தேகம் : A SCAN

'தேகம்' - சென்னைப் புத்தகச்சந்தையையொட்டி உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சாரு நிவேதிதாவின் புதிய நாவல். நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் இந்த நாவலை 'சரோஜாதேவி புத்தகம்' என்று சொன்னதன் காரணமாக(வும்) தற்போது தமிழ்ப் பதிவுலகில் மிகுந்த சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் உள்ளாகி வரும் ஒரு படைப்பு.

அன்றைய விழா அரங்கிலேயே குறைந்தபட்சம் 200 முதல் 250 பிரதிகள் வரை 'தேகம்' விற்றிருக்கும் என்பது என் அனுமானம். பின்பு கடந்த இரண்டு நாட்களில் வெளியே கடைகளில் ஒரு 50 பிரதிகள் விற்றது என வைத்துக் கொண்டால் கூட, வெளியான மூன்றே நாட்களில் ஓர் இலக்கியப் புத்தகம் 300 பிரதிகள் வரை விற்பது தமிழ்ச்சூழலில் மிகப்பெரும் வெற்றி என நினைக்கிறேன். ஒரு மாதிரியான நட்சத்திர‌ அந்தஸ்து இது.

கிரவுன் 1X8 அளவில் 175 பக்கங்கள் கொண்ட சிறுநாவல் இது. சிறுநாவல் என்றழைப்பது, சமகால‌ இலக்கியத்தில் வெளி வரும் நாவல்களுடனான‌ ஒப்பீட்டளவில் மட்டுமல்ல, சாரு நிவேதிதா இதுவரை எழுதிய நாவல்களிலேயே 'தேகம்' தான் அளவில் சிறியது.‌ நாவல் மிகச்சிறியது என்பதாலும், ஹைப் தரப்பட்டதன் காரணமாகவும் கிட்டதட்ட வாங்கிய எல்லோருமே இந்நேரத்திற்கு படித்திருப்பார்கள். இதுவரை வந்திருக்கும் விமர்சனங்களின் அதீத எண்ணிக்கை இதை உறுதி செய்கிறது (இதுவும் புதிது தான் - சினிமா தவிர்த்து, புத்தகத்துக்கு இவ்வளவு பதிவுகளை வலையுலகம் கண்டதில்லை).

முதலில் ஒரு விஷ‌யத்தைச் சொல்லி விடுகிறேன் - எல்லோராலும் (அதாவது சாரு, உயிர்மை, விழாவில் நாவல் பற்றி அற்புதமாய்ப் பேசின எஸ்.ராமகிருஷ்ணன், மற்றும் குறிப்பாய் இதுகாறும் நாவலைப் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ள வலைவாசிகள்) கவனமாய் முன்னிறுத்த‌ப்படுவது போல் 'தேகம்' முழுமையாய் வதை பற்றியது அல்ல. என்னைப் பொறுத்தவரை வதை என்பது இந்நாவலின் subtext அல்ல; subset மட்டுமே.

மொத்தம் 26 அத்தியாய‌ங்கள் கொண்ட 'தேகம்' நாவலின் மூன்றே அத்தியாயங்களில் மட்டுமே வதை பற்றிய நிகழ்வுகள் காட்சிரூபமாய் வருகின்றன. அவையும் ரொம்பவும் அதிர்ச்சியூட்டக் கூடியவையாக இல்லை. நம்மில் நிறையப் பேர் (குறைந்தபட்சம் நான்) ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் தேர்ட் டிகிரி டார்ச்சர் முறைகள் தான். குறிப்பாய் இதில் பெண்கள் வதை செய்யப்படுவதாய் சித்தரிக்கப்படவில்லை. அதாவது வதையின் வாதை பற்றியது எனும் போது ஒரு தேர்ந்த வாசகன் எதிர்பார்க்கும் உக்கிரம் (அல்லது வக்கிரம் என்றும் வைத்துக் கொள்ளலாம்) இந்த நாவலில் நிச்சயம் இல்லை. அது பெரும் குறை (ரிச்சர்ட் ஸ்ட்ராஸின் ஆப்பராவைப் போட்டு விட்டு வதை செய்தல் மட்டும் ஸ்பெஷல்).

எனது 'பரத்தை கூற்று' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய‌ சாரு தான் அப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ('தேகம்' தான்) ஒரு காலத்தில் தான் ஓர் ஆண் விபச்சாரியாக‌ (ஜிகிலோ) இருக்க நேர்ந்ததன் அனுபவ‌ங்களை ஒட்டியது என்றார். ஆனால் அதைப் பற்றிக்கூட அதிகபட்சம் இரண்டு மூன்று பக்கங்களில் மட்டுமே வருகிறது. அதே போல் ட்ரான்ஸ்ஜென்டர் சங்கதிகளையும் போகிற போக்கில் மட்டுமே சொல்லிச் செல்கிறார்.

அதே சமயம், நாவலில் சில புதிய / சுவராசிய விஷய‌ங்களும் இருக்கவே செய்கின்றன‌‌. குறிப்பாய் குப்பியடித்தல் - கேடமைட், கான்ட்ராக்ட் கில்லர், பேண்டீஸில் சுய‌மைதூனம், பஸ்ஸில் பெண்களை இடித்தல், பன்றிகளுக்கு காயடித்தல், மலம் அள்ளுதல், வளையம் மாட்டுதல், ப்ளோஜாப் விஷயம் போன்ற இடங்களை முக்கிய‌மான மற்றும் உயிர்ப்புள்ள பதிவுகளாகக் கருதுகிறேன். அப்புறம், நேஹா வரும் அந்த 20ம் அத்தியாயம் ஒரு riot.

உபனிஷத்துகளும், ஜென்னும், பைபிளும் ஈர்க்கவில்லை - கவிதைகள் மட்டும் ஓக்கே. மற்றபடி, நாவலில் வரும் பிற‌ பகுதிகள் சாருவின் பழைய நாவல்களையே நினைவு 'படுத்துகின்றன‌' - வழக்கமான ingredients. இது ஒருவகை 'சாரு ஸிண்ட்ரோம்' என்பேன். சாரு நாவல்களின் என்னுடைய‌ தரவரிசைப்பட்டியல் இது: 1. ராஸலீலா 2. ஸீரோ டிகிரி 3. காமரூபக்கதைகள் 4. தேகம் 5. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்.

இன்னமும் சாருவின் புனைவுகளுள் masterpiece என்றால் அது 'ராஸலீலா' தான். நான் ஏற்கனவே சொன்னது போல் தமிழின் மிகச்சிறந்த 10 நாவல்கள் பட்டியலில் அது நிச்சயம் இடம்பெறும். குறிப்பாய் 'ராஸலீலா'வில் நிறைய‌ இடங்களில் வெளிப்பட்ட வாழ்வின் நுட்பமான தரிசனம் பின் பெரிய அளவில் சாருவின் புனைவெழுத்தில் வெளிப்படவே இல்லை. 'தேகம்' நாவலில் அது போன்ற மிகச்சில தீற்றல்கள் மட்டும் புலனாகின்றன.

'தேகம்' - ஒரு mediocre நாவல்.

Comments

எனக்கு காமத்தைவிட வலிதான் உக்கிரமாய் இருப்பதாய் தோன்றியது. இந்த பகிர்வைப்படியுங்கள் பேசுவோம்.

http://silarojakkal.wordpress.com/wp-admin/post.php?post=282&action=edit
//உபனிஷத்துகளும், ஜென்னும், பைபிளும் ஈர்க்கவில்லை - கவிதைகள் மட்டும் ஓக்கே. மற்றபடி, நாவலில் வரும் பிற‌ பகுதிகள் சாருவின் பழைய நாவல்களையே நினைவு 'படுத்துகின்றன‌' - வழக்கமான ingredients. இது ஒருவகை 'சாரு ஸிண்ட்ரோம்' என்பேன். //

100% Agreed!
ŃąVêέŃ said…
// நினைவு 'படுத்துகின்றன‌' // ரசித்தேன்.

ராசலீலா பற்றிய வார்த்தைகள் முற்றிலும் உண்மை.
//இன்னும் தேகம் வாசிக்கவில்லை. வாசித்தப் பின் தான் எனது கருத்து வரும் // அது வரை நீங்கள் சொல்வதை வாய்ப் பார்க்கிறேன்.
Mohan said…
//சாரு நிவேதிதா இதுவரை எழுதிய நாவல்களிலேயே 'தேகம்' தான் அளவில் சிறியது//

சாரு எழுதியதிலேயே சின்ன நாவல் 'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்' என்று நினைக்கிறேன்.
Boston Bala said…
>> குறிப்பாய் 'ராஸலீலா'வில் நிறைய‌ இடங்களில் வெளிப்பட்ட வாழ்வின் நுட்பமான தரிசனம்

அப்படியா?!?

எனக்கு உங்க ராசலீலா விமர்சனம் கிடைக்குமா? அட்லீஸ்ட், நுட்பமாக நீங்க நினைக்கிற இடத்த/பக்கத்த மட்டுமாவது சொல்லுங்களேன்
pichaikaaran said…
"அதாவது வதையின் வாதை பற்றியது எனும் போது ஒரு தேர்ந்த வாசகன் எதிர்பார்க்கும் உக்கிரம் "

ஒரு நல்ல வாசகன், ஒன்றை எதிர்பார்த்து படிக்க ஆரம்பிக்க மாட்டான்...

நீங்கள் எதையோ ஒன்றை மனதில் வைத்து , அதை எதிர்பார்த்து படித்து இருக்கிறீர்கள்... அது இல்லாததால் ஏமாற்றம் அடைந்து இருக்கிறீர்கள்..

ஒரு நல்ல அனுபவத்தை இழந்து விட்டீர்கள் என்பது என் கருத்து....

இன்னொரு முறை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்படித்து பாருங்கள்
? said…
http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

அனைவரும் வருக !
Anonymous said…
சாருவின் திடலில்....!!!!!!!!!!!! அதெல்லாம் சரி.....சாருவைப் பத்தி வினவுல ஆதாரத்தோட கிழி கிழின்னு கிழிக்கிறாங்களே , அதுக்கு உங்களோட எதிர்வினை என்ன?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி