கபடி கபடி கபடி

மாண்புமிகு கே.என்.நேருவின் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ்வரும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் "சுந்தரா டிராவல்ஸ்" ரக பேருந்தில் ஈரோட்டிலிருந்து பெங்களூர் வரை மேற்கொண்ட குளிர் மிகுந்த ஓர் இரவுப் பயணத்தினூடாக திருட்டு வி.சி.டி.யில் பார்த்த போதிலும், அடிப்படையில் ஒரு தேர்ந்த திரைக்கதையை ஆதாரமாகக் கொண்டது என்கிற வகையில் எனக்கு மிகப்பிடித்திருந்தது வெண்ணிலா கபடி குழு.


ஒரு தலித்தை நிஜமான நாயகனாக முன்னிறுத்தியிருக்கும் வகையில் இப்படம் எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. கபடி என்கிற விளையாட்டை காவியப்படுத்த முயற்சிக்காமல் அதன் பின்னணியில் சொல்லியிருக்கும் கிராமத்து இளைஞர்களின் வாழ்க்கை அதை விட முக்கியமானது. அப்புறம் படத்தில் காட்டப்பட்டிருக்கும் திருவிழாக்காதலும் அதன் முடிவும் அத்தனை நிஜமாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் நல்வரவு இது.

மாரிமுத்து என்கிற இளைஞனின் வாழ்க்கையின் சில இறுதி மாதங்களே இந்த அற்புதமான படத்தின் திரைக்கதையாக மாறியிருக்கிறது. கிராமத்து திருவிழாக்களில் நடக்கும் உரி அடித்தல், ஸ்லோ சைக்கிள் ரேஸ் போன்ற போட்டிகள் நன்றாக பதிவு செய்யப்பட்டிருக்கிறன. சென்னை-600028 படம் கிரிக்கெட்டைப் பற்றி சொல்லியிருக்கும் அதே விஷயத்தை வெண்ணிலா கபடி குழு கபடியைப் பற்றி சொல்லியிருக்கிறது.

உச்சகாட்சியில் கதாநாயகன் செத்துப் போவது போல் எடுக்கப்பட்டிருப்பது தேவையின்றி வலிய புகுத்தப்பட்டிருப்பதாக தோன்றுவதாக என் நண்பர்கள் பலர் சொல்லியிருந்த போதிலும் எனக்கு அது இப்படத்திற்கு மிகப் பொருத்தமான முடிவாகவே பட்டது. அதுவே படத்தில் சொல்லப்பட்ட காதலின் யதார்த்த முடிவுக்கு நீதி செய்யக் கூடியதாக இருக்கிறது. மாரிமுத்து பிழைத்து, காதலியை அடைந்திருந்தால் இது சாதாரண படமே.

திரைக்கதைக்கு அடுத்து என்னை மிகக்கவர்ந்தது இதில் நடித்தவர்களின் இயல்பான நடிப்பு. முக்கியமாய் மாரிமுத்துவாய் வரும் விஷ்ணுவின் நடிப்பு. அத்தனை நிஜமாய் ஆனால் ரசிக்கத்த‌குந்ததாய் இருக்கிறது. கபடி பயிற்சியாளராய் வரும் கிஷோர் முதல் சிறு சிறு பாத்திரங்களேற்றிருப்பவர்கள் வரை பின்னியெடுக்கிறார்கள் ஆச்சரியமாய் சரண்யா மோகன் உட்பட. அதுவே பார்க்க‌ நிறைவாய் இருக்கிறது.

ல‌க்ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவில் கபடி காட்சிகள் தீவிரமாக அமைந்திருக்கிறன‌. பாஸ்கர் சக்தியின் வசனங்கள் கச்சிதமாக பார்த்து சொருப்பட்டிருக்கின்றன. "லேசா பறக்குது மனசு" என்கிற பாடலில் மட்டும் செல்வகணேஷ் இசையமைப்பாளர் யார் என பெயர் தேட வைக்கிறார். இது போன்ற சிறிய முதலீட்டுத் திரைப்படங்கள் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான வகையில் உருவாவது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநர்களில் மிக முக்கியமானவ‌ராகத் தெரிகிறார் சுசீந்திரன்.

Comments

Kumar said…
மிகவும் அருமையான விமர்சனம், தாங்கள் தேவைன்றி தலித்து போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதை போன்று எனக்கு தோன்றுகிறது. மிகவும் நேர்த்தியான ஒரு கிராமத்து காதல் கதை. இயக்குனருக்கு எனது பாராட்டுகள். அவரின் கதாபாத்திர தேர்வு மிகவும் அருமை.

ஒரு கிராமத்து நடக்கும் கதையை நம் கண் முன் கொண்டு வந்த இயக்குனரின் அடுத்த படைப்பிற்கு எனது வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி