சகா : சில குறிப்புகள் - 11

"You may say that I'm a dreamer
But I'm not the only one"

- John Lennon in his album 'Imagine'

*******

சகாவுக்கும் இலக்கியத்துக்கும் வெகு தூரம்.

அவனது ஆன்மீகத் தேடல் என்பது சரோஜா தேவி அருள் பாலிக்கும் பழுப்பு பக்கங்களோடு முடிந்து போகும் ஒரு சங்கதி. கொஞ்சம் கையில் காசு சேரும் போது ஹ‌ரால்ட் ராபின்ஸ், சிட்னி ஷெல்டன் அல்லது சகாய விலைக்குக் கிடைக்கும் ஏதாவதொரு பழைய Playboy இதழ் (அதிலும் centerfold தான் மிக முக்கியம்!) என சற்றே தளமுயரும். இவற்றைத் தாண்டி, அவன‌து பிரத்யேக இயலில் பழம் தின்று கொட்டை போட்ட‌ Nancy Fridayவைக் கூட அவன் தொட்டதில்லை (அதாவது அவரது புத்த‌கங்களை). இந்நிலையில் நவீனத் தமிழ் இலக்கியம் பற்றி அவனிடம் பேசினால் அது எத்தகையதொரு அசம்பாவிதமாய் அமையும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஒரே வார்த்தையில் சொல்வதானால் - Disaster.

அதுவும் குறிப்பாய் என் ஆதர்ச‌மான ஜெயமோகன் என்றால் அவனுக்கு சுத்தமாய் ஆகவே ஆகாது. "கிழட்டுப்பயலுக" என ஒரே வார்த்தையில் ஜெமோவின் வாசகர்களை அவனால் நிராகரிக்க முடியும் (இலக்கியமே தெரியாத ஒருவனால் மட்டும் தான் தமிழில் ஜெமோவின் இடத்தைப் பற்றி இத்தனை துணிச்சலாய்ப் பேசவியலும் என்பதால் நானும் இதையெல்லாம் பெரிதுபடுத்தி வாதத்தில் இறங்குவதில்லை). ஆனால் அவனது இந்த நிலைப்பாட்டிற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் ஒளிந்திருக்கிற‌து என்பதைப் பின்பு தான் அறிய நேர்ந்தது.

அந்த அரசியலின் பெயர் சாரு நிவேதிதா.

ஆம். ந‌மது சகா சாரு நிவேதிதாவின் தீவிர ரசிகன். சாருவின் ராஸ‌லீலா படித்து கொஞ்ச நாட்கள் பித்து பிடித்தது போல் "சாரு சாரு" என தனக்குத் தானே கண்களை மூடிப் புலம்பிக் கொண்டிருந்தான். எப்போதும் போல் ஏதோ புதிய பட்சி தான் சிக்கியிருக்கிறது என நானும் அதைப் பெரிதாய் சட்டை செய்யவில்லை (சாரு நிவேதிதா என்பது ஏதோ ஒரு சூப்பர் ஃபிகரின் பெயர் மாதிரி இருக்கிற‌து என்பதை நான் முப்பத்தியிரண்டாயிரத்து நானூற்று பதினாறாவது ஆசாமியாக வழி மொழிந்து இங்கு பதிவு செய்கிறேன்). பின்னர் தான் விஷயமே புரிந்தது. பின், அவன் எழுதிய மிக நீ...ளமான கடிதம் ஒன்றை சாரு தனது இணையதளத்தில் வெளியிட்டு, அக்காலத்தில் அது மிக பரபரப்பாய்ப் பேசப்பட்டது. அதன் சாரம் இது தான்:

அவ‌ன் தான் கண்ணாயிரம் பெருமாளாம்!

பின்குறிப்புகள்:

1. நல்லவேளை, சாருவின் காமரூபக்கதைகளை சகா இன்னும் படிக்கவில்லை.

2. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல், என் கண்களுக்கு சகா தஞ்சை பிரகாஷின் 'மீனின் சிறகுகள்' நாவலில் வரும் ரங்கமணியாகத் தான் தெரிகிறான். அவனிடம் இதைச் சொன்னால் புன்னகை மாறாமல் "கண்ணாடியை மாத்து" என்கிறான்.

3. என் சிபாரிசின் பேரில் தற்போது சகா வாசித்துக் கொண்டிருப்பது வா.மு.கோமுவின் 'சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்'. தான் தான் ப‌ழனிச்சாமி என்று அவன் சொல்லும் தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறேன்.

Comments

Athisha said…
நண்பா பின்னவீனத்துவத்தின் மூலக்கூறுகளை கரைக்குடித்திருக்கிறீர்களே!
@Ganshere said…
oh
இது தான் பின்நவீனத்துவமா

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி