிய இயக்குநர் இப்படி ஒரு ஜங்க் படத்தை எடுத்திருப்பது அல்ல. அதற்கான பூரண சுதந்திரம் அவருக்கு இருக்கிறது. என் கவலை, என் அக்கறை, என் ஆதங்கம் எல்லாம் இந்தக் குப்பையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் விமர்சகர்களின் மனநிலை ஸ்திரத்தன்மை குறித்தானது.

வேலாயுதம், மங்காத்தா - இரண்டுக்கும் கைத்தட்டியவர்கள் குறித்து எனக்கு எவ்விதப் புகாருமில்லை. ஒப்பீட்டளவில் சற்று புத்தி குறைந்தவர்கள் என்பதைத் தாண்டி அவர்கள் எந்த ஆபத்துமில்லாதவர்கள். ஆனால் இது போன்ற அரைகுறை யாதார்த்த முயற்சிகளை ஆஹா ஓஹோவென புகழ்வதையே வேலையாய் வைத்திருப்பவர்கள் விஷச்செடிகள். ஆட்டு மந்தை மூளைகள். நல்லகலையை முளையிலேயே வேரறுக்கும் தீவிரவாதிகள். உண்மையில் இந்த போலி புத்திஜீவிகள் தாம் தமிழில் நல்ல சினிமா உருவாவதை தம் புண்ணாக்குக் கருத்துக்களால் புண்ணாக்கிக் கருவறுக்கும் க்ரிமினல்கள்.

நான் தெரியாமல் தான் கேட்கிறேன் - இதெல்லாம் சிறந்த படம் என்றால், பருத்திவீரன், சுப்ரமணியபுரம், ஆடுகளம், பூ, நந்தலாலா, ஆட்டோகிராஃப், வெண்ணிலா கபடிக்குழு, வெயில் போன்றவை எல்லாம் என்ன? இதே இயக்குநர் எடுத்த காதல் என்ன? இப்படங்களுக்கெல்லாம் ஏணி வைத்தாலும் எட்டாத அதள‌பாதாளத்தில் கிடக்கிறது வழக்கு எண் : 18/9.

பொய் சொல்லும் வாய்க்கு போஜனம் இல்லை. என் அருமை நண்பர்களே, தயவு செய்து இப்படம் ஒரு சாதனை என்ற உங்கள் பச்சைப் பொய்யை பகிரங்கமாக வாபஸ் பெறுங்கள். செய்தால் இன்றிரவு உங்கள் பீர் செலவு என்னுடையது!

*

Comments

/வேலாயுதம், மங்காத்தா - இரண்டுக்கும் கைத்தட்டியவர்கள் குறித்து எனக்கு எவ்விதப் புகாருமில்லை. ஒப்பீட்டளவில் சற்று புத்தி குறைந்தவர்கள் /

என்னய்யா இது...? இப்படில்லாமா யாராச்சும் ஸ்டேட்மெண்ட் விடுவாங்க? எனக்கென்னமோ இப்படிச் சொல்றவங்கதான் ஆபத்தானவங்களா தெரியுது.
Anonymous said…
பருத்திவீரன், சுப்ரமணியபுரம், ஆடுகளம், பூ, நந்தலாலா, ஆட்டோகிராஃப், வெண்ணிலா கபடிக்குழு, வெயில் போன்றவை எல்லாம் என்ன//
.
.
ஆடுகளம் எல்லாம் ஒரு படமா?மொக்கை!கொசுப்பய குசு விடுவதுக்கு தேசிய விருது நேரக்க்கொடுமைடா சாமி
மணிஜி said…
மீண்டும் ஒரு யூ டிவி படம் .விகடன் 55 மார்க் கொடுத்திருக்கிறது:-)
thangs said…
படத்தை வெறும் உணர்சிப்பூர்வமாகவே பார்த்து கொண்டாடிக்கொண்டிருந்த எனக்கு,இந்த விமர்சினத்தை முதலில் படித்த போது மண்டையில் அடித்தது போல் அதிர்ச்சியாக இருந்தது.நிதானமாக யோசித்துப்பார்த்தால் உங்கள் கோணம் ஒருவிதத்தில் சரியாகவே தோன்றுகிறது.நீங்கள் சொல்வதுபோல் பல குறைகள் இப்படத்தில் இருந்தாலும் பருத்திவீரன்,சுப்ரமணியபுரம் போன்ற நல்ல படங்களின் முயற்சிக்கு இது சற்றும் குறைந்த படமல்ல என்பதே என் கருத்து.தலையில் தூக்கி கொண்டாட முடியாவிட்டாலும் நிச்சயம் இதை குப்பை என்று ஒற்றை வார்த்தையில் ஒதுக்கிவிடமுடியாது .
சிந்திப்பவன் said…
CSK,

மனமிருந்தால்,இந்தப்படத்திற்கு யுவகிருஷ்ணா என்ற பதிவர் எழுதியுள்ள விமரிசனம் படித்துப்பாருங்கள்.
மிகவும் தெளிவான நேர்மையான விமரிசனம்.

மற்றபடி "நடுநிசி நாய்கள்" என்ற காவியத்தை ரசித்தவரும்,

"பரத்தையர் கூற்று" எனும் மகாகாவியத்தை படைத்தவரும்,

"ங்கோத்தா" போன்ற கவிதைகளை தமிழுக்கு அளித்தவருமான

CSK யிடம்,

தன் படைப்பு திட்டு பெறுவதை பாலாஜி சக்திவேல் ஒரு பேரருதிஷ்டமாக கருதுவார் என்பது திண்ணம்.

முடிவாக
வெந்நீரே போடத்தெரியாத சமையல்காரன் வெஜிடபிள் பிரியாணி செய்ய சொல்லிதருவதாக சொன்னானாம்.

நீரும் உம் ரசனையும்!
பாலாஜி சக்திவேல் பேட்டியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.நீங்கள் ஏன் எப்பவும் சீரியசான படங்களையே எடுக்குறீங்க?ஆமா காமெடி படம் எடுக்க சொன்னா பெப்சி பாட்டிலில் எச்சில் துப்புவது உச்சா போவது போன்ற Fetish காட்சிகளை வைத்து நம்மை சிரிக்க சொல்லி டார்ச்சர் செய்யணுமா?இதுக்கு ஞே... ஞே... ஞே... வே தேவல!
Anonymous said…
இவர் வாங்கிக் கொடுக்கும் பீரைக் குடித்து விட்டு , 'இந்தப் படம் சிறந்த படம் தான்' என்ற சிவப்பு உண்மையை உரத்துக் கூறுங்கள்....அப்படிக் கூறினால் சைட் டிஷ் செலவு என்னுடையது.
{படத்தில் வைக்கப்பட்டிருக்கும் பல நாடகத்தனமான முதிர்ச்சியற்ற காட்சிகள் கொல்கின்றன (உதாரணம்: அந்த பாலியல் தொழிலாளி சம்மந்தப்பட்ட காட்சிகள்). }

இதில் என்ன முதிர்ச்சியின்மையைக் கண்டீர்கள்? சக மனிதனிடம் பரிதாபம் கொள்ளும் அந்தப் பாத்திரத்திற்கேற்ற முக மற்றும் உடலமைப்பு கொண்ட, திரை அனுபவமற்ற பெண்மணி , இந்த அளவுக்கு நடித்ததே பிரமாதம்.

{யதார்த்தமாய்க் காட்டுகிறேன் பேர்வழி என்று முயற்சிக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஆபாசமாய்த் துருத்திக் கொண்டு பல்லிளிக்கின்றன (உதாரணம்: ஜோதியின் அம்மா பார்க்கும் போதெல்லாம் வேலுவைத் திட்டும் காட்சிகள்).}

இதில் என்ன மிகைப்பட்டு விட்டது? 'பெண் பிள்ளைகளை இப்படி வளர்க்கலைன்னா உங்கள மாதிரி பசங்க கிட்டயிருந்து பாதுகாக்க முடியுமா' வென அண்ணாச்சி ஒருவர் ஒரு காட்சியில் சொல்வார். இந்த ஒரு வசனமே அந்த அம்மாவின் செய்கையை நியாயப்படுத்துகிறதே. மேலும், இது போன்ற அம்மாக்கள் ஏராளம் உண்டு.
{அதே போல் எண்ணிலடங்கா தர்க்கப்பிழைகள் படம் முழுக்க‌ மண்டிக் கிடக்கின்றன (உதாரணம்: ஆர்த்தியின் விவரணையில் தினேஷ் தண்ணீர் வால்வை அடைக்கும் காட்சி எப்படி வந்தது?).}
விட்டால் , தினேஷ் ஸ்கூலில் அவன் நண்பர்களோடு பேசுவது , cofee shop ல் ஆர்த்திக்குத் தெரியாமல் அவன் நண்பர்களிடம் போனில் பேசி mms அனுப்பச் சொல்வது, item என்று போனில் பதிந்து வைத்திருப்பது ....இத்யாதி காட்சிகள் எல்லாம் ஆர்த்தியின் விவரணையில் எப்ப்டி வந்தது என்று கேட்பீர்கள் போலிருக்கிறது. இதெல்லாம் பார்வையாளனுக்கு ஐயா .....
{அதிகார‌த்தையும் பணத்தையும் தோலுரிக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் காட்சிகள் ஒரு ஹரி படத்தின் மசாலாக் காட்சிகளுக்கு இணையான நகைப்புக்குரியதாக இருக்கின்றன (உதாரணம்: தினேஷின் அம்மா மற்றும் அமைச்சர் இடையேயான காட்சிகள்). }
இந்தக் காட்சிகள் தேவையில்லை என்கிறீர்களா ? அல்லது இப்படி எல்லாம் நடக்காது என்கிறீர்களா? அந்தப் பெண்மணியின் பின்புலத்தைக் காட்டத் தேவைப்ப்டும் அந்தக் காட்சிகள் மிக decent ஆகவே நகர்கின்றன.
{எளியவர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் தமிழ் சினிமா பார்த்து நைந்து போன க்ளீஷே (உதாரணம்: வேலுவின் சிறுவயதுக் காட்சிகள்). }
க்ளீஷேவாக இருந்தால் தான் என்ன ? எளியவர்கள் சுரண்டப்படுவதையும் புது மாதிரியாக எடுத்தால் தான் பார்ப்பீர்களா? சுரண்டப்படுகிறார்கள் என்ற சுடும் உண்மை போதாதா? க்ளீஷே காட்சிகளைக் குறை கூறுவதே இப்போது க்ளீஷே ஆகிவிட்டது , பிரதர்.
மேடேஸ்வரன் http://medeswaran.blogspot.in said…
{அதே போல் சமூகத்துக்கு கருத்து சொல்கிறேன் என்று சம்மந்தமே இல்லாமல் வரும் காட்சிகளும் எரிச்சலூட்டுகின்றன (உதாரணம்: கூத்துக்கலை தொடர்பான காட்சிகள்). }
கூத்துக் காட்சிகளின் மூலம் எந்தக் கருத்தையும் வலிந்து சொல்ல முனையவில்லை.கூத்துக் கலை அழிந்து வருவதை சமூகப் பிரக்ஞையுடன் சுட்டிக் காட்டுகிறார் என்று சொல்லலாம். இதைக் கூட ஒரு பாத்திரத்தின் பின்புலத்தை விவரிக்கும் வாய்ப்பில் சொல்லக் கூடாதா? மேலும் அக்காட்சிகள் அந்தப் பாத்திரத்தின் தன்மைக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளன.

{கடைசியில் பொயட்டிக் ஜஸ்டிஸ் வழங்கும் போர்வையில் செய்யப்பட்டிருக்கும் காட்சிகள் (உதாரணம்: ஜோதி இன்ஸ்பெக்டரைப் பழி தீர்ப்பது)}
அடக்கி ஆளும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாமல் மௌனியாகவே இருக்கும் பொதுஜனத்தின் கோபத்தை வெளிப்படுத்தும் அந்தக் காட்சியும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

{அர்த்தியை எடுத்த எம்எம்எஸ்ஸை இன்னும் நானே பார்க்கவில்லை தினேஷ் சொல்வதன் மூலம் இயக்குநர் எதை நிரூபிக்க முயல்கிறார்? நாயகி இன்னமும் களங்கப்பட‌வில்லை என்றா?}
ஆமாம் என்றே வைத்துக் கொண்டாலும் அதில் என்ன தவறு ? கதையோட்டத்தோடு ஒன்றி விட்ட ,அந்த வயதுப் பெண்பிள்ளை கொண்ட எந்த ஒரு பார்வையாளனுக்கும் அந்தக் காட்சி சிறு ஆசுவாசம் தரும். இதுதான் இயக்குனரின் வெற்றி.
மேடேஸ்வரன் http://medeswaran.blogspot.in said…
{எம்எம்எஸ் எடுத்துப் பரப்பும் மாணவர்களுக்கு அந்த இன்ஸ்பெக்டர் தோப்புக்கரணம் தண்டனையாய்த் தருவதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்? பணக்கார இளைஞர்களின் குற்றங்கள் இப்படி சுலபமாக மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன என்றா?}

உங்கள் கேள்வி கேலிக்குரியதாக இருக்கிறது. இன்ஸ்பெக்டர் அந்த மாணவர்களைத் தண்டிப்பது அல்ல ,அந்தக் காட்சியின் பிரதான நோக்கம். நாம் கண்டு கொள்ள விரும்பாத , நம்மால் தடுக்க இயலாத, ஆனால் நம்மைச் சுற்றி தினமும் நடந்து கொண்டிருக்கும் சீரழிவுகளை நாசூக்காக மக்கள் முன் வைப்பதே நோக்கம். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.அந்தக் காட்சியைக் குடும்பத்துடன் அமர்ந்து நெளியாமல் பார்க்க முடிவதே அதற்குச் சான்று.

{அப்புறம் அமைச்சரின் முகத்தை எதற்கு ஸ்மட்ஜ் செய்து காட்டி இருக்கிறீர்கள்? சென்ஸார்ஷிப்பா? க்ரியேட்டிவிட்டியா?}

ஒரு வேளை , அந்த அமைச்சரின் முகம் நிஜ வாழ்வின் பிரபலம் ஒருவரை ஞாபகப்படுத்துவதாக இருந்திருந்து சென்சார் செய்யப்பட்டிருக்கலாம். அல்லது, இயக்குனரின் க்ரியேட்டிவிட்டியாகக் கூட இருக்கலாம்.எதுவாயிருந்தால் என்ன ? ரசிக்க முடிந்ததல்லவா? கேள்வித்தாள் தயாரிக்க வேண்டுமென்ற நோக்கத்திலேயே படம் பார்ப்பீர்கள் போலும்!
மேடேஸ்வரன் http://medeswaran.blogspot.in said…
{சிறுவன் கதாபாத்திரமும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரமும் பொறுமையை சோதிக்கின்றன. என்னவோ தெரியவில்லை, }

அந்த இன்ஸ்பெக்டர் பாத்திரத்தின் தன்மையும், அவரது நடிப்பும் , வசனங்களும் , உச்சரிப்பும் எதார்த்தத்திற்கு மிக அருகில் இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்ற ஒரு காரணத்தினாலேயே நமக்குக் கண்டிப்பாக பிடிக்கக் கூடாது என்பது மேனியாவா , போபியாவா?

{இதெல்லாம் சிறந்த படம் என்றால், பருத்திவீரன், சுப்ரமணியபுரம், ஆடுகளம், பூ, நந்தலாலா, ஆட்டோகிராஃப், வெண்ணிலா கபடிக்குழு, வெயில் போன்றவை எல்லாம் என்ன}

நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லாப் படங்களும் , அவை எடுத்துக் கொண்ட பேசு பொருளை, திறமையாக present பண்ணிய விதத்தில் ஆகச் சிறந்தவையே. ஆனால் தற்கால சமூகத்துக்குத் தேவையான பேசு பொருளை துணிந்து தேர்ந்தெடுத்த விதத்திலும் , அதைக் காட்சிப்படுத்திய விதத்திலும் இந்தப் படம் அவையனைத்தையும் விஞ்சியிருப்பதே உண்மை.
Anonymous said…
@மேடேஸ்வரன்,

மேடேஸ்வரன், உங்கள் கொந்தளிப்பை படித்த போது நீங்கள் சரியா சிஎஸ்கே சரியா என்பதே எனக்கு தேவை அல்ல என பட்டு விட்டது. யாரும் எதையும் நிரூபிக்க வேண்டாம் என்ற ஆத்மாநாம் வரி நினைவிற்கு வருகின்றது. தன் கருத்தே தான் என்பதால் இப்படி ஒரு கொந்தளிப்பு.
Kumar said…
CSK விற்கு பாலாஜி சக்திவேல் மீது அப்படியென்ன கோபம் என்று தெரியவில்லை. நீங்கள் திட்டி தீ வாரி கொட்டும் அளவிற்க்கு இந்த படம் மோசம் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி