பரத்தை கூற்று : மாதவராஜ்

தோழர் மாதவராஜ் அவர்களின் பரத்தை கூற்று பற்றிய விமர்சனம் இது:
http://mathavaraj.blogspot.com/2010/10/blog-post_16.html

*******

Oct 16, 2010 எழுதியவர் மாதவராஜ் எழுதப்பட்டது 5:23 PM

‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’

“எத்தனை பேர் நட்ட குழி
எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் பற்றியிழுத்த உடல்
எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்”

என்னும் கவிதையோடு முடிகிறது நம் பதிவர் சி.சரவணக்கார்த்திகேயனின் ‘பரத்தை கூற்று’. எவற்றையெல்லாம் இங்கே பாடலுடன் கவிஞர் வரிசைப்படுத்திப் பார்க்கத் துணிந்திருக்கிறார் என்பதில் இக்கவிதைத் தொகுப்பின் குரலையும், சுருதியையும் புரிந்திட முடியும். அதுவொன்றும் சட்டென்று யாரும் பிரக்ஞையோடு கடந்திடக்கூடிய புள்ளியல்ல. மயங்கி, முயங்கி, மருகி, உருகி ரசித்துக் கிடந்த ஒரு பாடலை சற்றே நினைவுபடுத்திவிட்டு, இந்த வரிகளை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்களேன். நாம் முணுமுணுத்த வரிகளை எத்தனை பேர் முணுமுணுத்திருப்பர்கள். நாம் கரைந்த இசையில் எத்தனை பேர் மூழ்கி இருப்பார்கள். இப்போது புரிகிறதா, இக்கவிஞர் எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறார், எங்கே நம்மை கடத்திச் செல்ல இருக்கிறார் என்பது? ’தேவடியா’ என நம் சமூகக் கட்டமைப்பு பொத்தி வைத்திருக்கிற போர்வையை வெட்ட வெளியில் அவிழ்த்து, உதறி எறிகிறது ‘பரத்தைக் கூற்று’.

எப்போதோ பார்த்த ஒரு ஆங்கிலப்படம் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. படம் பேர், கதை நினைவில் இல்லை. அவள் ஒரு ‘கால் கேர்ளாக’ சொல்லப்படுவாள். அவன் அவளோடு நெருக்கமாக இருப்பான். பிறகு அவள் இன்னொருவனுடன் பழகி உறவு கொள்வாள். சகித்துக்கொள்ள முடியாத முதாலாமவன், அவளை சந்தித்து, உலுக்கி, பணக்கட்டுக்களை எடுத்து அவள் தொடைகளை விரித்து அங்கே சொருகிவிட்டுப் போவான். ஆண்களின் விசில் தியேட்டரில் பறக்கும். இதுதான் நம் புத்தியாக இருக்கிறது. பொருளியல் விஷயமாக பார்க்கும் இவர்களை விசாரிக்கின்றன சரவணக்கார்த்திகேயனின் இவ்வரிகள்:

“அகவிலைப்படி
ஓய்வூதியம்
சம்பளக் கமிஷன்
எதுவுமில்லை
பாலியல் நோயும்
சில வலிகளும் தவிர ”

“எந்நிறுவனமாவது
எம் யோனிக்குத்
தருமா காப்பீடு?”

பரத்தை, வேசி, தாசி, தேவடியாள் என காலம் தோறும் வெவ்வேறு அடைமொழிகளால் அறியப்பட்டு, செக்ஸ் தொழிலாளர்களாய் இன்று முத்திரை குத்தப்பட்டு நிற்கும் பெண்கள் இங்கே வெடிப்புறப் பேசுகிறார்கள்.

“விரல் தொடுகிறாய்
இதழ் தொடுகிறாய்
இடை தொடுகிறாய்
முலை தொடுகிறாய்
பிருஷ்டம் தொடுகிறாய்
யோனி தொடுகிறாய்
எவனும் மனசு தொட்டதில்லை”

“களைத்துறங்குமென்னை
எழுப்பிப் புணர விழையும்
நீயென்ன ஆம்பிளை?”

“காந்தியின்
நான்காம் குரங்கு
குறி பொத்தி
அமர்ந்திருக்கும் ”

“புழுவோ மண்ணோ
கழுகோ நெருப்போ
தின்னப் புகும் முன்
நீயும் ருசித்துப் போ”

“எந்த ஆண்மகனும் இதுவரை
நேருக்கு நேர் சந்தித்ததில்லை
என் கண்களின் அலட்சியத்தை”

புணர்ந்து அடங்கிய குறிகளாய் ஆண்களின் உலகம் பேச்சு மூச்சற்றுப் போகும் இடங்கள் இப்படி இந்தக் கவிதைத் தொகுப்பு முழுவதும் விரிந்துகொண்டே இருக்கின்றன. பரத்தையரின் கூற்றுக்கள் அடங்காமல் அலையடித்துக் கிடக்கின்றன. பெண்ணுடலின் மர்மங்களை அதிசயமாகவும், அருவருப்பாகவும் பார்க்கிற ஆண்களை “போங்கடா மயிருகளா” என்கிறது இக்கவிதைத் தொகுப்பு. யுகங்களின் மீதான கேள்விகளை மிக எளிமையாக எழுப்பினாலும், அதிர்வுகள் சாதாரணமானவையல்ல.

பரத்தையென்றாலே, உடலை வைத்தே யோசிக்கவும், பேசவும் வேண்டும் என்கிற மரபை இக்கவிதைத் தொகுப்பும் மீறாமலேயே இருக்கிறது. எல்லா வரிகளிலும் பெண்ணுடல் வாசமும், வீச்சும் இருக்கிறது. இந்த இடத்தில்தான் ‘பரத்தையின் கூற்றை’ ஒரு ஆண் எழுதியிருக்கிறார் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

பத்தினி, பரத்தை பேதமின்றி சித்தர்களின் பாடல்களில் பெண்ணுடல் குறித்த எச்சரிக்கையும், பெண்ணுறவு குறித்த எள்ளல்களும் உண்டு. குலமகள், விலைமகள் எனும் பேதம் கண்டு பொருள் சொல்வோர் இருப்பினும் பரத்தையருக்கென்று தனி இடமும், பார்வையும் சங்கப்பாடல்களில் இருக்கின்றன. பணத்திற்காகவும் பொருளுக்காகவும் என்றில்லாமல் தந்தைவழிச் சமூக ஒழுக்கத்தை மீறிய தாய்வழிச் சமூக எச்சங்களாய் அவைகளை பார்த்தவர்களும் இருக்கின்றனர். இப்பெண்களின் உலகத்திற்குள் சென்று வந்த அல்லது எட்டிப் பார்த்த ஆண்களின் உலகமே அவர்களைப் பற்றி காலம் காலமாய் பேசிக் கொண்டிருக்கிறது. சிலரே அவர்களை கருணையோடும், அவர்கள் பக்கமிருக்கிற நியாயங்களோடும் பார்த்தார்கள். டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பும், புதுமைப்பித்தனின் பொன்னகரமும், ஜீ.நாகராஜனின் குறத்தி முடுக்கும் அப்படியானவையே. சரவணக்கார்த்திகேயன் அவர்களைத் தாண்டிச் செல்ல/சொல்ல முனைந்திருக்கிற இன்னொரு ஆண்.

“சளி கபம் கோழை
பித்தம் எச்சில் ஊளை
ரத்தம் எலும்பு நரம்பு
தூமை மலம் மூத்திரம்
இவற்றாலதென் தேகம்
இதில் காதலெங்கே
காமமெங்கே சொல்”

இங்கே ஒரு மனுஷி தெரிகிறாளா? பரத்தை தெரிகிறாளா?. அவரது கவிதைத் தொகுப்பின் மையமாகவும், கூர்முனையாகவும் கோபம் இருக்கிறது. அது முக்கியமானது.

பெண்களுக்கு எதிராக பெண்களை நிறுத்தும் தொனியில் இக்கவிதைத் தொகுப்பு வேறு சில பகுதிகளையும் தொட முயல்கிறது. இச்சமூகம், இவ்வொழுக்கம், அதன் வழியில் குடும்பம், அதன் நியதிகளுக்குள் இயங்கும் பெண்களோடு உரையாடுவதற்குப் பதிலாக கேலி போல், சில கேள்விகளை எழுப்புகிறது.

“கதவு ஜன்னலடைத்து
ஒளிர் விளக்கணைத்து
விழிசொக்கிப் புணரும்
பத்தினித்தாலி கட்டிய
வீட்டுப் பிராணியல்ல -
நான் காட்டு ராணி”

“எல்லோருடனான புணர்ச்சியிலும்
ஒருவனையே புணர்கிறேன் நான்
ஒருவனுடனான புணர்ச்சியில்
எல்லோரையும் புணர்கிறாய் நீ”

பெண்களை புனிதமாக்கிக் கொண்டாடும் சடங்குகளும், பெண்களை பண்டமாக்கும் சந்தைகளும் காலந்தோறும் வெவ்வெறு வடிவங்களில் உருமாறி வந்துகொண்டே இருக்கின்றன. அவை வடிக்கும் பிம்பங்களில் சிதைந்து போகின்றன ஆண் பெண் உறவுகள். மிக விரிவாக பேச வேண்டிய இடத்தில் ஒன்றிரண்டு வரிகளால் தாவிச்செல்ல முனைகிறது இக்கவிதைத் தொகுப்பு. பத்தினியானாலும், பரத்தையானாலும் பெண்கள், ஆண்களால் நுகரப்படுவோரே. ஒருவனால் புணரப்பட்டாலும், பலரால் புணரப்பட்டாலும் வலி பெண்ணுக்கு மட்டுமே. இப்படி பரத்தையின் கூற்றுக்களில் தன்வயப்பட்ட சில குழப்பங்கள் இருப்பினும் உண்மையும் இருக்கிறது. கவிதைத் தொகுப்பின் ஆரம்பத்தில் இதனை நுட்பமாகவும், தெளிவாகவும் சொல்ல முடிந்திருக்கிறது சரவணக்கார்த்திகேயனால்.

“சுதந்திரம் என்பது
புணர்தல் அல்ல
புணர மறுத்தல்”

இந்த சுதந்திரம் எந்தப் பெண்ணுக்கு இருக்கிறது?

இப்புத்தகம் குறித்து சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. படித்து அதிர்வுகளுக்குள்ளாகிற வரிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவசியம் படித்து நாம் உரையாட வேண்டிய தொகுப்பு ‘பரத்தை கூற்று’.

(முன்பே எழுதியிருக்க வேண்டிய நூல் அறிமுகம் இது. இடையில் சில நாட்கள் உடல்நலமின்றி இருந்ததால் முடியாமற் போய்விட்டது. இன்று, மாலை 5 மணிக்கு சென்னை டிஸ்கவரி பேலஸில் இப்புத்தகம் வெளியாகிறது. கவிஞர் சரவணக்கார்த்திகேயனுக்கும், பதிப்பித்த அகநாழிகை பொன்.வாசுதேவனுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி