H2O + ஆவி --> ஈரம்

ஷ‌ங்கரிடம் முதல்வன், நாயக், பாய்ஸ், அந்நியன் போன்ற படங்களில் துணை / இணை இயக்குநராகப் பணிபுரிந்த அறிவழகன், தன் குருநாதரின் தயாரிப்பிலேயே எழுதி, இயக்கி. அறிமுகமாகியிருக்கும் படம் 'ஈரம்'. படத்தின் செய்நேர்த்தியில் தெரிகிறார் ஷங்கர்.


அடிப்படைக் கதையென்று பார்த்தால் நம்மூர் மாதாந்திர க்ரைம் நாவல்களில் காணக்கிடைக்கும் ஒரு சாதாரண த்ரில்லர் தான். கூடவே ஆவி, பேய் என்று கொஞ்சம் பயங்காட்டியிருக்கிறார்கள். அடிக்கடி 13B எனப்படும் யாவரும் நலம் படம் ஞாபகம் வருவதை தவிர்ப்பதற்கில்லை.

திரைக்கதையும் ஆங்காங்கே சிறு ஓட்டைகள் கொண்டது தான் என்றாலும் அற்புதமான‌ makingன் மூலம் ஒட்டு மொத்த படத்தையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். மற்றபடி, படம் முழுக்க எதிலிருந்தாவது நீர் சொட்டிக் கொண்டே இருக்கிறது - mood of the movie.

படத்தில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக இருப்பது மனோஜ் பரம்ஹம்ஸாவின் ஒளிப்பதிவு (கெளதம் மேனன் எடுத்துக்கொண்டிருக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஒளிப்பதிவாளர்). ஒரு வகையில் படத்தின் உயிர்நாடியே அவரின் ஒளிப்பதிவு தான்.

படத்தொகுப்பு (கிஷோர்) கச்சிதமாய் அமைந்திருக்கிறது. பின்னணி இசை (தமன் - பாய்ஸ் படத்தில் குண்டாய் வந்து, பாத்ரூமில் மல்கோவா ஆன்ட்டி எழுதுபவர் / படிப்பவர்) பரவாயில்லை. திராணியுள்ளவர்கள் பாடல்களையும் சகிக்கலாம். The overall co-ordination is good.

படத்தின் முக்கியப்பாத்திரங்களான ஆதி மற்றும் நந்தாவின் நடிப்பு பிரமாதம். சிந்து மேனன் பற்றிச் சொல்லாவிட்டால் நானும் தண்ணீருக்கு இரையாக வேண்டியிருக்கும். சரண்யா மோகனுக்கு அதிகம் வேலையில்லை - வழக்கம் போல் அழகாக‌ வந்து போகிறார்.

ஷ‌ங்கர் தயாரிப்பு (கல்லூரி, அறை எண் 305ல் கடவுள் தவிர்த்து) என்றால் நம்பிப் பார்க்கலாம் என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியிருக்கிறது. தமிழின் முக்கியமான இயக்குநர்களின் வரிசையில் அமர கர்ச்சீஃப் போட்டிருக்கிறார் அறிவழகன். அடுத்து பார்க்கலாம்.

பிற்சேர்க்கை: (செப்டெம்பர் 15, 2009 காலை 08:00 மணிக்கு எழுதப்படுகிறது)

'ஈரம்' படத்துக்கு அரவிந்த் என்பவர் தன்னுடைய 'சிறுமழை' என்கிற‌ தளத்தில் ஓர் அற்புதமான விமர்சனம் எழுதியிருக்கிறார். படத்தைக் காட்டிலும் அவருடைய பதிவு சுவாரசியமாய் இருப்பதாய்த் தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி