பரத்தை கூற்று : செல்வேந்திரன் - 1

பரத்தை கூற்று தொகுதி பற்றி செல்வேந்திரன் சுமார் ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு மின்னரட்டையில் பகிர்ந்து கொண்ட‌ வாசக‌ அபிப்பிராயங்களின் கட்டுரை வடிவம் இது:

*******

தொகுப்பை வாசித்தேன். விமர்சனமாக இல்லாமல் அபிப்ராயமாக அத்தொகுப்பின் போதாமைகளைப் பற்றி எழுதுவதே உங்களுக்குச் செய்யும் உபகாரமெனக் கருதுகிறேன் நான். அல்லது நாமே கூட விவாதிக்கலாம். உங்கள் தொகுப்பில் சிறந்த கவிதைகள் இருக்கின்றன. அதைப் பற்றி பிறகு பேசலாம். முதலில் போதாமைகளைப் பற்றி.

பரத்தை என்கிற, பொது பாடுபொருளில் இருந்து மாறுபட்ட, கொஞ்சம் அதிர்ச்சிகள் கலந்த ஒன்றைப் பாடத்துணிபவனுக்கு இன்னும் கொஞ்சம் துணிச்சல் தேவை. உங்களது முன்னுரையில் இவையெல்லாம் என் அனுபவங்களா என்று கேட்காதீர்கள் என்ற கோரிக்கை த்வனிக்கிறது இல்லையா? அவை உங்கள் அனுபவம் என்றே வாசகன் கருதினால் அதனால் நமக்கு என்ன நஷ்டம்? மிகத் துணிச்சலான கவிப்பொருளுக்கு அந்த முன்னுடை ஒரு முரண். [இதற்கு, "அது பயம் அல்லது பலவீனம். சொந்த வாழ்க்கையின் ஸ்திரத்தன்மையைக் காத்துக் கொள்ளச் செய்யும் சிறு உபாயம். அதற்கு இச்சமூகத்தின் முதிர்ச்சிக்குறையும் ஒரு வகையில் பொறுப்பாகிறது" என்று நான் பதில் சொல்கிறேன்].

ஜெயன் அடிக்கடி சொல்வார் - ஜி. நாகராஜன் சித்தரித்த பரத்தையர்கள் அவர் காண விழைந்த பரத்தையர்களே அன்றி கண்ட பரத்தையர் அல்ல. நீங்கள் சித்தரித்த பரத்தையும் கண்ட பரத்தை அல்ல காண விழைகிற பரத்தையே. பரத்தையர்களின் கொலைப்பாதகமோ பொருட் பிடுங்கலோ அவர்கள் நட்டாற்றில் மூழ்கடித்த வரலாறோ இங்கே 99% இருக்கிறது. சமூக உயவுப்பொருளாக பரத்தையர்கள் செயற்படுகிறார்கள் என்பதற்காக அவர்களது செயற்பாடுகளனைத்தையும் நாம் கொண்டாடி விட முடியாது

உங்களுடைய எழுத்துக்களில் நேர்த்தியும், வார்த்தைத் தேர்வுகளில் கவனமும் இருக்கிறது. ஆனால், ஆனால், நான் தொலைந்த இடத்திலேயே நீங்களும் தொலைந்து விடக்கூடாது என்கிற அச்சம் எனக்கு இருக்கிறது. ஒரு நல்லெழுத்துக்காரனாய் பரிணமிக்க நீங்கள் நான்கு வரி, ஐந்து வரி தீர்ப்புகளை எழுதுவதைக் கைவிட்டே தீரவேண்டும். இவை துணுக்குத் தோரணங்கள் என்பதைத் தாண்டிய அந்தஸ்தினை ஒருபோதும் தரா. அப்புறம் பல்வேறு தடவைகள் சமூகம் கேட்டுப் புளித்த பழந்தமிழ் வசனங்களில் சிறிய வார்த்தை மாற்றம் செய்வது வார்த்தை விளையாட்டே அன்றி கவிதை அல்ல. நேற்று ஜெயனின் விமர்சன நூலில் ஒரு வரி படித்தேன்: ‘இலக்கியம் மொழியின் சாத்தியக்கூறுகளால் அல்ல; வாழ்வின் சாத்தியக்கூறுகளால் உருவாவதே’.

பரத்தைமையின் கவுச்சியை, கதறலை துள்ளத்துடிக்கச் சொல்லும் கவிதைகள் இத்தொகுப்பில் குறைவு என்கிறேன். தமிழின் முதல் துணுக்கு கவிஞராக நான் குலசேகர ஆழ்வாரைச் சொல்வேன். ரொம்ப எளிமைப்படுத்தல் அவரிடத்திலிருந்துதான் துவங்குவதாக என் யூகம். அடுத்து நகுலன். நகுலனின் கோட் ஸ்டாண்டு வகையரா அதன் எளிமைக்காக வாசகர்களைக் கவர்வதைக் காட்டிலும் கவிஞர்களைக் கவர்ந்த விஷ வித்து போலும். ரெண்டு பேரும் தான் நம்மைக் கெடுத்தச் சண்டாளர்கள்.

["இவற்றில் கணிசமானவை 5 வருடங்கள் முன்பு எழுதப்பட்டவை. இவை பெரும்பாலும் ஆழமற்ற வேடிக்கை பார்க்கிற வகைக் கவிதைகளே. எள்ளல் தான் இதன் ஆதார குணம். நல்ல இலக்கியத்திற்கு இந்த எள்ளல் மட்டும் போதாது என்பதும் புரிகிற‌து. இது சுஜாதா, வைரமுத்து பாணியில் அதே ஆழத்தோடு நின்றுவிடுகிற‌து" என்று பதில் சொல்கிறேன்].

தன் எழுத்தின் மீதான சந்தேகம் இருக்கும் வரை எழுத்தாளனுக்குத் தோல்வி இல்லை. அந்த சந்தேகத்தை அப்போதைய புறச்சூழல்கள் வெற்றிகொண்டு பாதி வெந்தவை பந்திக்கு வரும்போதே நாம் நம்முடைய தோல்வியை அறிவித்து விடுகிறோம்.

இப்படியெல்லாம் பேசுகிற உரிமை எனக்கு இருப்பதாக நான் நினைத்துக்கொள்கிறேன். உங்களை உற்சாகமிழக்கச் செய்வதென் நோக்கமல்ல. ஆனால் உங்கள் மொழி நேர்த்தி தாண்டி ஒரு வானம்பாடி குரல் ஒலிப்பதை என்னையன்றி யார் எச்சரிப்பார்? எழுதுகிற மொழியில் இருக்கிற ஓசை நயம்தான் உங்களுடைய தனித்துவம். தமிழில் ரொம்பவும் கொஞ்ச பேர்களுக்கே சாத்தியப்பட்டது அது. மகுடு அதில் ஒருவர்.

காந்தியின் நான்காம் குரங்கு கவிதை, தொடையிடுக்கில் வாங்கிக்கொள்வேன் சிறுவிளையாட்டாய், அணைத்துக்கொள்கிறேன் ஒரு தாயைப்போல, திருயோனிப்பெருஞ்சரிதம், 130, 131, 132 மற்றும் 133 ஆகிய கவிதைகள் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இதன் முன்னுரை மிக முக்கியமானது.

அபிலாஷைகள் இலக்கிய உத்வேகத்திற்குத் தடை. உங்களுடைய வெற்றி உங்கள் கவிதைகளின் ஏழாவது வரிக்கு மேல் துவங்கும் என எனக்குப்படுகிறது.

*******

பிற்சேர்க்கை - http://selventhiran.blogspot.com/2011/03/blog-post_19.html

*******

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்