பரத்தை கூற்று : விழா நன்றியுரை
நன்றியுரை : சி.சரவணகார்த்திகேயன்
வணக்கம்.
உங்கள் முன் உரையாற்ற இவ்விடம் உட்கார்ந்து கொண்டிருக்கும் இக்கணம் என் வாழ்க்கையின் மகத்தான தருணங்களில் ஒன்று. முதல் புணர்ச்சியின் உச்சம் போல், முதல் குழந்தையின் ஸ்பரிசம் போல், முதல் மரணத்தின் வீச்சம் போல் இந்நிகழ்வு என்னைப் பொறுத்தவரை என்றும் மறக்கவே இயலாத பிரத்யேக வினாடிகளின் தொகுப்பாய் வேகமாய்த் துடித்தடிங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த மாய யதார்த்த மயக்கத்தினூடே இந்நன்றியுரையினைத் தொடங்குகிறேன்.
பெயர் நன்றியுரை என்றிருப்பினும் அது சும்மா பெயருக்கு. உண்மையில் இவ்வுரையின் வரையெல்லையை கொஞ்சம் அகண்டதாக அமைத்துக் கொண்டிருக்கிறேன். அதன் காரணமாய், வழக்கமான நன்றியுரைகளின் அளவினைக் காட்டிலும் சற்றே நீளவிருக்கும் இதனைப் பொறுத்தருள்க.
முதலில் பரத்தை கூற்று என்ற இக்கவிதைத்தொகுப்பைப் பற்றிய பொதுவான சில சங்கதிகளை அவற்றின் விஷய சுவாரசியம் கருதிப் பகிர விரும்புகிறேன். அப்புறம், இந்நூலைக் கட்ட உதவிய ஆஞ்சனேயர் முதல் அணிற்பிள்ளை வரை அனைவரையும் இங்கே அடையாளம் காட்டி செய்ந்நன்றியறிய விளைகிறேன்.
ஐந்தாண்டுகள் பின்னோக்கிப்பாயும் காலயந்திரத்தில் இப்போது ஏறிக்கொள்வோம்.
அப்போது பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். கவிஞர் மகுடேசுவரனின் காமக்கடும்புனல் உள்ளே ஒரு சொப்பனமாய் சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. என் நண்பர்களுக்கு நேர்ந்த சில விஷயங்களைப் பார்த்ததும் கேட்டதும் தான் ஆரம்பப்பொறி. அந்த பாதிப்பில் ஐந்நூறு சிறுகவிதைகள் கொண்ட தொகுப்பினை வேசியின் கவிதைகள் என்ற பெயரில் எழுதினேன்.
அதன் குறுக்கப்பட்ட போன்ஸாய் வடிவம் தான் இன்றைய பரத்தை கூற்று.
மனநாழிகையில் இந்த விஷயம் கருவான அந்த கூதிர் பருவ இரவு தொடங்கி, அகநாழிகையில் புத்தகமாய் உருவாகும் இந்த மாரிக்கால மாலை வரையிலான காலவெளியில் வீடும், நாடும் நிறைய மாறிப் போய்விட்டன. சமூகம் மட்டும் அப்படியே இருக்கிறது. அதனாலேயே ஐந்தாண்டுகள் கழித்து வெளியானாலும் சிற்சில சில்லறைத்திருத்தங்களுடன் அப்படியே செல்லுபடியாகிறது இத்தொகுப்பு.
பரத்தை கூற்று வேசியின் குரலாய் அமைந்த 150 கவிதைகளின் சிறுதொகை நூல். இவை வெறும் காமத்தைப் பேசும் கவிதைகள் அல்ல; காமத்தின் அரசியலைப் பேசுபவை. பரத்தையின் முகமூடியணிந்து கொண்டு சமூகத்தை வேடிக்கை பார்க்கும் மனநிலையே இவற்றில் வெளிப்படும் ஆதாரத்தொனி. மற்றபடி, இது வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதப்பட்டதல்ல என்பதைப் பதிவு செய்கிறேன்.
சரி, இந்தக் கவிதைத்தொகுப்பினை ஏன் சாரு நிவேதிதா வெளியிட வேண்டும்?
காமத்தின் அரசியலை, அதன் அழகியலை தம் படைப்புகளில் ஆழச் சித்திரிக்கும் ஒரு படைப்பாளியே இதை வெளியிட வேண்டும் என விரும்பினேன். முன்பு ஜி.நாகராஜன் இருந்தார், பின்பு தஞ்சை பிரகாஷ் வந்தார், இப்போது தமிழில் அத்தகைய எழுத்தாளர் ஒருவர் தான் – சாரு நிவேதிதா. அவர் தான் இந்தப் புத்தகத்தினை வெளியிட வேண்டும் என்பது என் பிரத்யேக இச்சை.
அதனாலேயே தாமதமானாலும் பரவாயில்லை எனக் காத்திருந்து அவரைக் கொண்டே வெளியிட்டிருக்கிறோம். தவிர, அவரது பல இலக்கிய ஜோலிகளுக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் அவரது நேரத்தைத் திருடி வருவதையே விரும்பினோம். கடந்த மாதம் திட்டமிட்ட போது சாரு தன் ஐந்தாவது நாவலை எழுத கேரளத்தின் காலடிக்குச் சென்றதால், ஒத்திப் போட நேர்ந்தது. இம்மாதத் தொடக்கத்தில் கூட சாரு எந்திரன் விமர்சனம் எழுதிக் கொண்டிருப்பார் என்றெண்ணியே சற்று தாமதப்படுத்தி இப்போது நடத்துகிறோம்.
புத்தகத்திற்கு யோனி என தலைப்பு வைக்க யோசித்தது, புத்தக அட்டையை வடிவமைக்க எம்.எஃப்.ஹுசைனின் இந்துப் பெண் கடவுளரின் நிர்வாண ஓவியங்களைப் பயன்படுத்த நினைத்தது என சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. மேலதிக விஷயங்களை புத்தக முன்னுரை வழி விரிவாக விவாதித்திருக்கிறேன் – படித்துக் கொள்ளுங்கள். நான் உண்மையில் எனக்கு இன்று இங்கு விதிக்கப்பட்ட கடமையான நன்றியுரைக்குள் நுழைகிறேன்.
ஆண்களால் நிரம்பியிருக்கிறது இம்மேடை. பரத்தையைச் சுற்றி ஆண்கள் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்பதை நாசூக்காகப் புரிந்து கொண்டு நன்றி நவில்தலை விழா நாயகரிலிருந்தே ஆரம்பிக்கிறேன். வெளியிடப்பட்ட புத்தகம் என்னுடையதாய் இருந்தாலும் என் சுற்றமும் நட்பும் தவிர்த்துப் பார்த்தால், இங்கு குழுமியிருக்கும் வாசகத்திரளில் மிகப்பெரும்பான்மை சாருவுக்கானது என்பது தெளிவு. ஆக, சாருவே இன்றைய நிகழ்வின் நிஜ நாயகர்.
நான் ஐந்து காரணங்களுக்காய் சாருவிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவற்றை ஐந்திலிருந்து ஒன்று வரை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
ஐந்தாவது காரணம் – சாரு இந்நிகழ்வில் கலந்து புத்தகத்தை வெளியிட்டிருப்பது. பெயரில் மட்டும் பரத்தை உண்டேயொழிய இக்கவித்தொகுதி என் கன்னி முயற்சி. ஒரு புத்தம் புதியவனின் புத்தகத்தினை இன்றைய நவீனத் தமிழ் எழுத்ததிகார வெளியின் உச்சத்திலிருக்கும் ஒருவர் வெளியிடுகிறார் என்பது என் புத்திக்கு எட்டிய எந்த தர்க்கத்திற்குள்ளும் அடங்கவில்லை. சாரு அதைச் செய்திருக்கிறார். சாருவால் வெளியிடப்பட்டது என்ற காரணத்திற்காகவே இப்புத்தகம் சற்றதிக கவனம் பெறும், பரவலாய் வாசிக்கப்படும். இந்நூலுக்கு அத்தகைய பெரும் வாசக பரப்பினை ஏற்படுத்தித் தரவல்லது சாருவின் இலக்கிய ஆகிருதி.
நான்காவது காரணம் – என் வலைப்பதிவிற்கான வாசகர் பாசறைக்கு பலமான அஸ்திவாரம் அமைத்தவர் சாரு. 2009 ஆண்டின் தொடக்கத்தில் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவின் ஆங்கில நேர்காணல் ஒன்றினை நான் மொழிபெயர்க்க, அதன் சுட்டிகளைத் தனது சாருஆன்லைன்.காமில் தந்திருந்தார் சாரு. என் வலைப்பதிவின் வாசகர் எண்ணிக்கையை கிட்டதட்ட ஐந்து மடங்கு கூட்டியது அந்நிகழ்வு. ஆரம்பத்தில் ஆங்கிலத்திலும், பின் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் பதிவுகள் எழுதி வந்த நான், முழுக்க முழுக்க தமிழில் எழுதத் தொடங்கியதும் அப்போது கிடைத்த அதீத வாசகர் எண்ணிக்கையால் தான்.
மூன்றாவது காரணம் – என் எழுத்து நடையைக் கட்டமைத்ததில் சாருவுக்கு முக்கியப் பங்குண்டு. என் கவிமொழியில் வைரமுத்து மற்றும் மகுடேசுவரனின் தாக்கம் இருப்பது போல், என் உரைநடையில் சுஜாதா மற்றும் சாருவின் பாதிப்பு இருப்பதை உணர்கிறேன். சுஜாதாவுடையது பிரமிக்கச்செய்யும் விஞ்ஞான நடை என்றால் சாருவுடையது போதையேற்றும் கஞ்சா நடை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அபின் ஹெராயின் அடித்து விட்டுப் பேச ஆரம்பித்தால் என்ன வருமோ அதுவே என் எழுத்து. இந்த வினோத கலவைக்கு பகுதி காரணமாய் இருப்பவர் சாரு.
இரண்டாவது காரணம் – ஒரு வாசகனாய் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் தேர்ந்த எழுத்துக்காரர் அவர். கவிதையல்லாத சமகால நவீனத் தமிழிலக்கியத்தில் நான் மிக மதிக்கும், மிக நேசிக்கும் மூன்று எழுத்தாளர்களுள் சாருவும் ஒருவர். அவரது ராஸலீலாவை சந்தேகமேயின்றி தமிழின் மிகச் சிறந்த 10 நாவல்களில் ஒன்றாகச் சொல்லுவேன். அதே போல் தமிழ் பத்தியெழுத்தில் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் எப்படியோ, கிட்டதட்ட கோணல் பக்கங்கள் அப்படி. ஆனால் முரணாக சாரு தன்னை ஒரு போதும் எழுத்தாளனாகவே ஒப்புக் கொள்வதில்லை. நரகத்திலிருந்து தப்பிக்க முனையும் ஒருவனின் தூரிகைத் தீற்றல்களாகவே தன் எழுத்தை முன்வைக்கிறார். உண்மையில் எழுத்தாளர்களின் எழுத்தாளர் அவர்.
முதலாவது காரணம் – சற்றே விசித்திரமானது. அது அவரோடு எனக்கிருக்கும் முரண்பாடுகள். ஆம், அதற்கும் நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். காரணம் அவை நான் கற்றறிந்த தர்க்கங்களின் வழி கட்டியெழுப்பி வைத்திருக்கும் ரசனை மற்றும் கொள்கை முடிவுகளை கடுமையாகக் கேள்விக்குள்ளாக்குகின்றன; தாட்சண்யமற்ற மறுபரிசீலனையைக் கோருகின்றன. தொடர்ந்து அதன் வழி நீளும் விவாதங்கள் புரிதல் நிலையின் புதிய வாசல்களைத் திறப்பதாக அமைகிறது. என் ஆதர்சங்களான கமல்ஹாசன், இளையராஜா, ஜெயமோகன் ஆகியோரை சாரு நிராகரிக்கிறார் என்பதே அவரது வசீகரத்தை மேலும் கூட்டுவதாய் அமைகிறது.
இந்த ஐந்து காரணங்களுக்காகவும் சாருவுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
அடுத்தது பதிப்பாளர் பொன்.வாசுதேவன். சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் கொண்ட இக்கவிதைகளை யாரேனும் பிரசுரிப்பார்கள் என்பதே அபார நகைச்சுவையாய்த் தோன்றி வந்ததொரு காலத்தில் வாசுவைத் தயக்கத்துடன் அணுகிய போது, அவர் சொன்ன முதல் வாக்கியமே "நன்றாகச் செய்யலாமே!" என்பது தான். பிடிவாதமான இலக்கிய நோக்கம், நேர்த்தியான புத்தக ஆக்கம், கம்பீரமான வெளியீட்டு நிகழ்வு என ஒவ்வொன்றிலும் எதிர்பார்த்ததை விட அதிகமாய் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவ்வகையில் அகநாழிகை ஒரு குட்டி உயிர்மை; பொன்.வாசுதேவன் ஒரு குட்டி மனுஷ்யபுத்திரன். பிரியங்கள் உதிர்த்த கனியன்ன எனது நன்றிகளை அவருக்கிங்கே உண்ணத் தருகிறேன்.
கவிஞர் மகுடேசுவரனும், நண்பன் இராஜராஜனும் இல்லையென்றால் இப்புத்தகம் இந்நேரத்தில் இவ்வடிவத்தில் உருவாகியிராது – அவர்களுக்கு நன்றிகள் பல. புத்தகத்தின் ஆதி வடிவத்தைப் படித்து கருத்துக்கள் பகிர்ந்த பி.குமாரமூர்த்தி, நவீன் குமார், க.நாகராஜன், ச.முத்துவேல், எஸ்.கே.செந்தில்நாதன், ராம் ராகேஷ், கார்த்திக் சுப்ரமணியன் ஆகியோருக்கும் என் அன்பான நன்றிகள் உரித்தாகுக.
மதுரைப் புத்தகக்கண்காட்சியில் இப்புத்தகத்தினை தம் அங்காடியில் விற்பனைக்கு வைத்த உயிர்மை பதிப்பக அதிபர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் நன்றிகள்.
புத்தகத்திற்கு முதலில் எதிர்வினையாற்றிய மீனா கந்தசாமி அவர்களுக்கும், மின்னஞ்சல், மின்னரட்டை, வலைப்பதிவு, ட்விட்டர், பஸ் எனப் பல்லூடக வழி கருத்துக்களைப் பகிர்ந்த சகபயணிகளான செல்வேந்திரன், மாதவராஜ், விஜய் மகேந்திரன், விநாயகமுருகன், நர்சிம், யாத்ரா, நேசமித்திரன், லஷ்மி சாகம்பரி, கார்த்திகைப்பாண்டியன், புரூனோ, கிருஷ்ணபிரபு ஆகியோருக்கு என் நன்றிகள்.
புத்தக வெளியீட்டு நிகழ்வின் விளம்பரத்தினை தத்தம் பதிவுகளில் போஸ்டாக அல்லது போஸ்டராக வெளியிட்ட இட்லிவடை, விஜய்மகேந்திரன், யுவகிருஷ்ணா மற்றும் வல்லமை.காம் தளத்தினர் ஆகியோருக்கு என் நன்றிகள். நிகழ்ச்சி நடத்த அரங்கு அமைத்துக் கொடுத்த டிஸ்கவரி புக் பேலஸ் நிர்வாகத்தினருக்கும், காணொலி பதிய ஏற்பாடு செய்த மணீஜி தண்டோரா அவர்களுக்கும் நன்றிகள்.
அடுத்து, சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் இன்றைய சரஸ்வதி பூஜைக் கொண்டாட்டங்களை விடுத்து, இந்த எளியவனின் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கு கொண்டிருக்கும் இந்த ஐம்பத்து சொச்சம் பேருக்கும் நன்றி. குறிப்பாய் தம் பதிவுகளில் இவ்வுரை பற்றி திருக்குறளின் பதினொன்றாவது அதிகாரமே உயிர் பெற்றெழுந்து நேரில் வந்தது போல் இருந்தது என எழுதப் போகும் சக வலைப்பதிவர்களுக்கும், அவற்றினை இசைந்தோ, வசைந்தோ பின்னூட்டமிடப் போகும் வாசக நண்பர்களுக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.
சொன்னவை இத்தொகுப்பு தொடர்புடையவை; இனி சொல்பவை பொதுவானவை.
என் ஒவ்வொரு எழுத்திலும் தன் ஆவியைத் தேக்கி வைத்திருக்கும் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கும், அச்சு ஊடகத்தில் என் இலக்கியப் பயணத்தைத் தொடங்கி வைத்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும், முதல் புத்தகம் எழுத வாய்ப்பளித்த கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி மற்றும் பா.ராகவன் அவர்களுக்கும் நன்றிகளால் ஆன ஓர் ஆயுள் சந்தா.
இங்கிருக்கும் இரண்டு பெண்கள் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள். ஒரு தெய்வத்தைப் போல் நடந்து கொள்ளும் அன்னையும், ஒரு தேவதையைப் போல் நடந்து கொள்ளும் மனைவியும் என்றும் என் பிரியத்துக்குரியவர்கள். தீராத கடன் போல என் நன்றியினை அவர்களுக்கு நித்தம் செலுத்துவதே நியாயம்.
பூமி வந்த 6 மாதமாய் கடவுளின் பாஷை பேசிக்கொண்டிருக்கும் என் மகனுக்கும் நன்றிகள் – அது அவன் புன்னகைக்கு, அவன் அழுகைக்கு, அவனுக்கே அவனுக்கு.
கடைசியாய் என் தந்தை. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு. இப்புத்தக வேலையை ஆரம்பிக்கும் போது அவர் இருந்தார்; முழுமையடைந்து வெளியாகும் இப்போது இல்லை. அவர் என்னை அவையத்து முந்திஇருப்பச் செய்தார்; நானும் என்நோற்றான் கொல் எனும் சொல்லை அவரைக் கேட்கச் செய்து கொண்டே தான் இருந்தேன். என்னை இவ்வாறான ஆளுமையாக வார்த்தெடுத்ததே அவரது நல்வளர்ப்பு தான். இன்று அவர் இங்கு இருந்திருந்தால் மிகுந்த சந்தோஷப்பட்டிருப்பார். இப்போதும் எங்கோ இருந்து நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டு தான் இருப்பார் என்றே என் பகுத்தறிவையும் மீறி நம்ப விரும்புகிறேன். அவருக்கு இவ்வுரையினை நன்றியுடன் சமர்ப்பிக்கிறேன்.
நன்றி.
Comments
விமர்சகர்களின் சாட்டைகளிலிருந்து உங்கள் கவிதைகள் பிழைக்கவும், அதேசமயம், ரஷ்ய மன்னன் சர் நிகோலஸின் சுற்றத்தைப்போல் உங்களைச் சுற்றி படராமல் இருக்கவும் இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
கார்த்திக் சுப்பிரமணியன்
You can't get an e-cpoy as of now. But you can but it online. For more details : https://www.nhm.in/shop/100-00-0000-081-7.html