சரியா சாரு?

"ஏன் ஐயா, எழுத்தாளன் என்றால் உங்கள் வீட்டு வேலைக்காரனா, நீங்கள் கூப்பிட்ட இடத்துக்கு ஓடி வருவதற்கு? அதோடு, இதுதான் ஒரு எழுத்தாளனை ஒரு கூட்டத்துக்கு அழைக்கும் முறையா? என்னுடைய இந்த மனிதாபிமானப் பண்பைத் தங்களுக்குச் சாதகமாக நினைத்துக் கொண்டு பலரும் நம்முடைய தலைக்கு மேல் ஏறிக் கொண்டு நம்மைக் கழுதை மேய்க்கப் பார்க்கிறார்கள்."

இது யார் யாரிடம் எத‌ற்காக சொன்னது என்பதை விவரிக்கும் முன் இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்:

1. கீழ்வரும் பிரபல பதிவருக்கோ, மெரினா கடற்கரை சென்னை பதிவர் கூட்டத்துக்கோ நான் எவ்வகையிலும் தொடர்புடையவன் அல்லன். அதனால் அவருக்கு ஆதரவாய்க் கொடி பிடிப்பதல்ல இப்பதிவின் நோக்கம்.
2. விமர்சனங்களும் வேறுபாடுகளும் இருந்தாலும் சாரு நிவேதிதாவை கல்லூரி நாட்களிலிருந்தே தொடர்ந்து படித்து வரும் தீவிர வாசகன் நான். அதனால் அவரின் மேல் சேற்றை வாரித் தூற்றுவதுமல்ல இதன் நோக்கம்.

விஷயம் மிக எளிமையானது. குறிப்பிட்ட அந்த பிரபல பதிவர் இணைய அரட்டைப் பெட்டியில் சாருவுட‌ன் கதைத்துக்கொண்டிருக்கையில் இன்று நடைபெறவிருந்த மெரினா கடற்கரை சென்னை பதிவர் கூட்டத்துக்கு சாருவை அழைத்திருக்கிறார். அவ்வளவு தான். இதற்கான சாருவின் அதீத எதிர்வினையாக அவரது இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் "ரஜினிகாந்தை அழைத்தீர்களா?" என்ற பதிவின் சில பகுதிகளே முதல் பத்தியில் தரப்பட்டிருப்பது.

இதற்கு முன் பல சந்தர்ப்பஙளில் (உதா: தசாவதாரம்) சாருவுக்கு எதிர்வினையாற்ற நினைத்தும், என் வேலைப்பளு ம‌ற்றும் சோம்பேறித்தனம் காரணமாக தள்ளிப்போய் இப்போது இப்படியொரு நிகழ்வில் அவரைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இப்பதிவு எனக்கு நியாயம் எனத்தோன்றிய‌ எதிர்வினை மட்டுமன்று. "கூட்டத்திற்கு ரஜினிகாந்தையும் அழைத்திருக்கிறீர்களா? அப்படியானால் நானும் வருகிறேன். சரியா?" என்று வழக்கமான அங்க‌த‌த்துடன் அப்பதிவை முடிக்கும் அவரது "சரியா?" என்ற கேள்விக்கான பதிலும் கூட.

ஒரு படைப்பாளி தன் தளத்தில் தான் மதிக்கும் மற்றொரு படைப்பாளியை (அல்லது குறைந்தபட்சம் அங்கே பிரபலமாக இருக்கும் ஒரு படைப்பாளியை) தான் நடத்தும் அல்லது பங்கேற்கும் ஒரு கூட்டத்துக்கு நேரிலோ, கடிதத்திலோ, மின்-அஞ்சலிலோ, of course இணைய அரட்டைப் பெட்டியிலோ அழைப்பது உலகம் முழுக்க நடக்கும் மிகச்சாதாரணமான ஒரு நிகழ்வு. இங்கும் அப்பதிவர் இதே அடிப்படையிலேயே சாருவை அழைத்திருப்பதாகத் தெரிகிறது. இதில் சாருவை எரிச்சல்படுத்தும் கண்ணி எங்கே ஒளிந்துள்ளது என இதுவரை என் சிற்றறிவுக்கு எட்டிய பாடில்லை.

விருப்பமில்லையெனில் நேரடியாக அப்போதே அப்பதிவரிடம் புனிதம் கெடாமல் ஒரு மெல்லிய (அல்லது வல்லிய!) மறுப்பை சாரு தெரிவித்திருக்கலாம். அதை விடுத்து இணையதளம் வாயிலாக, பலர் பார்க்க‌, முதுகுக்கு பின்னால் இப்படி வெறுப்பை உமிழ்ந்திருப்பது எவ்வகையில் நியாயம்? (குறைந்தபட்சம் அவருடைய ஆளுமைக்கு எவ்வாறு பொருந்தும்?) என எனக்கு புரியவில்லை. மன்னிக்கவும்! இச்செயலில் அவரது அனாவசிய அலட்டல் தான் தெரிகிறது.

சமதர்மத்தை மிக நேர்மையுடன் ந‌ம்புபவன் நான். என்னை பொறுத்தவரை சாருவை மட்டுமல்ல - ‍அவரே உச்சபட்ச பிரபலமாய் ந‌ம்பிக் குறிப்பிட்டிருக்கும் ரஜினியைக்கூட இணைய அரட்டைப் பெட்டியில் ஒரு விழாவுக்கு அழைப்பது இந்தியா என்ற ஜனநாயக தேசத்தில் அரசியல் சாசனத்தின் எப்பிரிவின் கீழும் குற்ற‌மில்லை (Practical difficulties apart). மாறாக த‌ன்னுடைய மந்தைவெளி அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து வெற்றிலை பாக்குடன் அப்பதிவர் அழைப்பாரென்று சாரு எதிர் பார்த்திருந்தால் அது தான் குற்றம் - in fact, a comedy (இதுவும் அவரிடம் கற்றது தான்).

"மதிப்புக்குரிய ஒரு கவிஞனையும் நேற்றே எழுதத் துவங்கியிருக்கும் ஒரு இளைஞனையும் தராதரம் பார்க்காமல் சமமான அளவிலேயே பாவித்துப் பழகுவேன். ஜூனியர், சீனியர் என்றெல்லாம் பார்த்துப் பழகுவது எனக்கு வழக்கமில்லை" என்கிறார் சாரு. அப்படி தெரியவில்லை. அவர் அப்பதிவரை சக படைப்பாளியாக மட்டுமல்ல; மனிதனாகக்கூட மதிக்கவில்லை. ச‌க மனிதனை மதிக்கத்தெரியாத எவரும் சிறந்த படைப்பாளியாக முடியாது என்பது என் மிகத்தாழ்மையான அபிப்ராயம்.

சென்னையில் ஒருமுறை தி.நகர் நியூ புக்லேண்டில் உங்களைப் பார்த்தும் பேசாமல் நகர்ந்த என் தயக்கத்தைப் பற்றிய மின்-அஞ்ச‌லுக்கு "oh i see. u cd have talked to me. " என்று பதிலிறுத்த சாரு நிவேதிதாவா நீங்கள்? நம்ப முடியவில்லை. இந்த நிகழ்வினால் சாருவின் எழுத்தின் பால் யான் கொண்டிருக்கும் காதலில் எவ்வித சமரசமும் நிகழவில்லை. ஆனாலும் இதயம் வலிக்கிறது. மனதுக்கு நெருக்கமாய் நாம் நினைக்கும் ஒருவரின் நல்பிம்பம் கலைந்து போகையில் ஏற்படும் வலி.

Comments

Anonymous said…
http://podian.blogspot.com/2008/10/blog-post_12.html
Anonymous said…
அவர் அப்பதிவரை சக படைப்பாளியாக மட்டுமல்ல; மனிதனாகக்கூட மதிக்கவில்லை. ச‌க மனிதனை மதிக்கத்தெரியாத எவரும் சிறந்த படைப்பாளியாக முடியாது என்பது என் மிகத்தாழ்மையான அபிப்ராயம் That's simply great. That guy thinks too much of himself. Write a mail in a woman's name pretending to admire his writing... tell me if he didn't respond to you the next day!
Natraj.P said…
ஒரு சாதாரண குடிமகன்,அவன் வீட்டு விருந்துக்கு கூப்பிட்டதை அவமானமாகக் கருதும் அரசியல்வாதி போலாகிவிட்டார். வருந்ததக்க விசயம்!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி