சுஜாதா விருதுகள் - 2011 : சில குறிப்புகள்

உயிர்மை குழுமம் வழங்கும் சுஜாதா விருதுகள் - 2011 அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4212

இணையப்பிரிவில் அடியேனின் பெயரும் பொடியெழுத்துக்களில் இடம் பெற்றுள்ளது.

*******

உயிர்மை குழுவினரால் இறுதி தேர்விற்காகப் பரிந்துரைக்கப்பட்ட 6 இணைய‌தளங்களில் என்னுடையதும் ஒன்று. பின் இறுதிச்சுற்றில் சாரு நிவேதிதா, ஷாஜி மற்றும் தமிழ் மகன் ஆகியோரால் 30க்கு 10 புள்ளிகள் அளிக்கப்பட்டு 4ம் இடம் வழங்கப் பட்டிருக்கிறது. முதல் கட்ட‌ உயிர்மை குழுவுக்கும் இறுதிச் சுற்றின் நடுவர் குழுவுக்கும் நன்றிகள் உரித்தாகுக‌.

இந்த இடமே நான் எதிர்பாராரது தான். காரணம் கடந்து போன‌ ஒன்றரை ஆண்டுகளாகவே வலைப்பதிவில் நான் தீவிரமாக இயங்கியிருக்கவில்லை. எழுதிய சொற்ப இடுகைகளும் பெரும்பாலும் சினிமா தொடர்பானவையே. கிட்டதட்ட ஒரு‌ மின்னூடக‌ வண்ண‌த்திரை ஆகி விடக்கூடிய அபாயத்துடன் தான் என் வலைப்பதிவு இருந்து வருகிறது. இச்சூழலில் உயிர்மை விருதுகளுக்காக விண்ண‌ப்பிக்கையில் பதிவின் பத்து முக்கிய இடுகைகளின் சுட்டிகளை அளிக்கக் கேட்டிருந்தார்கள். அத்தேர்விற்கே விழி பிதுங்கி விட்டது எனக்கு.

*******

கீற்று, தடாகம், வல்லினம், தங்கமீன், அதீதம் போன்ற இணைய இதழ்களுக்கும், தனி மனிதர்களால் நடத்தப்படும் வலைப்பதிவுகளுக்கும் ஒரே பிரிவில் ஒரே மாதிரியான அளவுகோல்கள் பயன்படுத்தி விருதளிப்பது சரியாகப்படவில்லை. பலர் பங்கெடுப்பதன் காரணமாக பொதுவாக இணைய இதழ்களின் தரமானது வலைப்பதிவுகளினுடைய‌தைக் காட்டிலும் கூடுதலாகவே அமையும். அடுத்த முறை இணையப்பிரிவில் இணைய இதழ் மற்றும் வலைப்பதிவு என்ற உட்பிரிவுகளை மனுஷ்யபுத்திரன் ஏற்ப‌டுத்தினால் நல்லது.

*******

கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை தேர்வு முறையில் கூடுதல் transparency கடைபிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. விருது பற்றிய விமர்சனங்கள் காரணமாக இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக‌ எனக்கு இம்முறையும் விமர்சனங்கள் இருக்கின்றன.

*******

சுஜாதா என்கிற எழுத்தாளரின் தனிமனித‌ ரசனையோடு ஈராண்டு விருது முடிவுகளும் பொருந்திப் போகின்றனவா என்ற கேள்வியை மறுபடி மறுபடி கேட்டுக் கொள்கிறேன். அதாவது அவரே இருந்து தேர்ந்திருந்தால் இப்படைப்புகள் தாம் விருது பெற்றிருக்குமா? நண்பர் கார்த்திக் சுப்ரமணியன், "இதுக்கு ஒரு குழு வெக்கறது தப்பில்ல, ஆனா அதுக்கு சுஜாதா விருதுகள்னு பெயர் வைக்கறது சரியாப் படலை" என்று குறிப்பிட்டார். ஆம்.

*******

நவீன கவிதை என்ற வரையறையின் கீழ் வராது என்பது தெரிந்திருந்தும் பரத்தை கூற்று நூலினை உயிர்மை விருதுகளுக்கு விண்ணப்பித்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே...

*******

விருது பெற்ற / இறுதிச்சுற்று வரை வந்த‌ வலை நண்பர்களுக்கு (இணையப்பிரிவில் யுவகிருஷ்ணா, அதிஷா, சிற்றிதழ் பிரிவில் பொன்.வாசுதேவன்) என் வாழ்த்துக்கள்.

*******

முக்கியமாய் இவ்வருட விருதுகள் எனக்கு ஓர் அபாயச்செய்தியை அளித்திருக்கின்றன‌.

சிறுகதை, நாவல், கவிதை ஆகிய பிரிவுகளில் விருது பெற்ற / இறுதிச்சுற்று வரை எந்த நூலையுமே நான் படிக்கவில்லை (இந்த‌ ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒரு நூல் மட்டும் வாங்கப்பட்டு இன்னமும் உறை பிரிக்கப்படாத மெருகுடன் வாசிப்பிற்குக் காத்திருக்கிறது - சுகுணாவின் காலைப்பொழுது, கொற்கை மற்றும் கே அலைவரிசை). அதாவது 2010ம் ஆண்டில் வெளியான முக்கியமான புத்தகங்களில் கிட்டதட்ட எதுவுமே பரிச்சயமில்லை என்பது மிகுந்த ஆயாசம் அளிப்பதாய் இருக்கிறது. நகரத்து எந்திர‌ வாழ்க்கையின் அவசர ஓட்டத்தில் புத்தக வாசிப்பு என்பதன் முன்னுரிமையும் முக்கியத்துவமும் இரக்கமின்றிப் பறிக்கப்பட்டு விடுவதை சாதாரணர்கள் காரணமாய்ச் சொல்லிக்கொள்ள அனுமதியுண்டு.

ஆனால் முளைத்துக் கிளைக்க‌ விழையும் இளம் எழுத்துக்காரனுக்கு மன்னிப்பேயில்லை.

Comments

Anonymous said…
நண்பரே,

1. போனமுறை கொடுத்த மில் நாவல் ஆக மோசமான தேர்வு , பிரச்சார வகை . கொற்கையும் ஐவாஸ் போல , மிக சுமாரான நாவல் .//பெரிய வயல் - எம்.எஸ்.சண்முகம் - 17

4. மலைச்சாமி - வளவ.துரையன் - //

மற்ற இரண்டும் சுமாரான என்று சொல்லும் தகுதி கூட இல்லாத நாவல்கள் , சந்தேகமிருந்தால் படித்துப்பார்க்கலாம் .

2. யுவகிருஷ்ணாவின் பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டது சாருவுக்கு போட்ட ஜால்ராவிற்க்காக என உங்களுக்கே தெரியும் .

3. விருதுக்கு மதிப்பை கொண்டுவர வண்ணநிலவன் பெயர் சேர்க்கப்ப்ட்டுள்ளது , அவ்வளவே ,

திருப்தி சிற்றிதழ் பிரிவுக்கு மட்டுமே ,

ஒரு முறை இந்த விருது கொடுக்கப்பட்ட மில் போன்ற நாவலை படித்தவர்கள் இதை மதிக்க மாட்டார்கள் .

ஆனால் உயிர்மைக்கு ஆள்சேர்க்க தரப்படும் விருத்துக்கு சுஜாதா பெயர் , கொடுமை .

2 வருடங்களில் :ராஜராஜன் விருது போல கவனிப்பாரற்று போகப்போவது மகிழ்ச்சி
Anonymous said…
உயிர்மையே, உன் விலை என்ன?

உயிர்மையின் விருதுகள் மேலும் தரம் தாழ்ந்து போயிருப்பது குறித்து வருத்தமாக இருக்கிறது. அதிலும் சுஜாதாவின் பெயரால் இந்தக் கொடுமைகள் நிகழ்வது வருத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. (நல்ல வேளை அவர் உயிரோடு இல்லை). நீங்கள் குறிப்பிட்டது போல் இணையம் தொடர்பான பிரிவில் அது தனிநபர் வலைப்பதிவு / இணைய இதழ் என்கிற பிரிவுகளைச் சேர்க்கலாம் அல்லது தெளிவுபடுத்தலாம்.

இந்த பிரிவில் கடந்த வருடமே மிகச் சுமாரான ஒரு பதிவருக்கு விருதளிக்கப்பட்டதே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த வருடம் அதிலும் மண். தன்னை நியாயவான் போல தொடர்ந்து சித்தரித்துக் கொள்ளும் சாரு, தனது நண்பர்களுக்கே (நாகரிகம் கருதி இங்கு நண்பர்கள் என்றிருக்கிறேன்) மதிப்பெண்களை வழங்கியிருப்பது கொடுமை. கடைசி சுற்றில் வந்திருக்கும் பதிவுகளில் முதல் இரண்டு பதிவுகள், மற்றவற்றை விட எந்தவகையில் சிறந்தது என்கிற லாஜிக் புரியவில்லை. பார்க்கிற அனைவருக்மே இந்த முரணை உணர முடியும். (என் சாய்ஸ் உங்கள் பதிவு அல்லது தடாகம் பதிவு)

உயிர்மையின் இந்த அரசியல் கண்டிக்கத்தக்கது. இன்னொன்றும்.

அவர்களும் வந்திருப்பதில்தான் இருந்துதான் தேர்ந்தெடுக்க முடியும். மொத்தம் எத்தனை பதிவுகள் கலந்து கொண்டன என்பதை அறிந்து கொண்டால் எதுஎது நிராகரிக்கப்பட்டது என்பதையும் அறியலாம். உயிர்மை இதை வெளிப்படையாக அறிவிக்குமா? தேர்ந்தெடுக்கப்பட்டவையே இந்த லட்சணத்தில் இருந்தால், மற்ற பதிவுகள் இதனிலும் மோசமாக இருக்கும் என்று ஒரு 'வெளிநபர்' நினைத்தால் அதை விட கொடுமை வேறொன்றுமில்லை.
Anonymous said…
பைத்தியகாரபயலே உனக்கு விருது கொடுக்கவில்லை என்கிற ஆத்திரத்தில் நீயே அனானியாக பின்னூட்டி கைமுட்டி அடித்து அரிப்பை தீர்த்துகொள்கிறாயா

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி