செல்லுலாய்ட் போதி

ஒரு சனிக்கிழமை, அந்த வார இறுதியில் வெளியான ஒரு திரைப்படத்தை பெங்களூரிலுள்ள ஒரு மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கில் மூன்று பேர் மட்டும் அமர்ந்து பார்த்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். அது தான் நடந்தது. அந்த சனிக்கிழமை இன்றைய தினம். அந்த திரையரங்கு Fame Lido. அந்த மூவரில் ஒருவன் அடியேன். அந்தத் திரைப்படம் "Siddharth - The Prisoner".


திறமையான திரைக்கதை (Pryas Gupta), அழகான ஒளிப்பதிவு (Mrinal Desai), நேர்த்தியான பின்னணி இசை (Sagar Desai), கச்சிதமான வசனங்கள் (Hitesh Kewalia), உறுத்தாத‌ உடையமைப்பு (Isha Ahluwalia, Jeneva Talwar), யதார்த்தமான‌ நடிப்பு (Rajat Kapoor, Pradeep Kabra, Pradip Sagar, புதுமுகம் Sachin Nayak) என படம் எல்லா முனைகளிலும் அள்ளிக் கொண்டு போனது. இயக்குநர் மற்றும் தயாரிப்பளரான Pryas Guptaவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமெனில், தேவையற்ற காட்சியென்று எதுவுமே படத்தில் இல்லை. எல்லாக்காட்சிகளுமே பார்வையாளனுக்கு ஏதாவது உணர்த்துகின்றன அல்லது கதையை நகர்த்துகின்றன. இன்னொரு விஷயம் படத்தின் மொத்த வசனங்களையும் ஒரு A4 சைஸ் தாளில் அடக்கி விடலாம். மற்றபடி எல்லாமே காட்சிகள், காட்சிகள், காட்சிகள். திரைக்கதை வகுப்பெடுக்க தாராளமாய் இப்படத்தைப் பயன்படுத்தலாம்.

ஆசையை அறுக்க வேண்டும் என்ற‌ ரிக் வேத மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கும் படம், சிறையிலிருந்து மீளும் ஓர் எழுத்தாளனின் வாழ்க்கைச் சம்பவ‌ங்களினூடாகப் பயணித்து, கடைசியாக அதே கருத்தை வலியுறுத்தும் புத்தரின் வாக்கோடு நிறைவடைகிறது. மொத்தத்தில் இந்தப்படம் எனக்கு மிக அற்புதமானதொரு அனுபவத்தைக் கொடுத்தது. நல்ல சினிமாவை விரும்பும் அனைவருக்கும் நான் இப்படத்தை சிபாரிசு செய்கிறேன்.

பின்குறிப்புகள்:
  1. இது போன்ற படங்களை மக்கள் ஏன் கண்டு கொள்வதேயில்லை என சுத்தமாய்ப் புரியவில்லை.
  2. மூன்று பேருக்காக‌ படத்தை ஓட்டிக்காட்டிய Fame Lido நிர்வாகத்தினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Comments

// இது போன்ற படங்களை மக்கள் ஏன் கண்டு கொள்வதேயில்லை என சுத்தமாய்ப் புரியவில்லை. //

இது சினிமாவில் இருக்கும் ஜாம்பவான்களுக்கே புரிவதில்லையே...

நமக்கு எப்படி புரியும்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி