ஸ்பாம் மெயில் - ஓர் எதிர்வினை

நேற்று எஸ்.ராமகிருஷ்ணன் தான் தாகூர் இலக்கிய விருது பெற்ற செய்தியை மின்னஞ்ச‌ல் வழி இணையத்தில் எழுதும் குறிப்பிட்ட சில நூறு பேர்களிடையே பகிர்ந்திருந்தார். அதற்கு ரிப்ளை ஆல் செய்து வாழ்த்தியவர்களைக் கண்டித்து, தங்களுக்கு அது தொந்தரவாயிருக்கிறது என்ற தொனியில் கவிஞர் வா.மணிகண்டன், பதிவர் சந்தன‌முல்லை இருவரும் சொல்லியிருந்தார்கள. சக மனிதனை மதிக்காத சூழ்நிலையில் தான் அவனுக்கு மேலாகத் தன்னைக் கருதிக் கொண்டு அறிவுரை சொல்லும் திமிர் வரும் என நான் கருதுவதால் அந்த பூர்ஷ்வாத்தனத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டியது அவசியமாகிறது.

*******

அன்பில்லாத வா.மணிகண்டன் மற்றும் சந்தனமுல்லைக்கு,

ரிப்ளை ஆல் போட்டு எல்லோர்க்கும் மெயில் அனுப்புவது நிச்சயம் ஸ்பாம் செய்வது தான். நான் செய்ய விரும்பாததும், அடுத்தவர் எனக்கு செய்வதை வெறுப்பதுமான‌ ஒரு வேலையே அது. என் புத்தக வெளியீட்டு விழாவிற்கான அழைப்பை எல்லோர்க்கும் அனுப்பி வைத்த போது,‌ எல்லோரும் வாழ்த்துச் சொல்லி ரிப்ளை ஆல் செய்ய ஆரம்பிக்க எனக்கு மிகவும் சங்கடமாகிப் போனது (எஸ்.ரா. கூட அப்பட்டியலிலிருந்து என்னைத் தனியஞ்சலில் கடிந்து கொண்ட நினைவு). அதனால் ரிப்ளை ஆல் செய்வது மாற்றுக்கருத்தின்றி நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று தான்.

உங்களது மின்னஞ்சல்களுக்குப் பின் எஸ்.ரா.விற்கான என் வாழ்த்துச்செய்தியை நான் வேண்டுமென்றே தான் ரிப்ளை ஆல் செய்தேன். உங்களது மேதாவித்தனமான கருத்து முத்துக்களுக்கான‌ என் தரப்பு எதிர்ப்பினைப் பதிவு செய்யும் முகமாகவே அப்படிச் செய்தேன். அவ்விடத்தே மௌனம் காத்தது எஸ்.ரா. என்ற மாபெரும் எழுத்தாளனுக்காக‌. அந்த மெயில் செயின் திசை மாறிப்போய் விடக்கூடதென்பதற்காக. அங்கே விடுபட்டவைகளைத் தாம் இங்கே பேசித் தீர்க்க வந்திருக்கிறேன்.‌

என் இனிய நண்பர்களே, உங்களுக்கெல்லாம் ஸ்பாம் மெயிலே வருவதில்லையா. ஒரு வாரத்தில் உறுப்பைப் பெரிதாக்குங்கள், நைஜீரியாவில் பல மில்லியன் டாலர்கள் பணம், மொக்கைத்தனமான ஃபார்வேர்ட்கள் என எத்தனையோ வகை ஸ்பாம் மெயில்களை நாம் ஒவ்வொருவரும் தினமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒன்றைத் தடுத்தாட் கொண்டால் புதிதாய் மற்றொன்று உதயமாகும். வெட்ட வெட்டக் கிளைக்கும் ஓர் ராட்சச விருட்சத்தைப் போலத்தான் இன்றைய தேதியில் ஸ்பாம் மெயில்களின் அபார வளர்ச்சி அமைந்திருக்கிறது (அப்படியில்லாமல் ஒரு ஸ்பாம் கூட வாராது உங்கள் மின்னஞ்சல் பெட்டியைப் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள் எனில் அத்தொழில்நுட்ப ரகசிய‌த்திற்காகவே கூகுளிலோ, யாகூவிலோ உங்களைக் கொத்திக்கொண்டு போய் ஸ்பாம் ஃபில்டர் டிசைன் ஆர்க்கிடெக்சர் டீமில் ஏழு இலக்க மாதச்சம்பளத்தில் வேலை தந்து அழகு பார்ப்பார்கள்).

அப்படி இல்லை தினமும் நான் ஸ்பாம் மெயில் பெறும் ஆசாமி தான், அதைச் சத்தமின்றி அழித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்க்கொண்டே இருப்பேன் என்பது உங்கள் பதிலாக இருந்தால், இன்று எல்லோர்க்கும் ஸ்பாம் அனுப்பாதீர் என்று குற்றச்சாட்டு வைத்து நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் சீன் கிரியேட் பண்ணும் வேலையேயன்றி வேறென்ன? அதென்ன தமிழில் எழுதும் சக பதிவர்கள் என்றால் யார் எது சொன்னாலும் நவதுவாரங்களிலும் அரக்கூற்றி அடைத்துக் கொண்டு வாய் பிளந்து வாளாவிருப்பார்கள் என்ற எண்ணமா? உங்கள் அலுவலகங்களில் பிறந்த நாள் வாழ்த்து மெயிலனுப்பி ஸ்பாம் செய்பவர்களை இப்படித்தான் அறச்சீற்றத்தோடு கடிப்பீர்களா? மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்.

எஸ்.ரா. தன் மகிழ்ச்சிச் செய்தியை குறிப்பிட்ட சிலரோடு பகிர்கிறார். கேட்பவர்கள் அவரை எல்லோர்க்கும் முன்பாக பாராட்டுகிறார்கள். கிட்டதட்ட இது ஒரு பாராட்டுக் கூட்டம் மாதிரி தான். ஒரே வித்தியாசம் இது திடலில் நடைபெறாது மடலில் நடைபெற்ற‌து. அவ்வளவு தான். விருப்பமிருந்தால் பாராட்டுங்கள். இல்லையென்றால் சப்ஜெக்ட் லைனை வைத்து ஸ்பாமுக்கு போகுமாறு ஒரு மெயில் ஃபில்டர் க்ரியேட் செய்து விட்டால் அந்த மெயில் செயினை தொடரும் மின்னஞ்சல்கள் அனைத்தும் தாமாக ஸ்பாம் ஃபோல்டருக்குச் சென்று விடும். இதற்கான‌ புத்தியோ பொறுமையோ இல்லையெனில் ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள்.

அவ்வளவு சுத்தம் பார்ப்பவர்கள் தத்தம் மின்னஞ்சலை இப்படிப் பொது வெளியில் விட்டு வைத்திருக்கக்கூடாது. இணையம் போன்ற பொது ஊடகத்திற்கு வந்த பிறகு இது போன்ற சில்லறைத் தொந்த‌ரவுகள் எல்லாம் மிக சகஜம். இதற்கெல்லாம் தொட்டாற்சிணுங்கியாக இருந்தால் கதைக்குதவாது. இந்த விடயத்தைப் பொறுத்தமட்டில் ஸ்பாம் மெயில் என்பது மிகச்சிறிய பிரச்சனை. அதைப் பொறுத்துக்கொள்ளும் அடிப்படை சகிப்புத்தன்மை கூட இல்லையென்றால் நீங்களெல்லாம் என்ன எழுதிக் கிழித்து விடப்போகிறீர்கள்?

-CSK

*******

இவர்களுக்கான‌ தக்க‌ பதிலை சாத்வீக முறையில் பதிவர் ஆதிமூலகிருஷ்ணன் அந்த மெயில் செயினிலேயே தெளிவாக மொழிந்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் சாத்வீகம் எல்லா இடங்களிலும் செல்லுபடியாவதில்லை.

Comments

Unknown said…
எனக்கும் அவர்களுடைய பதில் சற்றே எரிச்சலூட்டும் படியாக இருந்தது. சந்தனமுல்லை முன் வைத்த கருத்தும், வார்த்தைப் பதமும் சரியில்லை. அங்கே ஏதாவது சொல்லலாம் என்று நினைத்தேன்.

எதிர்வினை வேறுதிசைக்கு இட்டுச் செல்லும் என்பதால் மௌனமாகத் திரும்பிவிட்டேன்.
Natraj.P said…
அழகாக இருவரை கழுவேற்றிவிட்டீர்கள்
மகிழ்ச்சியை ரிப்ளை ஆல் செய்து பகிர்ந்துக் கொள்வதில் தப்பில்லை.
Anonymous said…
நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் நீங்க twitter ல ஒரு தடவ " நல்லப் பதிவு ன்னு பின்னூட்டம் போடற பன்னாடைகள என்னப் பண்றது " ன்னு போட்டது ஞாபகம் வருது. சொக்கன் கூட உங்களுக்கு அதை சுட்டிக் காட்டினார் ! ! அது சரி இல்லைன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கனும் ! !

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி