அன்பே சிவம் - சில கருத்துக்கள்

அன்பே சிவம் பற்றி குறை கூறி எழுதும் போதே அதை யாரும் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள் என்று தெரிந்தே எழுதினேன் (கமலையே துளியும் பிடிக்காத என் நண்பர்கள் சிலருக்குக்கூட‌ அன்பே சிவம் படம் மட்டும் பிடிக்கும்). நான் எதிர்பார்த்தது போலவே, நான் ப‌திவிட்ட சில வினாடிகளில் (ஆம்! சில வினாடிகளில்), மணியரசன் gtalkல் "i won't accept" என்று சொல்லி விட்டார். பின் என் கல்லூரி சினேகிதனான கீர்த்தி பரத் இன்று இட்ட பின்னூட்டம். மேலும் மேலும் தவறான புரிதல்களை தவிர்க்கும் பொருட்டு இதற்கு பதிலளித்து விடுவது எனத் தீர்மானித்து விட்டேன்.

அன்பே சிவம் படம் பற்றி பேசும் முன் திரைப்படம் என்பது பற்றிய என் எதிர்பார்ப்புகளை, வரையரைகளைக் கோடி காட்டி விடுவது உத்தமம் என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை திரைப்படம் என்பது ஒலி ஒளி இலக்கியம். நல்ல இலக்கியம் எப்படி காலத்தின் கண்னாடியாக நிற்கிறதோ அது போல் நல்ல திரைப்படமும் இருக்கும். ஒரு திரைப்படத்திடமிருந்து நான் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கிறேன். முதலாவது சுவாரசியம்; இரண்டாவது நிஜத்தன்மை; மூன்றாவது உருவாக்கம். கவனியுங்கள் - திரைப்படத்தின் கருத்து என்பது எனக்கு முக்கியமாகவே படவில்லை.

உதாரணத்துக்கு, எனக்கு ஹிட்லரை விட காந்தியையே மிகப்பிடிக்கும். ஆனால் ஹிட்லரின் வன்முறையை ஆதரித்து மிகச்சுவாரசியமாக ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால் அதை நான் ரசித்து பார்ப்பேன். அதே நேரம் காந்தியின் கொள்கைகளை மையமிட்டு எடுக்கப்படும் ஒரு அறுவைத் திரைப்படத்தை நான் வெறுக்கவே செய்வேன். காரணம் நான் திரைப்படத்தில் அது சொல்லும் நீதியை, பாடத்தை, கருத்தைத் தேடுவதில்லை. என் பார்வையில் அது படத்திலிருந்து கிடைக்கும் உபரி தகவல் மட்டுமே. இலக்கியமும் அப்படியே. அவை காலத்தின்
நிஜமான‌, கலைத்துவமான‌ பதிவுகள்.

திரைப்படத்தில் நான் எதிர்பார்க்கும் சுவாரசியத்தைத் தரும் விஷயம் அதன் திரைக்கதை. நல்ல திரைக்கதை உள்ள படங்கள் அனைத்தையும் நான் மிக ரசிப்பேன். அல்லது நான் ரசிக்கும் படங்கள் அனைத்திலும் நல்ல திரைக்கதை இருக்கும். ஹே ராம் படத்தை நான் மிக விரும்புவதற்குக் காரணம் அதன் வித்தியாசமான கதைக்களம் இல்லை; அதன் திறமையான திரைக்கதையே. அன்பே சிவம் படம் எனக்கு அவ்வளவாய்ப் பிடிக்காமல் போனதற்குக் காரணமும் அதுவே. அதாவது நான் எதிர்பார்க்கும் சுவாரசியம் அன்பே சிவம் பட‌த்தில் முழுமையாய் கைகூடவில்லை.

அந்த வகையில் தான் தீவிர வாழ்க்கைத் தளங்களைத் தொடும் மகாநதி மற்றும் ரோலர் கோஸ்டர் ஆக்ஷன் துரத்தல் படமான தசாவதாரம் இரண்டுமே எனக்குப் பிடிக்கிற‌து. இரண்டிலுமே பொதுவான அம்சம் அவற்றின் திரைக்கதை சுவாரசியம். அவ்வகையில் எனக்கு பருத்தி வீரனும் பிடிக்கும்; அயனும் பிடிக்கும். காதலும் பிடிக்கும்; கில்லியும் பிடிக்கும். இந்த சுவாரசியம் தப்பியதால் சிதைந்த படங்களின் பெரிய பட்டியலே இருக்கிறது. உதாரணம் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து, ஷங்கரின் சிவாஜி, பாலாவின் நான் கடவுள், சேரனின் மாயக்கண்னாடி, அப்புறம் கமலின் அன்பே சிவம்.

அன்பே சிவம் படத்தின் திரைக்கதை அவ்வளவு சுவாரசியமானதில்லை என்பதை கமல்ஹாசனே இப்போது ஒப்புக்கொள்வார் என்று தான் நினைக்கிறேன். மற்றபடி கமலின் நடிப்பும், ஒளிப்பதிவு போன்ற விஷயங்களும் மிக அற்புதமாகவே அமைந்திருந்தன. பிதாமகனுக்காக விக்ரம் தேசிய விருது வாங்கிய அதே வருடம், எனது SARKAR ACADEMY AWARDS - 2003ல் சிறந்த நடிகராக அன்பே சிவம் படத்துக்காக கமலையே தேர்ந்தெடுத்திருந்தேன். இதை குறிப்பிடக் காரணம் தெளிவான தர்க்கத்துடனேயே என் நிலைப்பாடு அமைந்திருக்கிறது என‌ உணர்த்தத்தான்.

நான் இதுவரை குருதிப்புனல், நாயகன், இந்தியன் போன்ற படங்களை கிட்டதட்ட தலா இருபது முறையாவது பார்த்திருப்பேன் (பாய்ஸ் படத்தை அது வந்த புதிதில் முப்பது முறை பார்த்தேன்). ஆனால் கமல் சிலாகிக்கும் அன்பே சிவம் படத்தையும் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தையும் என்னால் இரண்டாவது முறை கூட முழுதாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. அதற்கு ஒரே காரணம் அவற்றின் சுவாரசியக் குறைவே. தவிர கமல் என்கிற தரமான திரைக்கதையாசிரியனின் தீவிர ரசிகன் என்கிற வகையிலும் இதை நான் விமர்சன நேர்மையுடன் முன்வைக்கிறேன்.

இந்த காரணத்துக்காகவே அன்பே சிவம் படத்தை நான் நிராகரிக்கிறேன்.

பின்குறிப்புக‌ள்:
  1. அன்பே சிவம் படம் சொல்லும் கருத்து நன்றாகயிருக்கிறது என்பவர்களையாவது மன்னிக்கலாம். ஆனால் அப்படம் சுவாரசியமாக இருக்கிறது என்பவர்கள் நிச்சயம் பொய் சொல்லுகிறார்கள் அல்லது...
  2. காக்க...காக்க... வந்த புதிதிலேயே அதை குருதிப்புனல் படத்துடன் ஒப்பிட்டு கீர்த்தி சொல்லியிருக்கும் அதே கருத்தை கல்லூரி நண்பர்களிடம் சொன்னேன். என்னைப் பைத்தியகாரன் மாதிரி பார்த்தார்கள்.

Comments

vichhhu said…
ellam sari SAKA but neengha BOYS padathai 30 thadavai paarthen nnu soneenghalae adhuthaan kumattikittu varudhu

Anbudan
Viswanathan
vichhhu said…
ellam sariSAKA

But BOYS padathai 30 thadavai paarthennu solreengha paarungha adhudhaan kumatikkittu varudhu
Keerthi said…
Machi adhae dhaan...I wud hav seen boys more than 30 times...kadhal,gilly...I hav seen all the movies u mentioned as racy more than a few times...and mumbai xpress...haven't seen the movie fully...went out of the theater within the first few mins...

Well, I would watch Anbe Sivam for the rationality of the story itself,besides Kamal acting With all the irrational people raving about godmen and religion, the story was different, even it was not racy.

And in kurudhi punal, you don't have jyothika, songs and a happy ending thats y. Trust me, Kurudhi Punal is good...same with mahanadhi

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி