தேர்தலும் 49-Oவும்

இன்று இந்த க்ஷணம் இந்தியா முழுக்க 124 பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வாகுப்பதிவு வெற்றிகரமாய் நட‌ந்தேறியிருக்கும். நியாயமாய்ப் பார்த்தால் இப்பதிவு குறைந்தபட்சம் நேற்றே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் தேர்தலில் வாக்களிப்பது பற்றிய ஒரு முக்கிய விஷயம் இது. ஆனாலும் பரவாயில்லை. இது தமிழில் எழுதப்படுவதாலும் த‌மிழ் நாட்டின் தேர்தல் தேதி மே 13 தான் என்பதாலும் இன்னமும் தாமதமாகிவிடவில்லை.

ஓட்டுப்போடுவது எந்த இந்தியக் குடிமகனும் தவிர்க்கவே கூடாத ஒரு ஜனநாயகக்கடமை. உதயசூரியன் - இரட்டை இலை விசுவாசிகளுக்கும், குவாட்டர் - கோழி பிரியாணி விசிறிகளுக்கும் பிரச்சனையில்லை; அவர்களின் ஓட்டை வாக்கோ நாக்கோ எளிதாய் தீர்மானித்து விடும். ஆனால் நீங்கள் நல்லவராய் இருந்து, கூடவே கொஞ்சம் யோசிப்பவராகவும் இருந்து விட்டால் பிரச்சனை தான். யாருக்கு ஓட்டு என்ற அடிப்படையான குழப்பம் ஏற்படும்.

நீங்கள் யோசித்து முடிவு செய்வதற்குள் தேர்தல் முடிந்து விடும். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் அரை மணி நேரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையரையே அதிர்ச்சி அல்லது ஆச்சரியப்படுத்தும் வகையில் பதிவாகும் 30 சதவிகிதம் வாக்குகளில் உங்கள் ஓட்டை வேறு யாராவது நிச்சயம் போட்டு விடுவார்கள். வேறொருவர் பிள்ளைக்கு உங்கள் இனிஷியலை வழங்கும் வெள்ளந்தி வள்ளன்மைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

சரி. விஷயத்திற்கு வருகிறேன். 49-O பற்றி இப்போது பரவலாய் நிறையப்பேர் பேசுகிறார்கள். குறிப்பாய் தமிழகத்தில் இது பற்றிய‌ கவனிப்பை ஏற்படுத்தியதில் எழுத்தாளர் ஞாநிக்கு கணிசமான பங்கு உண்டு. ஆனால் 49-Oயின் பிரச்சனைகள் மற்றும் பலன்கள் பற்றிய போதுமான புரிதலும், விழிப்புணர்வும் இருக்கிறதா என்பது எனக்கு ஐயப்பாடாகவே இருக்கிறது. அதனாலேயே அதைப் பற்றி எழுதும் அத்தியாவசிய‌ தேவை ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.

49-O : அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

49-O என்றால் என்ன?
49-O என்பது தேர்தல் நடைமுறை சம்பந்தப்பட்ட‌ ஒரு விதி. MANUAL OF ELECTION LAW இரண்டாவது வால்யூமில் வரும் THE CONDUCT OF ELECTIONS RULES, 1961ன் நான்காவது பகுதியான Voting in Parliamentary and Assembly Constituenciesல் இரண்டாவது அத்தியாயமான VOTING BY ELECTRONIC VOTING MACHINESல் ப‌க்கம் 99ல் (இந்தி வடிவம் பக்கம் 98ல்) இந்த விதி வருகிறது.

49-O விதி என்ன சொல்கிறது?
"49-O. Elector deciding not to vote.—If an elector, after his electoral roll number has been duly entered in the register of voters in Form 17A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49L, decided not to record his vote, a remark to this effect shall be made against the said entry in Form 17A by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark."

அதாவது?
உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் யாருக்கும் நீங்கள் ஓட்டுப்போட விரும்பவில்லை - அதை நீங்கள் முறைப்படி பதிவு செய்கிறீர்கள். அதாவது நீங்கள் ஓட்டுப்போடவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்துக்கு அறிவிக்கிறீர்கள். அது தான் 49-O.

49-O என்பது ஒட்டாகக் கணக்காகுமா?
இல்லை. 49-O என்பது ஒட்டு அல்ல. ஒட்டுப் போடவில்லை என்கிற கணக்கு. அதாவது non-vote. வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் தகவலறியும் சட்டத்தின் கீழ் எந்தவொரு தொகுதியிலும் இப்படிப் பதிவான non-voteகளின் எண்ணிக்கை எவ்வளவு எனத் தெரிந்து கொள்ளலாம்.

இதை எப்படி பதிவு செய்வது?
உங்கள் வாக்குச்சாவடியின் தேர்தல் அதிகாரியிடம் நீங்கள் 49-O விதியின் கீழ் வாக்களிக்க விரும்புவதை தெரிவிக்க வேண்டும். அவர் 17A என்றழைக்கப்படுகிற‌ வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர் மற்றும் வாக்காளர் எண்ணுக்கு நேராக நீங்கள் எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதன் ஒப்புதலாக உங்களின் கையெழுத்தையோ, கைநாட்டையோ பெற்றுக்கொள்வார். அவ்வளவு தான். மின்னணு வாக்குப்பதிவு இயத்திரத்தில் பதிவு செய்யவோ, வாக்குச்சீட்டில் முத்திரை குத்தவோ, வேறு படிவங்கள் எதுவும் நிரப்பவோ தேவையில்லை.

இதனால் ஓட்டின் ரகசியத்தன்மை உடைபடுகிற‌தே?
ஆம். வாக்குச்சாவடியின் தேர்தல் அதிகாரி, பிற தேர்தல் அலுவலர்கள் முதல் வாக்குச்சாவடியில் குழுமியிருக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் வரை அனைவருக்கும் நீங்கள் வாக்களிக்க விரும்பாதவர் என்பது தெரிந்து போகும். இது நமது வழக்கமான ரக‌சிய ஓட்டளிக்கும் முறைக்கு எதிரானதே. NEGATIVE / NEUTRAL VOTING பற்றிய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையிலேயே இது பற்றிய கவலை வெளியிடப்பட்டிருக்கிறது:
"Although, Rule 49 O of the Conduct of Election Rules, 1961 provides that an elector may refuse to vote after he has been identified and necessary entries made in the Register of Electors and the marked copy of the electoral roll, the secrecy of voting is not protected here inasmuch as the polling officials and the polling agents in the polling station get to know about the decision of such a voter."

49-Oவை ரக‌சியமாக பதிவு செய்ய வழியில்லையா?
தற்போதைக்கு இல்லை. 2004ல் அப்போதைய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரான T.S.கிருஷ்ணமூர்த்தி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தேர்தல் சீர்திருத்தங்களுக்கான வரைவுத் திட்டங்களடங்கிய குறிப்புகளை சமர்ப்பித்தார். அதில், தேர்தலில் பயன்படுத்தப்படுவது வாக்குச்சீட்டோ, வாக்குப்பதிவு இயந்திரமோ எதுவாயினும் அதில் அனைத்து வேட்பாளர்களின் பெயருக்குப் பின் கடைசியாக "None of the above" என்பதையும் பட்டியலில் சேர்ப்பதற்கு சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
"The Commission recommends that the law should be amended to specifically provide for negative / neutral voting. For this purpose, Rules 22 and 49B of the Conduct of Election Rules, 1961 may be suitably amended adding a proviso that in the ballot paper and the particulars on the ballot unit, in the column relating to names of candidates, after the entry relating to the last candidate, there shall be a column None of the above, to enable a voter to reject all the candidates, if he chooses so."
எதிர்பார்த்தது போல் அது அரசாங்கத்தால் கண்டு கொள்ளப்படவில்லை.

வேறு வழிகள் இருக்கின்றனவா?
வேறு சில‌ குறுக்கு வழிகள் உண்டு - நமது பாரம்பரிய முறைகள். தேர்தலில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப் படுகிறதென்றால் எந்தச் சின்னத்திலும் முத்திரையிடாமலோ, ஒன்றுக்கு மேற்பட்ட சின்னத்தில் முத்திரையிட்டோ இதைச் செய்யலாம். ஆனால் இதனால் உங்கள் ஓட்டு செல்லாததாகி விடும்; 49-Oவின் கீழ் non-voteஆக‌ கணக்காகாது. தவிர மின்னணு வாக்குப்பதிவு இயத்திரம் பயன்படுத்தப்படும் இடங்களில் இவ்வழிகள் சாத்தியமில்லை.

49-O பற்றிய சில தவறான புரிதல்கள்?
மக்கள் மத்தியில் 49-O பற்றி பல தவறான நம்பிக்கைகள் நிலவுகின்றன. அவற்றில் முக்கியமான இரண்டைப் பற்றி மட்டும் பார்ப்போம்:
1. உங்கள் தொகுதியில் வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை விட 49-O வாக்குகளின் எண்ணிக்கை அதிகமென்றால், அந்த தேர்தலை செல்லாததாக்கி மறுதேர்தல் நடத்துவார்கள்.
2. அந்தத்தொகுதியில் 49-O வாக்குகளின் எண்ணிக்கையை விட குறைவாக ஓட்டு வாங்கியவர்கள் அனைவரும் தம் வாழ்நாள் முழுமைக்கும் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படுவார்கள்.
இவை இரண்டுமே ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லாத மூட நம்பிக்கைகள்.

49-Oவை விடக் குறைந்த‌ ஓட்டு வாங்கியவர் ஜெயித்தவரா?
ஆம். இதை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் ஒன்று அன்று (தேதியைக் கவனியுங்கள்!) வெளியிட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் (No.ECI/PN/35/2008) தெளிவாக சொல்லிவிட்டார்கள்:
"...and under the law, the candidate who secures highest number of valid votes polled, irrespective of his winning margin, is declared elected. "

அப்புறம் 49-Oவினால் என்ன தான் பயன்?
இரண்டு உடனடி பயன்கள்:
1. நீங்கள் ஓட்டுப்போடவில்லை என்பதை பதிவு செய்து விட்டீர்கள்
2. வேறு ஒருவர் உங்கள் ஓட்டைப் போடுவதைத் தவிர்த்து விட்டீர்கள்.
இவை தவிர சில‌ எதிர்கால விளைவுகள் உண்டு. அது அடுத்த கேள்வியில்.

இதற்காகவா 49-Oக்கு பிரச்சாரம் எல்லாம் செய்கிறார்கள்?
கட்சிகளின் மேல் நம்பிக்கை இழந்தவர்களின் எண்ணிக்கையை ஒருமுகப்படுத்தும் முயற்சியாகவே 49-Oவுக்கு பிரசாரம் செய்கிறார்கள். உதாரணத்திற்கு, உங்கள் தொகுதியில் வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை விட 49-O வாக்குகளின் எண்ணிக்கை அதிகமென்றால், அரசாங்கமோ, தேர்தல் ஆணையமோ, கட்சிகளோ, வேறு அமைப்புகளோ அல்லது பொதுமக்களோ அது பற்றிய பரவலான கவன ஈர்ப்பை ஏற்படுத்தி ஏதாவது சட்ட திருத்தம் அல்லது வேறு வகையான மாற்றத்தை ஏற்படுத்த‌க்கூடும். இது ஒரு சாத்தியம் மட்டுமே. இது வரை இது போல் எங்கும் நடந்ததில்லை. ஆனால் நடப்பதற்கு குறைந்த அளவில் நிகழ்தகவு உண்டு என்பதால் தான் பிரசாரம் செய்கிறார்கள்.

49-Oவினால் ஏதேனும் பிரச்சனை வருமா?
சொல்வதற்கில்லை. நீங்கள் தனியாய் 49-O போடுகிறீர்கள் என்றால் பெரும்பாலும் எந்தப்பிரச்சனையும் வராது என நினைக்கிறேன். ஆனால் இதற்கு ஆள் சேர்க்கிறீர்கள் என்றால் பிரச்சனை வரலாம். உதாரணமாய் 49-Oக்கு பொதுவிடத்தில் பிரச்சாரம் செய்கிறீர்க‌ளென்றால் பிற அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சை வேட்பாளர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பலாம். சமீபத்தில் எங்களூரான ஈரோட்டில் நன்முறையில் இப்படி பிரச்சாரம் செய்தவர்கள் சிலர் வன்முறையை சந்தித்திருக்கிறார்கள். அடித்தவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரிந்த ஈரோட்டுக்காரர்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்.

49-O பற்றி மேலும் தெரிந்து கொள்ள?
"to bring the real democracy in India" என்கிற கோஷத்துடன், சிலர் ஒரு தன்னார்வத் தொண்டுஅமைப்பாக‌ 49-o.org என்று தனி வலைத்தளமே வைத்து நடத்துகிறார்கள். 49-O பற்றிய‌ சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார்கள்

49-O தவிர வேறு என்ன செய்யலாம்?
  1. கட்சிகளிடம் பல குறைகள் அல்லது கறைகள் இருந்தாலும் வேட்பாளர் நல்லவராய் திறமையானவராய் இருந்தால் அவருக்கு ஓட்டளியுங்கள். குறைந்தபட்சம் உங்கள் தொகுதிக்காவது நல்லது நடக்கும்.
  2. புதிதாய் பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும் விஜயகாந்த் போன்றவர்களின் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டளியுங்கள். ஒரு வாய்ப்பு தான் - என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். நல்லது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது.
  3. உங்களுக்கு நன்கு அறிமுகமான அல்லது நீங்கள் தகுதியானவர் என நம்பும் ஏதாவது சுயேச்சைக்கு ஓட்டளியுங்கள். உங்கள் எடை போடும் திறமை சிறப்பனதென்றால், நன்மைகள் ஏதேனும் நிகழக்கூடும்.
  4. ஏற்கனவே ஏதாவது அமைப்பு அல்லது தனியாகவே சமுதாயப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களுக்கு ஓட்டளியுங்கள். அவர்களிடம் கொஞ்சம் மனசாட்சி இருக்கும். அதைச் சுரண்டி நன்மை பெறலாம்.
  5. ரிட்டயர்ட் அரசாங்க உயர் அதிகாரிகள் - உதாரணம்: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் - நின்றால் அவர்களுக்கு ஓட்டளியுங்கள். அவர்களுக்கு அரசு இயந்திரத்தின் அனைத்து நெளிவு சுளிவுகளும் அத்துபடி. அது உதவும்.
  6. இளைஞர்களுக்கு ஓட்டளியுங்கள். இன்னமும் வயதிருக்கிற‌து என்பதால் தம் பாவங்களை ஒத்திப்போடுவார்கள். அவைக்கு செல்வார்கள்; தூங்காமல் கவனிப்பார்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.
  7. படித்தவர்களுக்கு ஓட்டளியுங்கள். அவையின் கேள்வி நேரம் போன்றவற்றில் வாயைத் திறந்து ஏதாவது பேசுவார்கள். எல்லா விஷயங்களையும் பற்றிய குறைந்தபட்ச பொது அறிவு இருக்கும்.
  8. திருமணமாகதவர்களுக்கு குறிப்பாய் குழந்தையில்லாதவர்களுக்கு ஓட்டளியுங்கள். அவர்கள் கொள்ளையடித்து சொத்து சேர்ப்பதற்கான முகாந்திரம் குறைவு. போனால் போகிறதென்றாவது நல்லது செய்வார்கள்.
  9. புதிதாய் நிற்பவர்களுக்கு ஓட்டளியுங்கள். ஆர்வக்கோளாறினால் ஏதாவது நன்மைகள் நடக்கும். அவர்கள் ஊழல் கலையைக் கற்றுத் தேற‌ கொஞ்சம் நாளாகும். அதற்குள் ஏதாவது நல்லது செய்வார்கள்.
  10. பெண்களுக்கு ஓட்டளியுங்கள். மனித இனத்தின் ஆதிகால நேர்மை அவர்களிடம் தான் மிச்சமிருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் பழி பாவங்களுக்கு அஞ்சுவதால் பயத்தினாலாவது குற்றங்கள் குறையும்.
இவை எதுவுமே தேறவில்லையென்றால், 49-Oவைப் பயன்படுத்துங்கள்.

49-Oக்கு கள்ள ஓட்டு போடும் காலம் விரைவில் வரும்.

Comments

இங்கே இங்கிலாந்தில், Single transferable vote என்ற ஒரு முறை உண்டு. இதன்படி ஒவ்வொறு வாக்காளரும் தனக்கான பிரத்யேக வரிசைகிரமப் படியான பட்டியல் ஒன்றை ஓட்டுப் பதிவு செய்ய முடியும். இதை proportional representation through the single transferable vote என்றும் கூறுவர். இதனால் ஓட்டுப்போடுபவர் தனக்கு வேண்டிய கட்சிக்கு எண் வரிசை கொடுத்து ஓட்டுப் போடமுடியும்.

இதனால்

- ஓட்டுகள் வீணாவது இல்லை. நான் அ.தி.மு.கவிற்கு முதல் இடமும்,திமுகக்கு இரண்டாவது,மற்றும் சுயேச்சைக்கு மூன்றாவது கொடுக்க முடியும்.முதல் சுற்று வாக்கெடுப்பில் திமுக அதிக வாக்கு வெற்றால்,அது இரண்டாவதை விட எவ்வளவு வாக்குகள் அதிகம் வாங்கியதோ அதை தொகையில் குறைவாக இருக்கும் கட்சிக்குக் கொடுத்துவிடுவார்கள்.
- இதைப்போல பல சுற்றுக்கள் நடக்கும்.கடைசியில் எந்த கட்சி ஒரு குறிப்பிட்ட quota விட அதிகமிருக்கிறார்களோ அவர்களே ஜெயித்தவர்கள்.
Viki said…
Not this time ppl will use this option much coz of the absence of secrecy to cast ones vote.
May be if the EC brings some separate button in the EVM then many will cast "bravely".coz in the current procedure one has to ask for separate applcn form to cats this vote.The representatives of all political parties will be there in the booth.They ll "Note" down those who casted 49 O and they ll be "seen to".Think i need not xpalin this word..
அவர் பெயர் ஞானியில்லை; ஞாநி (ஞானி என்ற பெயரில் கோவையில் இருக்கும் விமர்சகரைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்).
@ ஜ்யோவ்ராம் சுந்தர்

Thanks..
Changed it as ஞாநி..
மிகவும் உபயோகமான பதிவு. நன்றி.
@ அன்பின் சரவணகார்த்திகேயன் சி.,

அடடா, என்ன அருமையாக சும்மா, பிச்சு பிச்சு எழுதி இருக்கார் பாருங்க. அதுவும் எனக்கு சரியாக 23 நாளுக்கு முன்னால் பாயிண்ட் பை பாயிண்ட்ஆ 49- O வை சும்மா ரவுண்டு கட்டி அடிச்சு இருக்கார். ஆனால் எழுத்தாளாரே உங்க பதிவு 'குடத்தில் இட்ட விளக்காக இவ்வளவு நாள் தெரியாம போச்சே ! இனி மேல் நல்லா மார்க்கெட்டிங் பண்ணுங்க. அப்பதான் உங்கள் கருத்து 'குன்றில் மேல் இட்ட விளக்காக' அனைவருக்கும் வெளிச்சம் தரும். மார்க்கெட்டிங் மிக முக்கியம் அமைச்சரே !

with care & love,

Muhammad Ismail .H, PHD,
Anonymous said…
Good article. Answers many of my questions !!

A big thanx for point no 10 @sweetsudha1

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி