(மீண்டும்) சகா : சில குறிப்புகள் - 15

சுற்றிச் சூழ்ந்திருக்கும் நூறு பெண்டிரில் நன்கு மடியும் பதம் செறிந்துள்ள ஒற்றைச்சிட்டை நச்சென்று முதல் பார்வையில் கண்டுகொள்வான் சகா என்பதே இத்தொடரின் அச்சாணி. கும்ஃபூ போல், திருட்டு போல், சுயஇன்பம் போல், இதை தன் தினசரி சிரமங்களினூடாய் இழையோடும் ஓர் வாழ்க்கைக் கலையாகவே நிகழ்த்தி வந்தான் சகா என்றால் அதில் உயர்வு நவிற்சி ஏதுமில்லை. இந்த phenomenon-ஐ விளக்க விக்ரம் சாராபாயைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறான் சகா.

"He who can listen to the music in the midst of noise can achieve great  things."

*******

சகா : சில குறிப்புகள் என்ற இந்தத் தொடரின் பதின்மூன்றாம் அத்தியாயத்தில் ஆரவாரமின்றி அறிமுகமாகி இருக்கிறாள் மதுமிதா எனும் தேவதை. அதை எழுதும் போது இத்தொடரில் அவள் பெறப்போகும் முக்கியத்துவம் பற்றி அணுவளவும் யான் அறிந்திலன். சகாவுக்கே தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது அவள் தான் சகாவின் Spiritual Striptease.

சகா தன் இருபத்தாண்டு போக வாழ்வில் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகையில் "காதல்" என்ற கெட்ட வார்த்தையைப் பயன்படுத்துகிறான் என்றால் அது நானறிந்து மதுமிதாவுக்கு மட்டும் தான்.அவனது அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றை எழுதுபவன் என்ற முறையில் content generationக்கு பங்கம் வந்து விடுமோ என்ற அளவில் எனக்கு இவ்விடயம் பேரதிர்ச்சி.

ஏகப்பட்ட பத்தினிகளோடு இருந்தவன் ஏகபத்தினி விரதனாக ஆகப் போகிறானோ என நினைத்து விசாரித்தால், "மாதம் முழுக்க ஒரே யூனிஃபார்ம் போட்டு நைட் ட்யூட்டி பார்க்க நான் என்ன வாட்ச்மேனா?" என்கிறான். ஆறுதலாய் இருந்தது.

*******

இதையெல்லாம் விடக் கொடுமை மதுமிதாவிடம் என்ன பிடிக்கும் எனக் கேட்டால் "முகம்" என்று சொல்கிறான் சகா.

எல்லாம் கலிகாலம்!

*******

தன் செல்லில் பேலன்ஸ் இல்லாததால் "அவசரமாகப் பேச வேண்டும். கால் பண்ணு" என்று மதுமிதாவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினான் சகா. அவள்  "இப்போது வேறு வேலையாக இருக்கிறேன். மாலை பேசுகிறேன்" என்று பதில் அனுப்பினாள். சொன்னது போல் மாலை ஃபோன் செய்தாள். அதைக் கட் செய்து விட்டு கீழ்கண்ட  எஸ்எம்எஸை அனுப்பினான் சகா:

நான்கு விஷயங்கள்:
  1. இப்போது நான் பிஸி. பேச முடியாது.
  2. அந்த‌ மெஸேஜை தவறாக உனக்கு அனுப்பி விட்டேன். பேச ஏதுமில்லை.
  3. நான் நிறையக் குடித்திருக்கிறேன். பேசினால் சரிவராது.
  4. மேலே சொன்ன மூன்றுமே பொய். பேச விருப்பமில்லை என்பது தான் உண்மை. 
*******

சகா தன் ட்விட்டர் ஹேண்டிலை இத்தொடரில் பிரசுரம் செய் என மிரட்டாத குறையாக் கேட்டுக் கொண்டே இருக்கிறான். சகா எப்போதும் Cash Cow தான் எனினும் விஷயத்தின் சாதக பாதகங்களை SWOT analysis செய்து வருகிறேன். பார்க்கலாம்.

*******

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி