மண்மகள் [தீபாவளி சிறப்புச் சிறுகதை]
******* அதன் பெயர் வைதேக ராஜ்யம். கங்கையும் சிந்து நதியும் போட்டிபோட்டுப் படுகையமைத்து வளப்படுத்தும் பெருநிலப்பிரதேசம். வாழும் குடிகட்கு வாரி ஈந்த அப்பூமி ஆளும் அரசனுக்கு ஓரவஞ்சனை செய்திருந்தது. வைதேக நாட்டை அப்போது ஆண்டு வந்தவன் சீரத்வாஜன். அவன் மனைவி சுனன்யை. அந்நாட்டை அடுத்து ஆட்சிப் பரிபாலனம் செய்ய அத்தம்பதியர்க்கு புத்ரபாக்கியம் இல்லை. அவர்கள் காத்திருந்தார்கள். ******* அதன் பெயர் தர்பைப்புல் தீர்த்தம். மஹாவிஷ்ணு மனங்கொண்ட மஹாலக்ஷ்மி அதில் வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கை. மாமுனியான க்ருத்சமத மகரிஷிக்கு அதன் மேல் மிகுந்த ப்ரேமை. பல்வேறு மந்திர உச்சாடனங்களால் அதனைப் பரிசுத்தப்படுத்தி தவம் புரிந்து வந்தார். தன் தர்மபத்தினியின் வயிற்றில் சாட்சாத் மஹாலக்ஷ்மியே வந்து பிறக்க வேண்டும் என்ற நினைப்பு அவருக்கு. அவர்கள் காத்திருந்தார்கள். ******* அவன் பெயர் ராவணேஸ்வரன். லங்கையின் மகராஜன். பிறப்பால் பாதி அசுரன்; மீதி பிராமணன். தவம் புரிந்து பிரம்மனிடம் வரம் பெற்றவன். கிட்டதட்ட சாகாவரம் - தெய்வங்களாலோ தேவர்களாலோ அசுரர்களாலோ மிருகங்களாலோ மரணம் சம்பவிக்காத வரம். அவனது மனைவி ...