கடிதம்: சின்ன விண்ணப்பம்

அன்பருக்கு வணக்கம்,

உங்கள் இணையதளத்தை வாசித்தேன், உங்கள் தமிழ் எழுத்து நடை மிக அருமை. என் போன்ற சாமானிய வாசிப்பாளனுக்கு மிகவும் பிடித்தது. ஒரே நாளில் பாதிக்கு மேல் வாசித்தாயிற்று.

ஒரே குறை ஆங்கிலத்தில் நிறைய எழுதியுள்ளீர்... அதுவும் மனதை கவ்வும் சில தலைப்புகளில்.

USELESS THINGS IN A MALE இன்னும் பல..... ஆங்கிலம் புரியாமல் இப்படி சொல்லவில்லை, தேடித் தேடி தமிழ் படிக்க ஆரம்பிக்கும் என் போன்றோருக்கு இது ஏமாற்றத்தை தருகிறது.

ஆங்கிலத்தில் படிக்க எத்தனையோ தளம் உள்ளது.... அதை ஏன் நாங்கள் உங்கள் தளத்தில் படிக்கனும்?

தமிழில் நிறைய எழுதுங்கள்......

--
நன்றி,
ஜெயக்குமார்.
மும்பை.

############

ஜெயக்குமார்,

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

நான் பல்வேறு காரணங்களால் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுதினேன் (எழுத்துரு பிரச்சனை அதில் மிக முக்கியமானது. இன்னமும் பலர் லினக்ஸில் என் தமிழ் பதிவுகளை படிக்கமுடியவில்லை என்று சொல்கிறார்கள்). தவிர துரதிர்ஷ்டவசமாய் அப்போது என்னைப்படிக்க ஆரம்பிததவர்கள் பலர் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் - அதுவும் பெண்கள் ;)

அப்போது எழுதினால் படிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு இரண்டாம் கருத்தே இல்லை (இப்போதும் அப்படித்தான் - ஆனால் அதற்கு நான் கொடுக்கும் முக்கியத்தும் மட்டும் குறைந்துள்ளது). அதனால் அப்போது படிக்க ஆரம்பித்தவர்களை தக்கவைத்துக்கொள்ள‌ விரும்பி ஆங்கிலத்திலேயே தொடர்ந்து எழுதினேன். அது சுலபமாகவும் இருந்தது.

எனக்கு, என் எழுத்துக்கு தனிப்பட்ட முறையில் அது நன்மையாகவே இருந்தது. நான் முதலிலேயே தமிழில் எழுத‌ ஆரம்பித்திருந்தால் ஆங்கிலத்த்தில் எழுதுவதைப்பற்றி யோசித்திருக்கக்கூட மாட்டேன். அப்படி நடந்திருந்தால், எப்போதுமே எனக்கு மிகப்பிடித்த, எழுத உவப்பாயிருக்கும் SARKAR'S PHILOSOPHY போன்ற விஷயங்களை நான் எழுத வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.

பின்பு HiGopi.Comன் தகடூர் 2.0 coverterஐ வைத்து தமிழ் எழுத ஆரம்பித்தேன் (Bloggerல் தமிழெழுத ஏனோ அவ்வளவாய் பிடிப்பதில்லை). தகடூருக்கே புதிய software update வந்தாயிற்று. ஆனால் எனக்கு இன்னும் அதே 2.0 தான் (சில விஷயங்களை மாற்ற மனம் வருவதில்லை - மென்பொருள் கூட விதிவிலக்கல்ல. மற்றொரு உதாரணம் MS OFFICE 2003).

தமிழில் எழுத ஆரம்பித்த புதிதில் பதிவுகளை 80% ஆங்கிலம் 20% தமிழ் என்று ஆரம்பித்து, மெதுவாய் 50% ஆங்கிலம் 50% தமிழ் என்று மாறி, இப்போது 20% ஆங்கிலம் 80% தமிழ் என்று வந்து நிற்கிறது. ஆனால் நான் தமிழில் எழுத ஆரம்பித்து குறுகிய காலமே ஆவதால் பதிவுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை விகிதம் வேறு மாதிரி தெரிகிறது. விரைவில் மாறிவிடும்.

SARKAR'S PHILOSOPHY போன்றவற்றை நான் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதவே விரும்புகிறேன். தமிழை விட ஆங்கிலமே அந்த வடிவத்துக்கு நன்கு ஒத்துழைப்பதாக எனக்குத்தோன்றுகிறது. இப்போது கூட தமிழில் அதிகம் எழுதுவதற்கு காரணம், தமிழ் மொழி மீதுள்ள பற்றோ, தமிழர்கள் நிறையப்பேர் படிக்கவேண்டும் என்கிற ஆசையோ அல்ல.

ஆங்கிலத்தைக்காட்டிலும் தமிழே எனக்கு நன்கு எழுத வரும் என்கிற என் நம்பிக்கை மட்டும் தான் அதற்கு காரணம். என்னைப் பொறுத்தவரை, மொழி எனக்கு ஒரு வாகனம் மட்டுமே. நான் வைத்திற்கும் பொருள் எதில் சவாரி செய்தால் பொருத்தமாயிருக்கும் எனத்தோன்றுகிறதோ, அதில் உட்கார வைக்கிறேன்; அது பயணிக்கிறது. அவ்வளவே.

பின்குறிப்பு:
"ஆங்கிலத்தில் ஏன் எழுதுகிறீர்கள்?" என்கிற உங்கள் கேள்விக்காவது இது போல் விரிவாய் என்னால் பதிலிறுக்க முடிகிறது. "ஆங்கிலத்தில் ஏன் எழுதுவதில்லை?" என்று கேட்கும் என் பழைய வாசகர்களுக்கு என்னிடம் பதிலே இல்லை. மழுப்பலாய் ஒரு புன்னகை மட்டும்.

- CSK

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்